இந்த நூலில் 4 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் மூன்று கதைகளை ஞா.கலையரசியும், நான்காவது கதையைச் சிறார் எழுத்தாளர் விழியனும் எழுதியுள்ளார்கள்.
‘தேவதை தந்த பரிசு’ என்ற முதல் கதையில், சிறுவன் ஒருவன் விழுந்த பல்லை எடுத்துத் தலையணைக்குக் கீழே வைக்கிறான். அவன் ஒரு கதையில் படித்த மாதிரி, இரவில் தேவதை வந்து பல்லை எடுத்துக் கொண்டு, தங்கக் காசு வைக்குமென்று எதிர்பார்க்கிறான். அவன் எதிர்பார்த்தபடி, தேவதை வந்ததா? தங்கக்காசு வைத்ததா? என்பதைக் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
‘நிலாப்பாட்டி’ என்ற இரண்டாவது கதையில், வாணி பறக்கும் தட்டில் பயணம் செய்து, நிலாவுக்குப் போகிறாள். நிலாப் பாட்டி அவளுக்கு ருசியான வடை சுட்டுத் தருகிறார். சூரியன் பற்றியும், விண்மீன்கள் பற்றியும், சில அறிவியல் உண்மைகளைப் பறக்கும் தட்டு மூலம் தெரிந்து கொள்கிறாள்.
‘உயிர் காப்பான் தோழன்’ என்ற மூன்றாவது கதை, ஒரு சிங்கக்குட்டிக்கும் ஒரு குரங்கு குட்டிக்கும் இடையேயான, உண்மையான நட்பு பற்றிச் சொல்கிறது.
‘சீசர்’ என்பது நாலாவது கதை. ஒரு நகரத்தில் இருந்த எறும்புகளைக் காட்டுக்குத் துரத்த வேண்டுமென்று, கரப்பான் பூச்சி தலைவன் திட்டமிடுகின்றது. அதற்காக சீசர் என்ற புல்லாங்குழல் வாசிக்கும் எலியின் உதவியை நாடுகின்றது. சீசர் புல்லாங்குழல் வாசிக்கத் துவங்கியவுடன், அதன் இசையில் மயங்கி, எறும்புகள் சாரி சாரியாக, அதன் பின்னால் செல்கின்றன. ஆனால் ஒரே ஒரு கிழட்டு எறும்பு மட்டும் போகவில்லை.தன் பின்னால் வராததற்கான காரணத்தைச் சீசர் அந்த எறும்பிடம் கேட்கின்றது. அது என்ன காரணம் சொன்னது? கரப்பான் பூச்சி தலைவன் சொன்னது போல், சீசர் எல்லா எறும்புகளையும் நகரத்தை விட்டுக் காட்டுக்கு அனுப்பி விட்டதா என்று தெரிந்து கொள்ள, இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.
வழ வழ தாளில் அழகான வண்ணப்படங்களுடன் இருக்கும் இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள். 6- 12 வயது குழந்தைகளுக்கான புத்தகம்.
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர்கள் | ஞா.கலையரசி & விழியன் |
வெளியீடு:- | எஸ்.ஆர்.வி.தமிழ்ப் பதிப்பகம், சமயபுரம்,திருச்சி. விற்பனை உரிமை:- பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 (044-24332924) |
விலை | ரூ 60/- |