‘நீ என்னவாக விரும்புகிறாய் ?’ எனும் கேள்வி

‘What do you want to be when you grow up ?’ is the worst question you can ask a kid !

Michelle Obama

நம் இளம் வயதில் நமது எதிர்காலத்தைப் பற்றிப் பெற்றோர் கேட்ட கேள்விகளில், முதன்மையாக நினைவுக்கு வருவது, “நீ பெரியவனானதும் யாராக விரும்புகிறாய் ?”  என்பதே. இதன் பதிலாகப் பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்த்தது, ‘மருத்துவர்’,  ‘பொறியாளர்’,  ஆகிய இரண்டு பணிகளில் ஏதாவது ஒன்றையே.

1952 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராயிருந்த திரு. ராஜாஜி அவர்களின் ‘குலக் கல்வித் திட்டம்‘ வெற்றி பெற்றிருந்தால், இன்று சாமானியர்கள் இக்கேள்வியைத் தம் குழந்தைகளிடம் கேட்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. குடும்பத் தொழிலைத் தவிர, பிள்ளைகளுக்கு வேறு பிடித்த தொழிலைத் தேர்வு செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும்.    அத்திட்டத்தை எதிர்த்துப் போராடி, தமிழகத்தின் அனைத்துச் சமூகத்தினரும் உயர்கல்வி கற்று, பல்வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்திய பெருமை, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகியோரையே   சாரும்.

அதிவேகமாக மாறிவரும் இன்றைய உலகச்சூழலில், இக்கேள்வியைச் சொல் மாறாது, பெற்றோர் அடுத்த தலைமுறையிடம் கேட்பது சரியா?

திருமதி. மீஷெல் ஓபாமா (Michelle Obama), ‘பிகமிங்’ (Becoming) என்ற தமது நினைவுக் குறிப்பு (Memoir) புத்தகத்தைப் பற்றி திருமதி. ஓபரா வின்பிரேயுடனான (Oprah Winfrey) நேர்காணலில், ‘குழந்தைகளிடம் நீங்கள் யாராக விரும்புகிறீர்கள் ?’ என்று கேட்பது மிகவும் மோசமான கேள்வி எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம், இது தான்:

“வாழ்க்கையென்பது பிறப்பில் தொடங்கி, இறப்பு வரை தொடரும் ஒரு பயணம். அதில் நம் வளர்ச்சி என்பது வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல; அனைத்துக் குழந்தைகளும் குறிப்பிட்ட வயது வரை மட்டுமே வளர்ந்து அப்போதுள்ள அடையாளத்தைக் கொண்டு, மீதமுள்ள வாழ்க்கையை வாழ்வதில்லை.”

மீஷெல் ஓபாமா (Michelle Obama)

நம் உடல் வளர்ச்சி குறிப்பிட்ட வயதுடன் நின்றாலும், நம் சூழல், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் , நாம் அறியவரும் புதிய தகவல்கள் ஆகியவற்றின் காரணமாக ‘நான் யார்?  என் விருப்பங்கள் யாவை?  என்பது போன்ற நம் அடையாளங்களும், விருப்பங்களும்  மாறிக்கொண்டே இருக்கின்றன. படித்த துறையையோ,  முதலில் வேலை செய்த தொழிலையோ பின் வரும் காலகட்டத்தில் விடுத்துத் தங்களுக்குப் பிடித்த வேறொரு துறையைப் புதிதாகத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றியடைந்த சாதனையாளர் பலரை வரலாற்றில் காணலாம்.

Progress is impossible without change, and those who cannot change their minds cannot change anything.

George Bernard Shaw

நம் நாட்டின் தந்தையெனப் போற்றப்படும் ‘மகாத்மா காந்தி’ சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பணியாற்றி, தமது பிற்கால வாழ்க்கை முழுவதையும் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்தார். ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லாண்ட்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம், பிரபலமான ‘அலெக்சாண்டர் பாபு’ பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் பணிபுரிந்து தமது 39 வயதில், கலைத்துறையில் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகப் பல துறைகளில், வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய வங்கி ஊழியர், வங்கிக் கணக்கு மட்டுமின்றி, கணினியை இயக்குவதிலும், தேர்ச்சி பெறுவது அவசியம். மருத்துவர் ரோபோ உதவிகொண்டு அறுவை சிகிச்சை செய்ய, அதற்கான புதிய தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. மென்பொருள் பொறியாளர்க்கு இணையதளத்தை வடிவமைப்பதற்குத் தொழில்நுட்பத்திறன் மட்டுமின்றி, படைப்பாற்றலும் அவசியம்.

நன்றி [Image by Gerd Altmann from Pixabay]

எனவே பெற்றோர் “நீ என்னவாக விரும்புகிறாய் ?” என்று கேட்பதைத் தவிர்த்துத் தங்கள் பிள்ளைகளிடமுள்ள தனிப்பட்ட திறமையையும்,  ஆர்வத்தையும் கண்டறிந்து அவற்றை வளர்க்க உதவினால்,  பின்னாளில் அவர்கள் பன்முகத்திறமையுடன் சாதனையாளர் களாகத் திகழ்வார்கள். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால், பரந்து விரிந்திருக்கும் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தித் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய குழந்தைகளிடம், இந்தக் கேள்வியைக் கேட்டு, அவர்கள் எல்லையைக் குறுக்குவது, ஆலமரமாக வளர வேண்டியதைத்  தொட்டிச்செடியாக மாற்றுவதற்குச் சமம்.

photo of large banyan tree and a bonsai

என் ஐந்து வயது செல்வன், எனக்குக் கொடுத்த பதில் 😲 :

“கவின்,  வருங்காலத்தில், நீ என்னவாக விரும்புகிறாய் ?”

“தெரியவில்லை அப்பா. அதைக் கண்டறிய, எனக்கு நிறைய காலமுள்ளது.”

நன்றி [Image by Rainer Maiores from Pixabay]
Share this: