இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. சங்கிலியில் கட்டாத அணில்குஞ்சு என்பது முதல் கதை. ஆறாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி உரையாடு கிறார்கள். “நீ எதுவும் வளர்க்கவில்லையா?” என்று தியாவிடம் அவர்கள் கேட்கிறார்கள்.
“நானும் வளர்க்கிறேன்; ஆனால் எதையும் சங்கிலி போட்டுக் கட்டி வைத்து வளர்ப்பதில்லை: என்று புதிர் போடுகிறாள் தியா. “என் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அப்பா மரக்கன்றைக் கொடுத்து நட வைத்தார்; அவை எல்லாம் இப்போது மரங்களாகிவிட்டன. பழங்கள் தின்ன அணில்களும், பறவைகளும் வருகின்றன. அணில்கள் விளையாடுவதைப் பார்ப்பது என் பொழுதுபோக்கு. இப்படித் தான் பறவைகளையும் அணில்களையும் கூண்டில் அடைக்காமல் வளர்க்கிறேன்” என்று பதில் சொல்கிறாள் தியா.
‘பறவைகளும், அணில்களும் வாழ மரங்கள் அவசியம்; பறவைகளைக் கூண்டில் அடைத்து வளர்க்கக் கூடாது; எல்லா உயிரையும் நேசிக்க வேண்டும்’ என்பன போன்ற இயற்கை சார்ந்த கருத்துகளை, இக்கதையை வாசிக்கும் சிறுவர்கள் தெரிந்து கொள்வர்.
அடுத்த கதையில் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையான மரகதப் புறாக்கள் சங்கரி என்ற சிறுமியிடம், தாங்கள் அழிந்து வருவதைப் பற்றிய கவலையைப் பகிர்ந்து கொள்கின்றன. இறக்கை முளைத்த குதிரை பற்றி நிலா என்ன கதை எழுதினாள்? குளத்தில் இருந்த மீன்கள் பறந்து எப்படி மரங்களுக்குத் தாவின? ஊன்றுகோலுக்குச் சிறகு முளைத்து எப்படி வானில் பறந்தது? தேனீக்களும், வண்டுகளும் நமக்கு என்ன நன்மை செய்கின்றன? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமா? குழந்தைகளுக்கு இந்தக் கதைப் புத்தகத்தை, வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.
6-12 வயது குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.
வகை:- | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | கன்னிக்கோவில் இராஜா |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 சென்னை-18 8778073949 |
விலை:- | ரூ 50/- |