ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள். இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம். இருவரும் பள்ளி விடுமுறையில் இக்கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்குச் சென்று, அங்கு மாமா பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிப் பொழுதைக் கழிக்கிறார்கள்.
ஆம்பல் பூ பறிப்போமா? சீம்பால் சுவைப்போமா? பாவைக்கூத்து பார்ப்போமா? என்று பெரும்பாலான அத்தியாயத்தின் தலைப்புகள் இந்நாவலை வாசிக்கும் குழந்தைகளுக்குச் சுவாரசியத்தைக் கூட்டும் விதமாகக் கேள்விகளாக அமைந்துள்ளன.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்கு என்பது மொபைல் போனும், தொலைக்காட்சியும், கணினியும் தாம். வீட்டுக்கு வெளியே கிராமத்துக் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்க விளையாட்டுகள் ஏராளம் உள்ளன என்பதை இந்நாவல் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
மேலும் இயற்கையை நேசிக்க வேண்டும், பிற உயிர்களிடத்து அன்பு செலுத்த வேண்டும், பகுத்துண்டு வாழ்தல் சிறந்தது போன்ற உயரிய கருத்துக்களையும் வாசிக்கும் குழந்தைகள் மனதில், இக்கதை மூலம் பதிய வைக்கின்றார் ஆசிரியர்.
அரசு, இலந்தை, புளி ஆகிய மரங்கள், இரவில் மட்டுமே வெளிவரும் இரவாடி ஆந்தை, வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கிராமத்து விளையாட்டுகள், பாரம்பரிய கலையான பாவை கூத்து, விடுகதைகள் என இந்நாவலில் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமுள்ளன.
சிறுவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களும், இந்நூலை வாசிக்கலாம். அவர்களது இளம்வயது மலரும் நினைவுகளை மீட்டெடுக்க இந்நாவல் உதவும். சிறுவர்களுக்கு அவசியம் இந்நூலை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | மருத்துவர் சூர்யா |
வெளியீடு | லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18 (+91 98412 36965) |
விலை | ₹ 60/- |
ஆசிரியர் குழுவிற்கு மிக்க நன்றி 😍😍😍😍😍