டைனோசர் முட்டையைக் காணோம்

Dinosaur_muttai_pic

இச்சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன.  இந்நூலில் உள்ள  ஓவியங்கள் எல்லாமே, குழந்தைகள் வரைந்தவை.

முதல் கதையான ‘டைனோசர் முட்டையைக் காணோம்’ என்பது சிறுவர்க்கு வாசிக்கச் சுவாரசியமான கதை. இதில் ரமணியும், பரணியும்  தாத்தா வீட்டுக்குச் செல்கிறார்கள். காட்டில் கிடைத்த மயில் முட்டையை டைனோசர் முட்டை என்று ரமணி தவறாக நினைத்து எடுத்துவந்து, வீட்டில் பானை பக்கத்தில் பதுக்கி வைக்கின்றான்.  அக்காட்டில் மயில் முட்டைகள் அடிக்கடிக் களவாடப்பட்டு விற்கப்படுகின்றன.  அது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டுத் தோட்டக்காரர் நாகப்பனும், விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற போது மயில் முட்டைகளை எடுத்து வந்து, பானையில் ஒளித்து வைக்கின்றார். ரமணி வைத்திருந்த முட்டையையும் எடுத்துப் பானையில் வைக்கின்றார். .     

தான் வைத்த முட்டையைக் காணோம் என்று ரமணி அழுது புரண்டு செய்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாகக் காவலர் தேடத் துவங்கி, முடிவில் நாகப்பன் மாட்டிக் கொள்கிறார். ரமணியின் அழுகையால் மயில் முட்டைகள் விற்கப்படாமல் தப்பித்தன. 

‘கொசு அடித்த சிங்கராஜா’, ‘அணில்களின் ஓட்டப்பந்தயம்’, ‘புலிக்குட்டிக்கு அம்மாவான ஆடு’, ‘முட்டையைப் பாதுகாத்த அணில்’, ‘குள்ளநரிக்கு உதவிய மரங்கொத்தி’, ‘ஊஞ்சல் ஆடிய குட்டி ஆமை’ என இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளில், சிறுவர்க்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பது  சிறப்பு.

மேலும் விலங்குகளும், பறவைகளும் ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டும்  ஒற்றுமையுடனும் வாழ்வதாகக் கதைகளை அமைத்திருப்பதும் நன்று.   முயலை மகிழ்விப்பதற்காக அணில் போட்டியில் தோற்கின்றது.  அம்மா இல்லாத புலிக்குட்டியை ஆடு ஆபத்திலிருந்து காப்பாற்றி அம்மாவாகிறது. நரிக்கு அதன் நண்பனைத் தேடித் தருகின்றது மரங்கொத்தி.  கொண்டைக்குருவி வெளியே போயிருந்த சமயத்தில் மரம் வெட்டுப்பட்டு சாய, அணில் அம்மரத்தில் இருந்த குருவி முட்டைகளைப் பாதுகாக்கிறது.

மற்றவர்க்கு உதவ வேண்டும்; எல்லோருடனும் ஒற்றுமையாக நல்லுறவுடன் வாழ வேண்டும் என்ற கருத்துகளைக் குழந்தைகள் இக்கதைகள் மூலம் பெறுவது உறுதி.  

மாலையில் சூரிய வெளிச்சத்தை யாரோ திருடிவிடுகிறார்கள் எனக் கரடிக்குட்டி குழம்ப, அதன் சந்தேகத்தைக் குரங்கு மாமா தீர்த்து வைக்கின்றது. இக்கதை மூலம் சூரியன், நிலா பற்றிய இயற்கை செய்திகளைச் சிறுவர்களுக்குச் சொல்லியிருக்கின்றார் ஆசிரியர்.

6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கேற்ற கதைகள். அவசியம் இந்நூலை சிறுவர்க்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்..  

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்கன்னிக்கோவில் இராஜா
வெளியீடுலாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18 (+91) 88257 69056
விலை₹ 100/-

Share this: