வாசிப்பியக்கத் தொடக்க விழா!

Vassippu_pic

வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது.

முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட சுய வாசிப்பு (Independent Reading), இந்தியாவில் முதன்முதலாக நம் தமிழ்நாட்டில் 53 புத்தகங்களுடன், வாசிப்பு இயக்கத்தின் Pilot நிகழ்வாகத் துவங்குகிறது.

இந்நாள் கல்விச் சிந்தனையாளர் முனைவர் வே. வசந்தி தேவி, பேராசிரியர் ச.மாடசாமி, தோழர் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்ட கனவு, மெய்ப்படும் நாளுங்கூட. ஓராண்டாக இதற்காகக் கடுமையாக உழைத்த அனைவருக்கும், இது கொண்டாட்டமான நாள்.

கொரோனா காலத்துக்குப் பின் அரசுப்பள்ளி மாணவர்கள் வாசிப்புத் திறனில் மிகவும் பின்தங்கியுள்ளனர். ஆறாம்,ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குக் கூட, அரிச்சுவடி சரியாகத் தெரியவில்லை என்று களநிலவரம் சொல்கின்றது. வாசிக்கத் தெரியாமலிருப்பதே பள்ளிகளிலிருந்து குழந்தைகள் படிப்பைப் பாதியில் நிறுத்த, முக்கிய காரணமாகின்றது.

வாசிப்பில் தடுமாற்றத்தைச் சரி செய்ய, பாடப்புத்தகம் மட்டும் போதாது; புத்தகத்தின் மொழியிலும், உள்ளடக்கத்திலும் எளிமையும் மகிழ்ச்சி(Fun)யும் தேவை; அந்த வகையில் கதைப் புத்தகமே வாசிப்புத் திறனை மேம்படுத்தும் ஆகிய காரணங்களைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 53 கதைப்புத்தகங்கள், குழந்தைகளை ஈர்க்கும் விதத்தில், வண்ண ஓவியங்களோடு, உருவாக்கப்பட்டுள்ளன.

கதைகளை அச்சிடுவதற்கு முன், குழந்தைகளிடம் வாசிக்கத் தந்து அவர்கள் சிரமப்படும் சொற்களைக் கண்டறிந்து, அவற்றை மாற்றியமைத்து, இந்நூல்கள் உருவாகியுள்ளன. இதற்காக ஓராண்டாகத் தோழர்கள் கூட்டாக உழைத்து, அரும்பணி ஆற்றியுள்ளனர். அவரகள் அனைவருக்கும், என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

குழந்தைகளின் வயதைக் கணக்கில் கொள்ளாமல், அவர்கள் வாசிப்புத் திறனை அடிப்படையாக வைத்து, நுழை,நட,ஓடு,பற என நான்கு வகை நூல்கள் வெளியாகியுள்ளன.

தட்டுத்தடுமாறி வாசிக்கும் குழந்தையைத் தன்னம்பிக்கையுடன் வாசிக்க வைப்பதே, இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இந்த பைலட் வாசிப்பியக்கம் முழு வெற்றிப் பெற்று, தமிழ்நாடு முழுவதும் துவங்கி வெற்றி பெற்றிட, அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்!

Share this: