தாத்தாவின் மூன்றாவது டிராயர்

Thatthavin_pic

நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’ என்பது, முதல் கதை. ஊரி என்ற சிறுவன் தாத்தா வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறான். தாத்தா மேசையின் மூன்றாவது டிராயர் மட்டும், எப்போதும் பூட்டியே இருக்கின்றது. அதைத் திறக்க அவனுக்கு அனுமதியில்லை. ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத போது, அவனுக்குக் கிடைத்த சாவியை வைத்து அந்த டிராயரைத் திறக்கிறான். அந்தச் சமயத்தில் வீட்டுக்குத் திரும்பிய தாத்தா, டிராயரைத் திறந்த பேரன் மீது பயங்கரமாகக் கோபப்படுகிறார்.

கோபம் தணிந்த பிறகு, அவரது துன்பம் நிறைந்த சிறு வயது வாழ்க்கை நிகழ்வுகளை பேரனுக்குச் சொல்கிறார். அந்த மூன்றாவது டிராயரில் அவர் சின்ன வயதில் அவர் தங்கையுடன் விளையாடிய பொருட்களும், தங்கைக்கு மிகவும் பிடித்த பொம்மையும் இருக்கின்றன. சிறு வயதில் ஜெர்மனியில் ஹிட்லரின் யூதருக்கெதிரான இனவெறிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டுப் பெற்றோரையும், பிரியத்துக்குரிய தங்கையையும் பிரிந்த துயரம், தாத்தா மனதில் இன்னும் ஆறாத ரணமாக இருப்பதைச் சிறுவன் அறிந்து கொள்கிறான்.

‘சுனாமி நினைவுச் சின்னம்’ கதையில், ஹவாய் தீவில் தம் சிறு வயதில் பள்ளியைத் தாக்கிய சுனாமியில் தம் தம்பியையும், சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கண்ணெதிரே இழந்த தாத்தா, ஒவ்வோர் ஆண்டும் பேரனுடன் நினைவுச் சின்னம் சென்று, மலர் வளையம் வைக்கும் கதை.

‘என் பெயர் சன் கோல்’ என்ற கதையில், சிறுவன் சன் கோல் ஓர் அகதி. அமெரிக்கப் பள்ளியில் அவன் பெயரை, மற்ற மாணவர்கள் தவறாக உச்சரித்துச் சிரிக்கிறார்கள். அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தாலும், தன் அடையாளமான இனப்பெயரைத் தொலைக்க விரும்பாமல், உறுதியாக இருந்து தன் பெயரைச் சரியாக உச்சரிக்க ஒரு வழியைச் சிறுவன் கண்டுபிடிக்கிறான்.     

‘அம்மாவைத் தேடி’ என்பது அலெக்சாண்டிரியா லாஃபெயி என்பவர் எழுதிய புகழ் பெற்ற கதை. உள்நாட்டுப் போர் சமயம் தன் அம்மா ரோஸ்லீயைப் பிரிந்த சிறுவன், போர் முடிந்த பிறகு, எங்கெல்லாமோ அம்மாவைத் தேடியலையும் உருக்கமான கதை.

‘கடல் கடந்து’ என்ற கதையை ஆமி ஹெஸ்ட் எழுதியுள்ளார். பாட்டியுடன் வாழும் ஜெசி என்ற 13 வயது சிறுமிக்கு அமெரிக்க செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. சம்பாதித்துப் பணம் சேர்த்துப் பாட்டியையும் அமெரிக்காவுக்கு வரவழைத்துக் கொள்கிறாள். பாட்டி மீதான அவள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் கதை. 

போரினால் நாட்டை விட்டு ஓடி, அகதியாக அமெரிக்காவில் தஞ்சம் புகும் சிறுமி, பாட்டியான பிறகு கூட தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கத்துடன் வாழ்வதை, ‘நட்சத்திரங்களின் பாதை’ என்ற கதை  சொல்கிறது.

‘ஹென்றிக்கு விடுதலை தந்த பெட்டி’ என்ற கதையில், ஹென்றி சிறு வயதில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறான். அதிர்ச்சியளிக்கும் கருப்பின அடிமைகளின் துயரமிகு வாழ்வைப் பேசும் கதையிது.

ரூபி-பிரிட்ஜ்-யின் கதை அமெரிக்காவில் நிலவிய நிறவெறியையும், ரூபி-பிரிட்ஜ் என்ற கருப்பினச் சிறுமியின் துணிச்சலையும் சொல்கிறது. வெள்ளையர்கள் படித்த பள்ளியில் இடம் கிடைத்த சிறுமி ரூபி-பிரிட்ஜ் வெள்ளையரின் எதிர்ப்பையும், போராட்டத்தையும் கண்டு அஞ்சாமல் இறுதிவரை படித்து முடித்த கதையைச் சொல்கிறது.

“நான் ரோசா பார்க்ஸ்” என்பது அடுத்த கதை. ரோசா பார்க்ஸ் கருப்பின மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பேருந்தில் பயணம் செய்த போது எழுந்து வெள்ளையருக்கு இடம் கொடுக்க மறுத்தமைக்காக அவரைக் கைது செய்து அபராதம் விதித்தனர்.

நாடு முழுதும் இந்தச் செய்தி பரவியது. அவரது கைதை எதிர்த்துக் கருப்பர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கருப்பர்கள் யாரும் ஏறாமல் பேருந்துகள் காலியாகச் சென்றன. வழக்கு நீதிமன்றம் சென்றது. “நிறப்பாகுபாடு சட்டப்படி குற்றம். கருப்பர்கள் இருக்கையை வெள்ளையர்க்கு விட்டுத் தர வேண்டியதில்லை” என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ‘குடியுரிமையின் தாயார்’ என்று புகழப்பட்ட ரோசா பார்க்ஸின் வாழ்க்கையைச் சுருக்கமாக இக்கதை கூறுகிறது.

ஜிம் குரோ – அமெரிக்காவில் கருப்பின மக்களை ஒடுக்கிய சட்டங்களுக்குப் பெயர் ஜிம் குரோ. இக்கதையை எழுதிய பாவ்லா யங் ஷெல்டன் குடியுரிமைப் போராட்டத்தில் முன்னணி தலைவரான ஆண்ட்ரூ யங் என்பவரின் மகள். மார்ட்டின் லூதர் கிங்கை இவர் மாமா என்றழைத்தார். “ஜிம் குரோ சட்டங்களை ஒழிக்க வேண்டும்; கருப்பர்க்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பேரணி பற்றியும், 06/08/1965 அன்று ஜனாதிபதி ஜான்சன் கருப்பர்க்கு ஓட்டுரிமை வழங்கிக் கையெழுத்திட்டதையும், பாவ்லா இக்கதையில் கூறியிருக்கிறார்.

‘அன்பைத் தேடி’ என்பது, 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரம் பற்றியது. இதன் ஆசிரியர் இலங்கை எழுத்தாளர் உஷா ஜவஹர். சுரேஷ் என்ற ஏழு வயது சிறுவன் இனக் கலவரத்தில் தன் பெற்றோரை இழந்து, பெரியம்மா வீட்டில் தஞ்சமடையும் கதையைச் சொல்கிறது.

வகை –சிறார் கதைகள் – மொழிபெயர்ப்பு
ஆசிரியர்–   ஆங்கிலம்:-
தமிழில்:-
வெவ்வேறு ஆசிரியர்கள்
சுகுமாரன்
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18 +91 8778073949
விலைரூ 80/-

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *