பசுமைப்பள்ளி

Pasumai_palli_picI

காலநிலை மாற்றம் காரணமாக புவியில் மனித இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்காலத்தில், இளந்தலைமுறை சூழலியல் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். 

தமிழ் மண்ணின் இயல்புகளையும், தாவரங்களையும், பழந்தமிழ் இலக்கிய மரபுகளையும் அடிப்படையாகக் கொண்டு, நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாழ்வியல் செய்திகளையும், இயற்கை சுற்றுச்சூழல் பாடங்களையும், இந்நூல் உரையாடல் மற்றும் கேள்விபதில் மூலமாகச் சுவாரசியமாக அறிமுகப்படுத்துகிறது. 

இது போன்ற ஒரு பசுமைப்பள்ளி, நம் குழந்தைகளுக்கு உண்மையாகவே அமைந்தால், கல்வி கற்கண்டாய் இனிக்கும். பசுமைப்பள்ளியின் முதல் பாடமே, வாசிக்கும் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 

“உலகின் ஆபத்தான விலங்கு உள்ளே உள்ளது; ஒவ்வொருவரும் மூடியைக் கவனமாகத் திறந்து பார்க்கவும்” என்ற அறிவிப்பைப் பார்த்துவிட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவராகப் பயந்து கொண்டே பெட்டியின் மூடியைத் திறந்து பார்க்கிறார்கள்.  உள்ளே எந்த விலங்கு இருந்தது என்பதை அடுத்தவருக்குச் சொல்லக் கூடாது.  ஒவ்வொரு குழந்தையும் மூடியைத் திறந்தவுடன் நகைத்தாலும், அதன் மூலம் அவர்கள் அதிர்ச்சிகரமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறார்கள்.

அடுத்தடுத்த பாடங்களை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என நம் பருவகால வரிசையில் அமைத்திருப்பது நன்று.  மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நம் நிலத்தின் வகைகளையும் அவற்றுக்குரிய ஐந்திணைகளையும், தாவர வகைகளையும், யாமம், வைகறை,காலை என்ற ஒரு நாளைய பொழுதுகளையும், இப்பாடங்கள் மூலம் குழந்தைகள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

மண்புழு, தேனீ, ஓங்கில்,வெளவால் போன்ற நம் உயிரினங்களின் சிறப்புகளையும், இயற்கையை அழித்த மனிதர்களின் நடவடிக்கைகளால் இந்த உயிரினங்களின் தற்போதைய பரிதாபகரமான நிலையையும், இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சூழல் சீர்கேட்டையும், இந்நூலை வாசிப்பதன் வாயிலாகக் குழந்தைகள் தெரிந்து கொள்வார்கள்.

இதில் உள்ள பல தகவல்கள் பெரியவர்களுக்கே தெரியாதவை.  கெட்டியான அட்டையில், தரமான தாளில், கருப்பு வெள்ளை ஓவியங்களுடன் கூடிய சிறப்பான வடிவமைப்பு. அவசியம் இந்நூலை வாங்கிக் குழந்தைகளோடு சேர்ந்து வாசியுங்கள்.

வகைசிறார் சூழலியல் நூல்
ஆசிரியர்நக்கீரன்
வெளியீடு:-காடோடி பதிப்பகம்,6, விகேஎன் நகர், நன்னிலம்-610105. செல் 8072730977.
விலைரூ 100/-
Share this: