1650 முன்ன ஒரு காலத்திலே…

Munna_Oru_Kalathile_pic

இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது.  வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள்.

புத்தகம் வாசிக்கும் சிறுவர்க்கு மகிழ்ச்சியும், கேளிக்கையும் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, ஆழமான உணர்வுகளையும் தரவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது.    

நம் பள்ளிப் பாடத்திட்டங்களில் இருக்கும் வரலாறு புத்தகங்கள், பொதுவாக வறட்டுத் தன்மையுடனும் உப்பு சப்பில்லாமலும் இருக்கும்.  அதனால் பெரும்பாலான மாணவர்க்கு வரலாறு பாடத்தில் பெரிதாக ஆர்வமிருப்பதில்லை.  இது போன்ற நாவல்கள் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி உண்மை நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும், அவை சம்பந்தமான மேலும் விபரங்களை அறிந்து கொள்ளவும் சிறுவர்க்கு ஊக்கமளிக்கும். வரலாறு நமக்கு முக்கியமல்லவா?

காந்திஜி கத்தியின்றி இரத்தமின்றி அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து போராடி இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார் என்பது தான், பொதுவாக நம் பள்ளியில் வரலாறு சொல்லும் பாடம்.  ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொட்டுச் சென்றிருப்பார்கள்.  எனவே இந்திய விடுதலைக்கு எத்தனை பேர் இரத்தம் சிந்தி, தம் உயிரைத் தியாகம் செய்து இருக்கிறார்கள் என்ற உண்மையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டியது, சிறார் எழுத்தாளர்களின் தார்மீகக் கடமையாகின்றது.

ஏற்கெனவே இரத்தக்கறை படிந்த இந்தத் துயர நிகழ்வு பற்றி, வாசிக்கும் பெரியவர்கள் அறிந்திருந்தாலும், அடுத்து அது தான் நடக்கப் போகின்றது என்று தெரிந்திருந்தாலும், ஒரு குழந்தையின் விவரிப்பில், இக்கதையை வாசிக்கும் போது மனம் பதற்றமாவது உறுதி.  நிகழ்வு நடந்த அந்த இடத்தைப் பற்றியும், அந்தக் காட்சியைப் பற்றியும் சிறுமி செய்யும் துல்லிய விவரிப்பு, நேரடிக் காட்சி போல மனதில் படிந்து, மனத்தைக் கனத்துப் போகச் செய்யும்.  எத்தனை குண்டு வெடித்தது என்ற விபரமும் இதில் உள்ளது.

இந்திய விடுதலைக்கு நாம் கடந்து வந்த பாதையையும்,  அதற்குக் கொடுத்த விலையையும் கண்டிப்பாக நம் சிறுவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  இந்நாவல் குழந்தைகளைக் கண்டிப்பாக வரலாற்றை நோக்கி வாசிக்கத் திசை திருப்பும் என்பதில் சந்தேகமில்லை.

சிறுவர்களுக்கு அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்விழியன்
வெளியீடுவானம் பதிப்பகம்,சென்னை-89  (+91) 91765 49991
விலை₹80/-
Share this: