2022 – முக்கிய சிறுவர் நாவல்கள்

Book_Recommend

2022 ஆம் ஆண்டில் வெளிவந்த முக்கியமான சில சிறுவர் நாவல்களின் தொகுப்பு இது:-

நீலப்பூ – சிறுவர் நாவல்

ஆசிரியர்:- விஷ்ணுபுரம் சரவணன் வானம் பதிப்பகம், சென்னை-89. (செல் +91 91765 49991) விலை ரூ 80/-.

நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிப்பிரிவினையைப் பேசும் சிறுவர் நாவலிது. செல்வி அத்தை என்ற கதாபாத்திரம் மூலமாகக் கீர்த்தி எனும் சிறுமி சாதிப்பிரச்சினை குறித்துத் தெரிந்து கொள்ளும் விதமாக ஆசிரியர் இந்நாவலைப் படைத்திருக்கிறார்.  9+ சிறுவர்க்கான நாவலிது.

“சாதியவாதிகளால் தனது வாழ்விடமும், கனவுகளும் சூறையாடப்பட்ட ஒரு சிறுமியிடம், அந்த வன்முறை ஏன், யாரால் எதற்காக நடத்தப்பட்டது என்பதை ‘நீலப்பூ’ நாவல் மூலம் பேசிப் பார்த்திருக்கிறார், விஷ்ணுபுரம் சரவணன்” என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

Perunkana_pic

பெருங்கனா – சிறுவர் நாவல்

ஆசிரியர் – விழியன்புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18  விலை ரூ 80/-.

“கனவு காணுங்கள்” என்று கலாம் கூறினார்; ஆனால் கனவுகளுக்கு விதைகள் தேவை; அந்த விதைகள் எங்கே கிடைக்கும்? விதைப்போம் அழகிய மரங்களாக்குவோம்” என்கிறார் ஆசிரியர், தம் முன்னுரையில்.

இந்நாவலில் காரி என்ற சிறுவனின் கனவும், அதை நோக்கிய அவன் பயணமும், படிப்படியான முன்னேற்றமும் விவரிக்கப்பட்டுள்ளன.  மாமாவின் உதவியுடனும், செந்தாழையின் வழிகாட்டுதலுடனும் நூலகத்திற்குப் புது புத்தகங்கள் நன்கொடை வாங்குவது, ஒலிப்பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து, மக்களை நூலகம் நோக்கி வரவழைப்பது எனக் காரி தொடர்ந்து உற்சாகமாக உழைக்கின்றான். காரி கண்ட பெருங்கனா எப்படிச் சாத்தியமாகின்றது? என்பதை இந்நாவல் சுவையாகவும், விறுவிறுப்பாகவும் விவரிக்கின்றது. 9+ சிறுவர்கள் வாசிக்க ஏற்ற நாவல்.

Kattai_viral

கட்டை விரலின் கதை – இளையோர் நாவல்

ஆசிரியர் – உதயசங்கர்வானம் பதிப்பகம், சென்னை-89 (செல் +91 91765 49991) விலை ரூ 100/-.

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல். 

அர்ச்சுனனை மிஞ்சிய வில்லாளி இவ்வுலகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காகத் துரோணர் எப்படி நயவஞ்சகத்துடன் சூழ்ச்சி செய்து, மிரட்டி அவன் கட்டை விரலை வாங்குகிறார்? துரோணரின் தந்திரத்தால், அவனும் மலைவாழ் பழங்குடிகளும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றார்கள்? என்பதை இந்நாவல் விறுவிறுப்புடன் விளக்குகிறது.

காலங்காலமாகக் காடுகளில் வசிக்கும் பழங்குடியினருக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்குச் சாட்சியாக, ஏகலைவனின் கட்டை விரல் கதை விளங்குகிறது. வாசிக்கும் சிறுவர்களின் மனதை நெகிழச் செய்யும் கதை. 12+ சிறுவர்கள் வாசிக்க ஏற்றது.

பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல்

ஆசிரியர் – ஞா.கலையரசிவானம் பதிப்பகம், சென்னை-89  (செல் +91 91765 49991) விலை ரூ 80/-.

ஆகாய கோட்டையில் அரசர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் ஒன்று காப்பதாக, ஆதவனும், அவன் நண்பர்களும் கேள்விப்படுகின்றனர். ஆடு மேய்க்கும் சிறுவன் வேலுவின் வழிகாட்டலுடன், அவர்கள் புதையலைத் தேடிச் செல்கின்றனர்.

அவர்களின் அந்தச் சாகசப்பயணம் வெற்றி பெற்றதா? புதிர்களை அவர்கள் எவ்வாறு விடுவித்தார்கள்? அவர்களால் பூதம் காத்த புதையலைக் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பனவற்றை, இந்நாவல் சுவாரசியமாக விவரிக்கிறது. கையில் எடுத்தால், கீழே வைக்க விடாத அளவுக்கு விறுவிறுப்பும், வேகமும் கொண்ட நாவல்.

கதையின் வழியே இயற்கை, சூழலியல், மலையில் வாழும் சில உயிரினங்கள் குறித்த தகவல்கள், நட்பின் மகத்துவம், பகிர்ந்துண்ணலின் அவசியம், தமிழின் மேன்மை, அன்றாட அறிவியல் ஆகியவற்றைச் சிறுவர்கள் தெரிந்து கொள்ள உதவும் இளையோர் நாவல்.   9+ சிறுவர்க்கானது.

கடலுக்கு அடியில் மர்மம் – சிறுவர் குறுநாவல்

ஆசிரியர் – சரிதா ஜோபுக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18. விலை ரூ 80/-

கடலில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை, அங்கு வாழும் மீன்கள் வழியாகச் சிறுவர்க்குச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்தாண்டு வாசக சாலையின் சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான விருதை வென்ற நூலிது.

“கதை வடிவில் கடலின் அறிவியல் உண்மைகளைக் குழந்தை மொழியில் பேசும் ஈரோட்டுக் கதையின் சிறப்பான பங்களிப்பு” என்கிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் அவர்கள்.   

 காயாவனம் – சிறார் நாவல்

ஆசிரியர் வா.மு.கோமுவெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18 விலை ரூ 70/-

காயாவனம் என்ற காட்டின் மருத்துவர் ஒரு நரி. கரடிக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தன் சிகிச்சை மூலம் சரிப்படுத்துகிறது நரி. அதற்கு உதவியாக மல்பேரி ஆடு தின்ன வேண்டும் என்று நரி கரடியிடம் கேட்கிறது.

அந்த ஆட்டைப் பெற கரடி எப்படியெல்லாம் முயல்கிறது என்பதையும், இறுதியில் நரிக்கு ஆடு கிடைத்ததா என்பதையும், சுவாரசியமாக விளக்கும் சிறார் நாவல். 9+ சிறுவர்கள் வாசிக்கலாம்.

 நீலமலைப் பயணம்இளையோர் நாவல்

ஆசிரியர் ஞா.கலையரசிவெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்,சென்னை-18. விலை ரூ 90/-

உலகிலிருந்தே அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாவரத்தைத் தேடி நான்கு நண்பர்கள் நீலகிரிக்குச் சாகசப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஏற்படும் இடர்கள், நீலகிரி காட்டில் ஏற்படும் தடைகள், அவற்றையெல்லாம் நண்பர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அழிந்து போனதாகக் கருதப்பட்ட அந்தத் தாவரத்தைக் கண்டுபிடித்தார்களா? என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது, இந்நாவல்.  சாகசங்களும், அறிவியல் உண்மைகளும், சமூகப்பார்வையும் கலந்த அற்புதமான நூல். சிறார்கள் கையில் எடுத்தால், கீழே வைக்க விடாத வேகமும்,விறுவிறுப்பும் கொண்ட நாவல். தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் துப்பறியும் அறிவியல் புதினம் என்ற வகைமையில் வெளிவரும் முக்கியமான நூல் இது”.   12+ சிறுவர்க்கானது.

அந்நிய மரங்களால் நீலகிரியின் மண்ணின் தாவரங்களுக்கு ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்பு, தோடர் வாழ்வியல் ஆகியவற்றையும் இந்நாவல் பேசுகின்றது.

Share this: