சிறகு முளைத்த யானை – குழந்தைப் பாடல்கள்

Siragu_Mulaitha_pic

இது 2018 ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல். இந்நூலில் 44 சிறுவர் பாடல்கள் உள்ளன.   சிறுவர் பாடல் என்றால் ஓசையும், இனிமையும் இன்றியமையாதது.  அத்துடன் கூற வந்த கருத்தை, எளிமையாக மனதில் பதியும் படி கூற வேண்டும்.  அதற்கேற்றார் போல், இப்பாடல்கள் அமைந்திருப்பது சிறப்பு.

‘அம்மா போல’ என்ற முதல் பிரிவில் உள்ள “ஆசை ஆசை ஆசை” என்ற பாடல் சிறப்பு.

“ஒரு சின்னப் பறவை

சிறகில் வண்ணம்

பூசிப்பார்க்க ஆசை

ஒரு சின்னமழைத் துளி

உள்ளே புகுந்து

ஒளிந்துகொள்ள ஆசை

பெரு மின்னல் கொடியைப்

பேனாவாக்கி

எழுதிப் பார்க்க ஆசை

…………………..

நறுங் காற்றைப் போல

உலகம் முழுதும்

சுற்றிப்பார்க்க ஆசை”

குழந்தைகள் விரும்பும் பல தலைப்புகளில் இவர் பாடியிருக்கும் பாடல்கள் சுவையும் பொருளும் மிக்கவை.  சிறுவர்களுக்கேற்ற பாடுபொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  சிறுவர்கள் விரும்பிச் சேகரிக்கும் காலித் தீப்பெட்டி குறித்த பாடல் இது:-

“குச்சி தீர்ந்த பெட்டிகளை

இணைத்து ரயில் செய்குவேன்!

தொய்வில்லாது நூலைக் கட்டித்

தொலைபேசி ஆக்குவேன்

மிச்சமாகும் பெட்டிகளால்

மாடிவீடும் கட்டுவேன்

மினுமினுப்புத் தாளைச் சுற்றித்

தங்கக்கட்டி ஆக்குவேன்”

எறும்பு முதல் யானை வரை அனைத்து உயிர்களும் வாழ்கிற சிறுவர்களின் அதிசய உலகமாக இப்புத்தகம் இருக்கின்றது.  இதில் நூலின் தலைப்பான ‘சிறகு முளைத்த யானை’ பாடல், நல்ல கற்பனைக்கு ஒரு எடுத்துக்காட்டு!

“ஒருநாள் இரவில்

சிறகு முளைத்த

யானை வந்தது – மேகம்

ஊர்வல மாகப்

போகும் வானில்

பறந்து வந்தது.

“வருவாய்” என்றே

என்னைத் தூக்கி

வைத்துக் கொண்டது – வானில்

வட்டம் போட்டுச்

சுற்றிக் காட்டி

இன்பம் தந்தது!

……………………………………..”

இனிய ஓசை நயமிக்க நாட்டுப்புறப்பாடல் பாணியில் அமைந்த பாடல்களும் இதிலுண்டு.  ‘பாறைக் கூட்டங்களின் பயணம்’ என்ற பாடலிலிருந்து, சில வரிகள் மட்டும்:-

காடு நல்ல காடு

காட்டுக்குள்ளே

வண்டி போக

ரோடு நல்ல ரோடு!

ரோடு நீள ரோடு

ரோட்டு வழி

போகும் காரில்

மொத்தம் ஆறு பேரு!

ஆறு பேரும் யாரு

ஐயப்ப சாமி மாரு

………………”

சிறுவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தந்தை பெரியார் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் இதில் பாடல்கள் உள்ளன.   மெளனவிரதம் இருக்கும் செல்போன்கள், மாநாடு நடத்தும் புத்தகங்கள் போன்று புதுமையான கற்பனை கலந்த தலைப்புகளிலும், பாடல்கள் உள்ளன.  

சிறுவர்க்கு அவசியம் வாங்கிக் கொடுத்துப் பாடச் செய்யுங்கள்.

வகைசிறுவர் பாடல்
ஆசிரியர்கிருங்கை சேதுபதி
வெளியீடுபழனியப்பா பிரதர்ஸ், 25 பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை,சென்னை-14
விலை₹ 140/-

Share this: