பென்சில்களின் அட்டகாசம் – குழந்தைகளுக்கான கதை

Pencil_1

‘பென்சில்களின் அட்டகாசம்’ பெரிய அளவில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் வெளிவந்துள்ள குழந்தைகளுக்கான கதைப்புத்தகம்.

புத்தக முன்னட்டைப் பக்கத்தில் தமிழிலும், பின்னட்டைப் பக்கத்தில் ஆங்கிலத்திலும் கதை கொடுக்கப்பட்டுள்ளது.  எனவே குழந்தை தனக்குப் பிடித்த மொழியில், வாசிக்கும் வசதி உண்டு. 

மூன்றாம் வகுப்பு மாணவர்களின் பென்சில்கள் அனைத்தும் சேர்ந்து பொம்மை காரில் சுற்றுலா செல்ல முடிவெடுக்கின்றன.  எனவே பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது, பென்சில்கள் மட்டும், பைகளிலிருந்து வெளியில் வந்து மேஜைக்குள்ளே ஒளிந்து கொள்கின்றன. 

பின் எல்லாம் சேர்ந்து பொம்மை காரில் பயணம் சென்று பள்ளியின் பின்புறமிருக்கும் ஐந்தடி ஊற்றில் குளிக்கின்றன.  இவற்றைத் தேடி பொம்மை போலீஸ் காரில் இவற்றின் எதிரிகளான ஷார்ப்பனர்கள் வருகின்றன.  பயத்தில் ஒரு பென்சிலுக்கும் உச்சா வருகின்றது!

எதிரிகளிடமிருந்து பென்சில்கள் எப்படித் தப்பித்தன? மீண்டும் மாணவர்களிடம் அவை எப்படிச் சென்று சேர்ந்தன? பென்சில் இல்லாததால் ஹோம் ஒர்க் செய்ய முடியாமல், மாணவர்கள் எவ்வாறு அவதிப்பட்டார்கள்? என்பதையெல்லாம் இக்கதை சுவையாகவும் குழந்தைகள் ரசிக்கும் விதத்திலும் விவரிக்கின்றது. 

பென்சில் உலகத்தில் வயதான பென்சில்கள் குள்ளமானவை; உயரமான பென்சில்கள் இளமையானவை என்ற உண்மை ரசிக்க வைக்கிறது!

1565 ஆம் ஆண்டு கிராபைட் கண்டுபிடிக்கப்பட்டதும் பென்சில் வந்தது; ஒரு பென்சிலை வைத்து எவ்வளவு நீளம் கோடு வரையலாம்? பென்சில் என்ற வார்த்தை எதிலிருந்து வந்தது? என்பன போன்ற பென்சில் குறித்து அறிய வேண்டிய செய்திகளையும், இறுதியில் தொகுத்துத் தந்திருப்பது சிறப்பு.   

குழந்தைகளுக்குப் புரியக்கூடிய மிகவும் இலகுவான மொழி. கறுப்பு வெள்ளை படங்களுடன், குழந்தை வாசிக்க ஏதுவாக பெரிய எழுத்துகளில் அமைந்துள்ள புத்தகம்.

இந்தப் ‘பென்சில்களின் அட்டகாசம்’ கதையைத் தொடர்ந்து, தற்போது பென்சில்களின் அட்டகாசம் 2.0. என்ற புத்தகமும் வெளிவந்துள்ளது.

குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் கதை (தமிழ் & ஆங்கிலம்)
ஆசிரியர்விழியன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 (+91 8778073949)
விலை₹ 150/-

Share this: