பறவைகள் பலவிதம்-23 – நீலவால் பஞ்சுருட்டான்

Beeeater_pic

நீலவால் பஞ்சுருட்டான்(Blue-tailed bee-eater),செந்தலைப் பஞ்சுருட்டான் (chesnut -headed bee-eater), பச்சைப் பஞ்சுருட்டான் (Small Green bee-eater), ஐரோப்பா பஞ்சுருட்டான் (European bee-eater), காட்டுப் பஞ்சுருட்டான்(Blue-bearded bee-eater), என்பவை, இவற்றின் சில வகைகள். தமிழ்நாட்டில் ஆறு,குளம் போன்ற நீர் நிலைகளுக்கு அருகில், இதனைப்  பார்க்கலாம்.

இதன் உடலின் அடிப்பகுதியும், வாலும் நீல நிறத்தில் இருக்கும். மேல்பகுதி மஞ்சள் கலந்த பச்சை நிறம். தொண்டைப் பகுதி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறம். கறுப்பு நிற அலகு பூச்சிகளைப் பிடிக்க வசதியாக நீண்டு இருக்கும். கண்ணுக்கு மை தீட்டியது போல், அழகான கறுப்புப் பட்டை கோடுகள் இருக்கும்.  ஆணும், பெண்ணும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். இவை கூட்டமாய் வசிக்கின்றன. ஈ,தேனீ,தட்டான்,வண்டு,வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சிகளைப் பிடித்துத் தின்கின்றன.

இது ஒரு இடத்தில் உட்கார்ந்தபடி பூச்சியை எதிர்பார்த்துக் காத்து இருக்கும். பூச்சி தென்பட்டால் உடனே பறந்து, அதனைப் பிடிக்கும். மீண்டும் ஏற்கெனவே உட்கார்ந்து இருந்த இடத்தில், வந்து உட்காரும். இரையை ஒன்றிரண்டு முறை கிளைகளில் அல்லது கம்பிகளில் அடித்து, உயிர் இழக்கச் செய்து, பின்பு தின்னும்.

இது நீர் நிலைகளுக்கு அருகே உள்ள மணல் திட்டுகளில், செங்குத்தான வங்கு குடைந்து முட்டை இடும். அந்தப் பொந்து இரண்டு மீட்டர் நீளம் கூட இருக்க வாய்ப்புண்டு. ஆண்,பெண் இரண்டும் அடைகாக்கும்.

என்ன சுட்டிகளே? நீலவால் பஞ்சுருட்டான் பற்றித் தெரிந்து கொண்டீர்களா? அடுத்த மாதம், இன்னொரு பறவையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

(படம் – நன்றி – விக்கிப்பீடியா)

Share this: