சீர்காழி – சிறார் நூல்கள் வெளியீட்டு விழா

Sirkalibkrelease_pic

நிவேதிதா பதிப்பக நிறுவனர் தேவகி இராமலிங்கம் அவர்களின் பிறந்த ஊர் சீர்காழி என்பதாலும், முதன்முறையாக அங்கே புத்தக வெளியீட்டு விழா நடைபெறுவதாலும் சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஊரின் முக்கிய பிரமுகர்கள் பலர் இதில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அப்பள்ளியின் தாளாளரும் ரோட்டரி கிளப் உறுப்பினர்களும் இதில் பங்கேற்றுச் சிறப்பான உரையாற்றினர்.

மாணவ மாணவியர் எதிர்காலத்தில் பன்முக ஆளுமையாகத் திகழப் புத்தக வாசிப்பு அவசியம் என்பது குறித்துப் பலரும் தம்முரையில் வலியுறுத்திப் பேசினர். இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவியர் திரளாகப் பங்கேற்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் அன்று திறந்து வைக்கப்பட்ட புத்தகக்காட்சியில் பங்கேற்றுப் புத்தகம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர். 

இந்நிகழ்வின் தொடர்ச்சியாகப் பள்ளியிலிருந்து படைப்பாளர்கள் உருவாகவேண்டும் என்று பேச்சாளர் ஒருவர் சொன்னதைத் தாளாளரும் ஏற்றுக்கொண்டு உடனே மைக்கில் ஓர் அறிவிப்பைச் செய்தார். வரும் பொங்கல் விழாவுக்குப் பள்ளி சார்பில் விழாமலர் வெளியிடலாமென்றும் மாணவர்கள் அதற்குக் கதை, கவிதை எழுதி அனுப்பலாமென்றும் சொன்னார்.

இந்நிகழ்வில் நிவேதிதா பதிப்பகம் வெளியிட்ட சில முக்கியமான புத்தகங்கள் வருமாறு:_

‘Magic Hat’ – எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய மந்திரத்தொப்பியின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

‘நூறு மலர்கள்’ – நெய்வேலி பாரதிக்குமார் – கபிலர் குறிஞ்சிப் பாட்டில் கூறிய 99 பூக்களை சிறார்க்கு அறிமுகம் செய்யும் புத்தகம்.

காஷ்குமரி’ – சிறார் கதைகள் – நெய்வேலி பாரதிக்குமார் – தெற்கே கன்னியாகுமரியில் துவங்கி வடக்கே லடாக்கில் முடியும் இக்கதை இந்தியாவின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைச் சிறார்க்கு அறிமுகம் செய்கின்றது.

மாய விளக்கு பூதம்’, ‘தியாவின் நட்சத்திரப்பூ’, ‘பூட்டுப் போட்ட மீன் தொட்டி’ – கன்னிக்கோவில் இராஜா – இவை மூன்றும் மழலை வாசிப்புக் கதைகள்.

நின்று உயர் நாயகி’ – பதின்பருவக் கதைகள் – உமையவன்

இந்நூல்களை நிவேதிதா பதிப்பகத்தில் வாங்கலாம். தொடர்பு எண்:-89393 87296

Share this: