வல்லினச்சிறகுகள் மின்னிதழில், ஞா.கலையரசியின் நேர்காணல்.

kalai interview vallinasiragugal pic

‘வல்லினச்சிறகுகள்’ அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இணைய இலக்கிய இதழ். பெரும்பாலும் பெண்களே நடத்தும் இலக்கிய இதழ் என்ற சிறப்பு இதற்குண்டு.  கவிதை, கட்டுரை, நேர்காணல், புத்தக மதிப்புரை, சினிமா விமர்சனம் எனப் பல்வேறு சிறப்பு ஆக்கங்கள் இதில் இடம்பெறுகின்றன.  

சுட்டி உலகத்தின் ஆசிரியர்களுள் ஒருவரான ஞா.கலையரசி அவர்கள்,  ஆகஸ்ட் 2021 ல் ஓராண்டு நிறைவு சிறப்பு இதழாக வெளிவந்த ‘வல்லினச்சிறகுகள்’  இதழில், சிறார் இலக்கியம் குறித்து அளித்த பேட்டியை இங்கு வெளியிடுவதில் மகிழ்கின்றோம்.  நேர்காணலைச் சிறப்பாகத் தொகுத்து வெளியிட்டிருக்கும் திருமதி வித்யா மனோகர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இனி நேர்காணல் வருமாறு:-

குழந்தைகளே!

உங்கள் உதட்டில் ஒரு வார்த்தை மலர்ந்தால்

இயற்கை ஏழு ரோஜாக்களாக

அதை உச்சரிக்கும்

ஈரோடு தமிழன்பன்

மென்மனத்துச் சிறார்கள் மேன்மையுறும் வண்ணம், தம் எழுத்துக்களால் அவர்களை வழிநடத்தும் படைப்பாளி திருமதி கலையரசி பாண்டியன் அவர்களை இம்மாத நேர்காணல் பகுதிக்கு அன்புடன் அழைக்கிறோம்.

வல்லினச்சிறகுகள்

வணக்கம் அம்மா! தங்கள் இளமைப்பருவம், குடும்பம் பற்றிக் கூறுங்கள்.  

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காரைக்கால் என் சொந்த ஊர்.  தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றேன். சிறுவயதில் எனக்கு வாசிப்பின் சுவையை அறிமுகப்படுத்தியவர், என் தந்தை. ஆசிரியராகப் பணி செய்த அவர்,  நூலகத்திலிருந்து கதை புத்தகங்கள் எடுத்து வந்து கொடுப்பார்.  அணில், கண்ணன்,பூந்தளிர் போன்ற சிறார் பத்திரிக்கைகளையும் வாங்கிக் கொடுப்பார்.

ஒவ்வோர் ஆண்டும் சம்பளத்தில் ஒரு பகுதியைச் சேமித்துப் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, அதைக் கடைசி வரை தம் வாழ்நாளிலும் கடைபிடித்தார்.  புத்தகம் வாங்க ஆகும் செலவு, அறிவுக்கான முதலீடு என்பார்.  அதையே நானும் என் வாழ்வில் கடைபிடிக்கிறேன்.

கணவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.  எனக்கு ஒரு மகனும், மகளும் உண்டு.  இருவருக்கும் திருமணமாகிவிட்டது.  மகனும், மருமகளும் கணினி மென்பொறியாளர்கள்.  இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கிறார்கள்.  மகளும், மருமகனும் மருத்துவர்களாகச் சென்னையில் பணிபுரிகிறார்கள்.    

நான் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாவில் முதுநிலை கணக்கராகப் பணி செய்து ஓய்வு பெற்றேன்.  சிறுவயதில் துவங்கிய தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கத்தால், ஒரு கட்டத்தில் நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. தம்பி நடத்திய ‘முத்துச்சிப்பி’ என்ற கையெழுத்துப் பிரதியில், நான் ஒரு மர்ம தொடர்கதை இரண்டு வாரம் எழுதினேன். அதைப் படித்துவிட்டு நன்றாயிருப்பதாய் அக்கம் பக்கத்தார் சொன்ன விமர்சனம், என் எழுத்தார்வத்தைத் தூண்டிவிட்டது.

பணி , படைப்பாக்கம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கல்லூரியில் படித்த காலத்தில் சிறுகதைகள் எழுதிப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன்..  ஆனால் எதுவும் பிரசுரமாகவில்லை. பின்னர் வங்கியில் வேலை, திருமணம், கூட்டுக்குடும்பம், குழந்தை வளர்ப்பு ஆகிய காரணங்களால் வாசிப்பில் நீண்ட இடைவெளி விழுந்தது.   2008 ஆம் ஆண்டில் கணினியின் பரிச்சயம், இணையத்தொடர்பு ஆகியவற்றால் மீண்டும் என் எழுத்து ஆசை துளிர்விட்டது. 

2011 ஆம் ஆண்டு முதல்,  ஊஞ்சல். https://unjal.blogspot.com  என்ற என் வலைப்பூவிலும், நிலாச்சாரல், தமிழ்மன்றம் போன்ற இணைய இதழ்களிலும் எழுதத் துவங்கினேன்.  முப்பது வாரங்கள் ‘நிலவினில் என் நினைவோடை’ என்ற தலைப்பில், நான் எழுதிய தொடரை,  நிலாச்சாரல் இணைய இதழ் 2011 ஆம் ஆண்டு மின்னூலாக வெளியிட்டது.  இது தான் என் முதல் மின்னூல். 

அதற்குப் பிறகு கணையாழியில் ஒரு கதையும்,  தினமணிக்கதிரில் சில கதைகளும் வெளியாகின. அவ்வப்போது நான் எழுதியவற்றைத் தொகுத்து 2018 ஆம் ஆண்டு, ‘புதிய வேர்கள்’ எனும் தலைப்பில், சிறுகதைத் தொகுப்பொன்றை வெளியிட்டேன். பெங்களூர் புஸ்தகா நிறுவனம் மூலமாகவும், சில மின்னூல்கள் வெளிவந்துள்ளன.

சிறார் இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் ?

பணி ஓய்வு பெற்ற பிறகு, பேரனுக்குக் கதை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது, சிறார் இலக்கியத்தின் பால், என் கவனம் திரும்பியது.  நான் சிறுவயதில் படித்த கதைகள் அனைத்திலுமே இறுதியில் ஒரு நீதி போதனையிருக்கும்; அறவுரையிருக்கும்.  எனவே சிறார் கதை என்றாலே, அதில் அறிவுரையோ,அறவுரையோ கட்டாயம் இருக்க வேண்டும் என்பதாக என் புரிதல் இருந்தது. எனவே அதே பாணியில் நீதிக்கருத்துகளை அடிப்படையாக வைத்து ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற தலைப்பில், அமேசான் கிண்டிலில் முதல் சிறார் நூலை வெளியிட்டேன். 

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப உங்கள் படைப்பை மாற்றி யமைத்துள்ளீர்களா?

தற்காலச் சிறார் எழுத்தாளர்களின் நூல்களை வாசித்த பிறகு தான் இக்காலத்தில் சிறார் இலக்கியம் அடைந்துள்ள மாற்றம் பற்றித் தெரிய வந்தது. இன்றைய குழந்தைகளுக்கு நீதிபோதனையையோ அறிவுரையையோ திணிக்க வேண்டிய அவசியமில்லை.

சிறுவர்களுக்கு வாசிப்பு என்பது அவர்களின் கற்பனை சிறகை விரிக்கக்கூடியதாகவும், வண்ணமயமான உலகைக் காட்டுவதாகவும், மகிழ்ச்சி (Fun) தரும் அனுபவமாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன். 

இக்காலச் சூழலுக்கேற்ப சிறார்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய அறிவியல் பூர்வமான பகுத்தறிவு நூல்கள் தான் இன்றைய தேவை என்பதும் புரிந்தது..  அதற்குப் பிறகு ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் தலைப்பில் சிறார் நாவலை மின்னூலாக அமேசான் கிண்டிலில் வெளியிட்டேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

இக்காலச் சிறார் இலக்கியச் சூழல் பற்றி உங்கள் கருத்துகள்…

குழந்தை எழுத்தாளர் அழ.வள்ளியப்பா காலத்தில், அவர் தலைமை வகித்த சிறார் எழுத்தாளர் சங்கத்தில் 300 எழுத்தாளர் உறுப்பினர்களாக இருந்து, 1975 ஆம் ஆண்டு 200 சிறார் நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்தியின் மூலம், அக்காலம் சிறார் இலக்கியத்தின் பொற்காலமாக இருந்திருக்கிறது என்றறிகிறோம். 

மேலும் அக்காலத்தில் அணில்,அணில் மாமா, மாம்பழம், கோகுலம்,பூந்தளிர் போன்ற சிறார் பத்திரிக்கைகள், ஐம்பதுக்கும் மெல் வெளிவந்தன என்ற உண்மை, அக்காலச் சிறார்களுக்கு இருந்த பாடப்புத்தகத்தைத் தாண்டிய பரந்த வாசிப்பைச் சுட்டிக்காட்டுகின்றது.  ஆனால் காலப்போக்கில் அத்தகைய வாசிப்பு அருகி, சுட்டி விகடன் உட்பட பெரும்பாலான சிறார் அச்சு இதழ்கள் நின்றுவிட்டன.  

அண்மை காலமாகச் சிறார் இலக்கியத்தின் பக்கம், பலரின் கவனம் திரும்பியிருப்பது வரவேற்கக்கூடிய விஷயம்.  கடந்த பொற்காலத்தை மீட்டெடுக்கவும், குழந்தைகளுக்கான கலை இலக்கிய படைப்புகள் சார்ந்த செயல்களை முன்னெடுக்கவும் 13/06/2021 அன்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயமாகியிருக்கிறது.

எழுத்தாளர் உதயசங்கர் இதன் தலைவராகவும், எழுத்தாளர் விழியன் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். புதிதாக எழுத வருபவர்களின் எண்ணிக்கை தற்காலத்தில் பெருகியிருக்கிறது.  இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில், இணையம் வழியாகக் கதைசொல்லிக் குழந்தைகளை மகிழ்விக்கும் கதைசொல்லிகளின் எண்ணிக்கையும் அதிகமாயிருக்கிறது. குழந்தைநல செயற்பாட்டார்களின் பங்களிப்பும் பாராட்டக்கூடியதாயிருக்கிறது. எனவே தற்காலத்தைத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் என்று சொல்லலாம்.

சிறுவர்களிடம் படைப்புகளை எடுத்துச் செல்ல மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி…

புத்தகக் காட்சியின் போது எந்தப் புத்தகக் கடைக்குச் சென்றாலும் பழங்காலத்தைச் சேர்ந்த விக்கிரமாதித்தன், ,பஞ்சதந்திரம்,  தெனாலிராமன்,பீர்பால் போன்ற சிறுவர் கதைகளே கண்ணில் படுகின்றன.  புதிதாக வெளியாகியிருக்கும் சிறார் நூல்களைப் பற்றிப் பெரும்பாலும் பெற்றோருக்குத் தெரியாததால், பழைய புத்தகங்களையே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றார்கள்.  குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களையும் தேர்வு செய்து வாங்குவதில்லை.

தற்கால குழந்தை எழுத்தாளர்கள் யார் யார், என்னென்ன நூல்களை அவர்கள் எழுதியிருக்கிறார்கள், எந்தெந்த பதிப்பகங்கள் அவற்றை வெளியிடுகின்றன, வயது வாரியான புத்தகங்கள் யாவை என்பதைப் பெற்றோருக்குத் தெரிவிக்கும் நோக்கத்திலும், புத்தகங்களை வாங்குவதற்கு அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்திலும், ‘சுட்டி உலகம்’ https://chuttiulagam.com எனும் இணைய தளத்தை, இரண்டு மாதங்களுக்கு முன் 10/05/2021 முதல் துவங்கியிருக்கிறோம்..

அச்சு நூல்கள் மட்டுமின்றி, அமேசான் கிண்டில் நூல்கள் பற்றிய அறிமுகமும் இதில் வெளியாகின்றன.  உலகமுழுக்கப் பிரபலமான சிறந்த ஆங்கில நூல்கள் பற்றியும், அதன் எழுத்தாளர்கள் பற்றியும் அறிமுகம் செய்கிறோம். இத்தளத்திலேயே குழந்தைப்பாடல், கதை சொல்லுதல் ஆகிய காணொளிகளையும் வெளியிடுகின்றோம்.. 

‘சுட்டி உலகம்’ என்ற பெயர் குழந்தைக்கானதாக இருந்தாலும், இது பெற்றோருக்கு வழிகாட்டும் தளம் எனலாம்.  ஏனெனில் புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கிக் கொடுப்பது பெற்றோர் தானே? பதிப்பாளருக்கும் பெற்றொருக்குமிடையே பாலமாக இத்தளம் செயல்படும்.  குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், இதன் முக்கிய நோக்கம்.

திராவிடர் வாசகர் வட்டம் 2020 ஆம் ஆண்டு அண்ணா நினைவு சிறார் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியது.  அதில் கலந்து கொண்டவர்களில் சிலர் சேர்ந்து, ‘பூஞ்சிட்டு’ https://poonchittu.com எனும் சிறார் இணைய இதழை 15/07/2020 அன்று துவக்கினோம்.  இதில் எழுதுபவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாள் முழுதும் குழந்தை களுடனிருந்து, அவர்கள் உளவியலை நன்கு அறிந்த பெண்களின்  பங்கு சிறார் இலக்கியத்தில் மிகவும் குறைவாக இருக்கிறது என்ற குறையை இந்த இதழ் போக்கியிருக்கின்றது.  இந்த இதழின் ஆசிரியர் குழுவில், நானும் ஒருத்தி. 15/07/2021 அன்று பூஞ்சிட்டு இரண்டாவது ஆண்டில் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைத்திருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தி.

சிறுவர் இலக்கியமும் பெற்றோர் பங்கும்..இது பற்றிக் கூறுங்களேன்…

சிறார் நூல்களையும், இதழ்களையும் பெற்றோர் காசு கொடுத்து வாங்கினால் தான், அவற்றை அச்சிட்ட பதிப்பாளர்க்கு வருமானம் கிடைத்துப் புதிய நூல்களை வெளியிட முன்வருவார்கள்.  நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு ராயல்டி கிடைக்கும்.  அப்போது தான் புதிதாகப் பலர் சிறார்க்காக எழுத முன்வருவார்கள். எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்த சங்கிலித் தொடர். எனவே தமிழ்ச்சிறார் இலக்கியம் செழிப்பது, பெற்றோரின் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம். 

குழந்தையின் பிறந்த நாளுக்கு உடை,கேக்,பரிசுப்பொருள் போன்ற விஷயங்களுக்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயங்காத பெற்றோர், குழந்தையின் மனநலத்தைக் காத்துப் படைப்பூக்கத்தை ஊக்குவிக்கும் புத்தகங்களுக்குச் செலவழிக்கத் தயங்குகின்றனர். 

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், குழந்தைகளுக்குக் கதை புத்தகங்கள் வாங்கிப் பரிசளித்தல், அவ்விழாவில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு இனிப்பும் கேக்குடன் கூடவே சிறார்க் கதை நூல்களைப் பரிசாக வழங்குதல், திருமண சுப காரியங்களின் போது வருகை தரும் குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன படக்கதைகளைப் மொய் பையோடு வழங்குதல், புத்தகக்காட்சிக்கு அழைத்துச் சென்று அவர்கள் தேர்வு செய்யும் (இது மிகவும் முக்கியம்) புத்தகங்களை வாங்கிக் கொடுத்தல் போனறவை, புத்தக விற்பனையை அதிகரித்துச் சிறார் இலக்கியம் மேம்பட வழிவகுக்கும்.    

குழந்தைகளின் கற்பனைத் திறன் பெருக, இளம் வயதிலேயே வாசிப்புப்பழக்கம் துவங்க வேண்டும். குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்டுவதில், பெற்றோரின் பங்கு முக்கியமானது.  அவர்கள் குறைந்த பட்சம் பத்து கதைப் புத்தகங்களாவது வாங்கி, குழந்தைக்கான முதல் நூலகத்தை, வீட்டிலேயே அமைக்க வேண்டும்.  

தங்கள் குழந்தையின் வயதுக்கேற்ற, கதைப் புத்தகங்கள் வாங்குவதைச் செலவாக எண்ணாமல், முதலீடாகக் கருதுவது அவசியம்.. குழந்தைகளின் வயதுக்கேற்ற சரியான நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தங்கள் நேரத்தில் சில மணித்துளிகள், குழந்தைகளுக்காக ஒதுக்கி அவர்களுடன் சேர்ந்து, கதை வாசிப்பது மிக முக்கியம். 

மேலை நாடுகளில் தினந்தோறும் இரவு உறக்கத்துக்கு முன், குழந்தைகளுக்குக் கதை வாசித்துக் காட்டுவது, குறிப்பிடத்தக்கது.  பெற்றோர் தாம், குழந்தையின் முன்மாதிரி.  எனவே பெற்றோர் முதலில் வாசிப்புப் பழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்வது, மிக மிக அவசியம்.

உங்கள் படைப்புகள்/ வெளியீடுகள் பற்றி…

1.புதிய வேர்கள்சிறுகதைத் தொகுப்பு அச்சு
2.பூதம் காக்கும் புதையல்சிறுவர் நாவல்அமேசான் மின்னூல்
3.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுசிறுவர் கதைகள்அமேசான் மின்னூல்
4.பீட்டர் முயலின் கதைஆங்கில மொழிபெயர்ப்புஅமேசான் மின்னூல்
5.கடற்கரையில் ஒரு நாள்ஆங்கில மொழிபெயர்ப்புஅமேசான் மின்னூல்
6.ஐரோப்பா – சுவையான பயண அனுபவங்கள்பயணக்கட்டுரைபெங்களூர் புஸ்தகா டிஜிட்டல் மீடியா – மின்னூல்
7.புதிய வேர்கள்சிறுகதைத் தொகுப்புபுஸ்தகா – மின்னூல்
8.புதைக்கப்படும் உண்மைகள்சிறுகதைத் தொகுப்புபுஸ்தகா –மின்னூல்
9.சூழல் காப்போம்சூழலியல் கட்டுரைகள்புஸ்தகா -மின்னூல்
10.போன்சாய் வளர்ப்புகட்டுரைபுஸ்தகா – மின்னூல்
11.நிலவினில் என் நினைவோடைகட்டுரைத் தொகுப்புநிலாச்சாரல்-மின்னூல்
12.Nara and SaraChildren storyAmazon – ebook
ஞா.கலையரசி

மொழிபெயர்ப்பு பணி பற்றி…

‘பீட்டர் முயலின் கதை’, ‘கடற்கரையில் ஒரு நாள்’ என்ற தலைப்புகளில் இரு சிறார் கதைகளை,  ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து, அமேசான் கிண்டிலில் மின்னூலாக வெளியிட்டுள்ளேன். மாதா மாதம் பூஞ்சிட்டு இணைய இதழில், ஆங்கிலத்திலிருந்து நான் மொழிபெயர்த்த சிறார் சிறுவர் கதை ‘பிறமொழிக்கதைகள்’ என்ற பகுதியில் வெளியாகின்றது.

தற்சமயம் என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் ?

ஒவ்வொரு மாதமும் ‘பூஞ்சிட்டு’ மாத இணைய இதழில், நான் எழுதும் டைனோசர் பற்றிய அறிவியல் தொடர், குழந்தைப்பாடல், சிறார் நூல் அறிமுகம்,ஆங்கில மொழிபெயர்ப்புக் கதை ஆகியவை வெளியாகின்றன. இது தவிர ‘சுட்டி உலக’த்தில் பல்வேறு சிறார் நூல்களை வாசித்து அறிமுகம் செய்கின்றேன்.

பெற்றோர்க்காகக் குழந்தை வளர்ப்பு சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுகின்றேன்.  ‘குழந்தைகளுக்குப் போரடிப்பது நல்லது’ என்ற தலைப்பில் ஜூலை 2021 இதழில், நான் எழுதிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. விரைவில் சிறார் குறுநாவல் ஒன்றை, மின்னூலாக அமேசான் கிண்டிலில் வெளியிடும் எண்ணமிருக்கிறது.

மிக்க மகிழ்ச்சி. படைப்புலகில் உங்கள் நிலை குறித்துப் பல்வேறு செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.  சிறார் இலக்கிய உலகில் தங்கள் பயணம் வெற்றி பெற வல்லினச் சிறகுகள் சார்பாக வாழ்த்துகள்! நன்றி.

(பி.கு.  ஞா.கலையரசி எழுதிய ‘மந்திரக்குடை’ எனும் சிறுவர் குறுநாவல், தற்போது அமேசானில் மின்னூலாகவும், பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் மூலம், அச்சு நூலாகவும் வெளிவந்துள்ளது.)

Share this: