எல். ஃபிராங்க் பாம் எழுதிய (L. Frank Baum) ‘The Wonderful Wizard of Oz’ என்ற மாயாஜாலமும், மந்திர தந்திரமும் நிறைந்த ஆங்கில நாவலைத் தழுவி, ‘The Wizard of Oz’ என்ற அமெரிக்கப் படம் 1939 ஆம் ஆண்டு வெளியானது. இந்நாவல் ‘மரகத நாட்டு மந்திரவாதி’ எனத் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இதே நாவலைத் தழுவி 1982 ஆம் ஆண்டு, ஜப்பானில் இந்த அனிமேஷன் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த படம், பல விருதுகளை வென்றது. சிறுவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய 50 படங்களுள் இதுவும் ஒன்று, எனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது கதையில் சில மாற்றங்களுடன் அனிமேஷன், தொலைக்காட்சி சீரியல், கார்ட்டூன் எனப் பல வடிவங்களில் இப்படம் காணக் கிடைக்கின்றது. யூடியூப் காணொளியிலும், இப்படத்தைக் காணலாம்.
டோரதி கேல் என்பவளின் அத்தை எல்ம். மாமா ஹென்றி. தன் அத்தையின் வீட்டில் வசிக்கும் டோரதி, தோத்தோ என்ற நாயை வளர்க்கிறாள். அத்தையும், மாமாவும் வெளியே சென்ற பிறகு ஒரு நாள் பயங்கரமான சூறாவளி காற்று வீசுகிறது. டோரதி நாயுடன் வீட்டில் தனித்திருக்கிறாள்.
சூறாவளியின் போது ஒரு நாற்காலி அவள் நெற்றியில் தாக்க, வீட்டுக்குள்ளே மயங்கி விழுகிறாள். அவள் வீடு காற்றில் தனியாகப் பெயர்ந்து மேலே எழும்பிப் பறந்து, வேறு ஒரு ஊரில் தரை இறங்குகிறது. அவள் கண் விழிக்கும்போது, இதுவரை பார்த்தறியாப் புது ஊரில் இருக்கின்றாள்.
அவள் வீடு தரை இறங்கும் போது, அவ்வூரின் கிழக்குப் பக்க சூன்யக்காரி வீட்டுக்கு அடியில் மாட்டிச் செத்து விடுகிறாள். அவள் மிகவும் கெட்டவள். அவளிடம் அடிமையாயிருந்த அவ்வூர் மக்களும், வடக்குப் பக்க நல்ல சூன்யக்காரியும் அவளைக் கொன்றதற்காக, டோரதியை ஹீரோயினாகக் கொண்டாடுகின்றார்கள். செத்தவள் அணிந்திருந்த மந்திர சக்தி நிறைந்த சிவப்பு மாணிக்கச் செருப்புகளை, டோரதியிடம் கொடுக்கிறாள் வடக்கு சூன்யக்காரி.
கான்சாஸிலிருக்கும் தன் வீட்டுக்குப் போக உதவும் படி, அவர்களிடம் கேட்கிறாள் டோரதி. மரகத நாட்டு ஓஸ் மந்திரவாதி அவளுக்கு உதவக்கூடும் என்று சொல்லி, அங்குப் போவதற்கான வழியைச் சொல்கிறாள் வடக்கு சூன்யக்காரி. மஞ்சள் நிற சாலையில் தொடர்ந்து சென்றால், மரகதநாட்டுக்குப் போக முடியும் என்கிறாள். டோரதியும், தோத்தோவும் அவ்வழியே நடக்கத் துவங்குகிறார்கள்.
வழியில் டோரதி ஒரு வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு சோளக்கொல்லை பொம்மை மனிதனைச் சந்திக்கிறாள். ஓஸ் மந்திரவாதியிடம் தனக்கு ஒரு மூளை ஒன்றைக் கேட்டுப் பெறுவதற்காக, அவனும் அவளுடன் சேர்ந்து கொள்கிறான்.
அடுத்து அவள் ஒரு தகர மனிதனைப் பார்க்கிறாள். எண்ணெய் இல்லாததால், துருப்பிடித்துப் போய் நின்றிருந்த தகர மனிதனுக்கு, ஆங்காங்கே எண்ணெய் ஊற்றி கைகால்களையும், தலையையும் அசைக்க உதவி செய்கிறாள் டோரதி. தனக்கு ஒரு இதயம் வேண்டும் எனக் கேட்பதற்காகத் தகர மனிதனும், அவளுடன் நடக்கத் துவங்குகிறான்.
இவர்கள் போகும் வழியில் சிங்கம் ஒன்று எதிரில் வருகின்றது. அது மிகவும் கோழையான சிங்கம். தனக்குத் தைரியம் வேண்டும் எனக் கேட்பதற்காக, அதுவும் டோரதியுடன் சேர்ந்து நடக்கிறது. அவர்கள் செல்லும் வழியில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். முடிவில் ஓஸ் மந்திரவாதியிடம் சென்று சேர்கிறார்கள்.
அவர்களை ஒவ்வொருவராக வரச் சொல்லி, மந்திரவாதி சந்திக்கிறார். அவர் ஒவ்வொருவருக்கும் பிரம்மாண்ட பூதத்தலை, நெருப்புக் கோளம், இளம்பெண் என ஒவ்வொரு விதமாகக் காட்சியளிக்கிறார். கொடியவளான மேற்கு சூன்யக்காரியைக் கொன்று விட்டு வந்தால் மட்டுமே, அவர்களுக்கு உதவி செய்வேன் என்று மந்திரவாதி சொல்கிறார். வேறு வழியின்றி மேற்குப் பக்க சூன்யக்காரியைத் தேடி, இவர்கள் செல்கிறார்கள்.
அவர்கள் அவள் கோட்டையை அடைவதற்கு முன்பு, மேற்கு சூன்யக்காரி அவர்களைக் கொல்ல, பயங்கரமான படைகளை ஒவ்வொன்றாக அனுப்புகிறாள். முதலில் மந்திர சக்தி மிகுந்த ஓநாய்களை அனுப்புகிறாள், தகரமனிதன் அவனிடமிருக்கும் கோடரியால் அவைகளை வெட்டித் தள்ளுகிறான்.
அடுத்ததாகக் காகங்களின் படை வருகின்றது. அவற்றைச் சோளக்கொல்லை மனிதன் சமாளிக்கிறான். அடுத்ததாக இறக்கை உள்ள பெரிய குரங்குகளை அனுப்பி, டோரதியையும், அவள் குழுவினரையும் அவள் கோட்டைக்குப் பிடித்து வரச் செய்கிறாள்.
சூன்யக்காரி தன் படை வீர்ர்களிடம் டோரதியிடமிருக்கும் மந்திர செருப்புகளைக் கைப்பற்றச் சொல்கிறாள். டோரதி கொடுக்க மாட்டேன் என்று சொல்லித் தப்பித்து ஓடுகிறாள். இறுதியில் சூன்யக்காரியே கோட்டையின் படிக்கட்டுகளில் டோரதியைத் துரத்திக் கொண்டு ஓடிவருகிறாள்.
அவளிடமிருந்து தப்பிக்க தண்ணீர் நிறைந்த பீப்பாயை அவள் மீது உருட்டித் தள்ளிவிடுகின்றாள் டோரதி. அந்தப் பீப்பாய் தண்ணீர் மோதி, சூன்யக்காரி உருகி மறைந்து விடுகின்றாள்.
மீண்டும் மந்திரவாதியிடம் வரும் போது தான், அவரின் உண்மையான முகம் தெரிகிறது. தான் வித்தைகள் தெரிந்த சாதாரண ஒரு சர்க்கஸ் மந்திரவாதியென்றும், தனக்கு அற்புதச் சக்தி எதுவும் கிடையாதென்றும் அவர் கூறுகின்றார். அவர் தன்னுடைய பெரிய பலூனில் டோரதியை அவளுடைய ஊருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்.
அந்த ஓஸ் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பைச் சோளக்கொல்லை பொம்மை மனிதனுக்குக் கொடுக்கிறார். சிங்கமும், தகரமனிதனும் அவனுக்கு உதவியாக இருக்கிறார்கள்.
பலூன் கிளம்பும் சமயம் தோத்தோ ஒரு பக்கம் ஓட, அதைத் துரத்திக் கொண்டு டோரதி ஓடுகின்றாள். அவளை விட்டுவிட்டு ஓஸ் மந்திரவாதியை மட்டும் ஏற்றிக் கொண்டு, பலூன் பறந்து போய்விடுகின்றது. ஊருக்குச் செல்ல முடியாத சோகத்துடன் டோரதி நிற்க, நல்லவளான தெற்கு சூன்யக்காரி கிளிண்டா அங்கு வருகிறாள். தோத்தோவையும் தூக்கி வந்து டோரதியிடம் கொடுக்கிறாள்.
“உன்னுடைய மந்திர சக்தி மிகுந்த செருப்புகளினால் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லிக் கொண்டே சுற்றினால், உன்னால் உன் ஊருக்குத் திரும்பிப் போக முடியும்” என்று கிளிண்டா சொல்கிறாள்.
தன் நண்பர்களான சிங்கம், தகரமனிதன், சோளக்கொல்லை மனிதன் ஆகியோருக்கு டோரதி நன்றி சொல்லி விட்டுக் கிளம்பத் தயாராகீறாள். அவர்களும் அவளைப் பிரிவதற்கு மனமின்றி பிரியாவிடை கொடுக்கின்றார்கள்.
அவள் செருப்பைச் சுழற்றிய பிறகு, டோரதியும் தோத்தோவும் மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து சேர்கிறார்கள். அத்தையும், மாமாவும் அவளைக் கட்டியணைத்து வரவேற்கிறார்கள்.
ஓஸ் மந்திரவாதியின் கோட்டையில் அவரைச் சந்திக்கும் காட்சிகளும், டோரதியையும் அவள் நண்பர்களையும் அழிக்க சூன்யக்காரி அனுப்பும் படைகள் நிகழ்த்தும் பயங்கர காட்சிகளும் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் மிகவும் ரசித்துப் பார்க்கக் கூடிய சாகசமும், மாயாஜாலமும் நிறைந்த அனிமேஷன் திரைப்படம்.
(டிசம்பர் 2021 பொம்மி சிறுவர் இதழில் எழுதியது).