அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். வாழ்க தமிழ்!
2000ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக மக்களிடையே அமைதியைப் பேணவும், புரிதலை மேம்படுத்தவும், கண்ணியத்தைக் காக்கவும் மொழியியலில் பன்முகத்தன்மை, பல மொழி பேசுதல் ஆகியவை முக்கியம் என்பதை மீண்டும் உறுதி செய்யும் விதமாக யுனெஸ்கோ இந்நாளின் 25ஆம் ஆண்டு விழாவை வெள்ளி விழாவாக இன்று கொண்டாடுகிறது.
குழந்தைக்குத் தாய்மொழியே உலகத்துடனான முதல் தொடர்பு. தாய்மொழியே மனிதச் சிந்தனையின் திறவுகோல்; குழந்தையின் படிப்படியான இயல்பான மூளை வளர்ச்சிக்கும், பகுத்தறிவு சிந்தனை செயல்பாட்டுக்கும் படைப்பாற்றலுக்கும் தாய்மொழி மிகவும் அவசியம் எனப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகமுழுதும் பேசப்பட்டு வந்த 8324 மொழிகளில், 7000 மொழிகள் மட்டுமே இன்று வழக்கில் இருக்கின்றன. வேகமாக மாறி வரும் உலகத்தில் இந்த ஏழாயிரம் மொழிகளிலும் பல மொழிகள் அழியும் நிலையிலிருக்கின்றன என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
மொழியே ஓர் இனத்தின் அடையாளம். மொழி அழிந்தால். அம்மொழி பேசுவோரின் இன அடையாளங்களும், கலாச்சாரங்களும் அழிந்து விடும். எனவே ஓர் இனத்தின் அடையாளமாக விளங்கும் தாய்மொழியின் முக்கியத்துவத்தையும், தாய்மொழி வழிக்கற்றலின் அவசியத்தையும் வலியுறுத்தி, 2000 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வோராண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலகத்தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அனுசரிக்கின்றது.
இந்நாள் கொண்டாடப்படுவதற்கான வரலாற்றை, நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தியா விடுதலை பெற்ற போது, மேற்கு பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தானும் (தற்போது பங்களாதேஷ்) ஒரே நாடாக இருந்தன. மேற்கு பாகிஸ்தானில் உருது தேசிய மொழியாக இருந்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியே பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இருந்தது. மாறாக உருது மொழியைத் தேசிய மொழியாக வங்க மக்கள் மீது மேற்கு பாகிஸ்தான் வலுக்கட்டாயமாகத் திணித்ததால், அங்குப் போராட்டம் வெடித்தது.
1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள், வங்க மொழி இயக்கத்துக்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் ஆதரவுடன் கிளர்ச்சி நடத்தினர். டாக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் இறந்தனர். போராட்டத்தின் விளைவாக 1956 ஆம் ஆண்டு, வங்க மொழி தேசியமொழியாக அறிவிக்கப்பட்டது. இந்நாளே உலகத் தாய்மொழி நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.
நம் தாய்மொழியாம் தமிழ் மீது, பற்று கொள்வோம்! தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாகக் கருதுவோம்! 2000 ஆண்டுகளுக்கு மேலாக, வழக்கிலிருக்கும் நம் செம்மொழித் தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க வேண்டியது, நம் ஒவ்வொருவரின் கடமை! தமிழ் தான் நம் அடையாளம்!
‘மும்மொழித் திட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்துத் தமிழை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை தீரத்துடன் எதிர்த்து முறியடிப்போம்! நாம் இந்திக்கு எதிரியல்ல; விருப்பம் உள்ளவர்கள் இந்தியை மட்டுமல்ல, எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்தி திணிப்பை நாம் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கெனவே இந்தித் திணிப்புக்காக மொழிப்போர் புரிந்து நம் தலைவர்கள் பலர் தம் இன்னுயிரை நீத்துள்ளனர். தமிழ் நம் தாய்மொழி! உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம். மூன்றாவது மொழி நம் குழந்தைகளுக்குக் கட்டாயப் பாடமாகத் தேவையில்லை. தேவையென்றால் அவர்களே விருப்பப்பட்டுக் கற்றுக் கொள்வார்கள்!
அனைவருக்கும் இனிய தாய்மொழி நாள் வாழ்த்துகள்!
ஆசிரியர்,
சுட்டி உலகம்.