நாட்டுப்புறப் பாடல்களும், சிறார் இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும்- 1

Thalattu_pic

நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், வாய்மொழி இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து ஆராயும் இயலே நாட்டுப்புறவியல்.  இம்மக்களின் உணர்வு, கவிதை புனையும் ஆற்றல், கற்பனை வளம் ஆகியவற்றை நாட்டுப்புறப் பாடல்கள் எடுத்தியம்புகின்றன.

இவை ஏட்டிலோ எழுத்திலோ இடம்பெறாவிட்டாலும், தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகக் கடத்தப்பட்டு, மக்களின் நெஞ்சங்களிலே நீங்கா இடம்பெற்றவை.  “எழுத்திலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடியென்றால், நாட்டுப்புற இலக்கியம் சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடி” எனலாம்.

நாட்டுப்புறப் பாடல்கள் (Folk songs), ), நாட்டுப்புறக் கதைகள் (Folk tales) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் (Folk Ballads) புராணங்கள் (Myths),  பழமொழிகள் (Proverbs), விடுகதைகள் (Riddles) ஆகியவை,  நாட்டுப்புற இலக்கியத்தில் அடங்கும்.

நாட்டுப்புறப் பாடல்கள் (Folk songs):-

நாட்டுப்புறப் பாடல்கள் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன.  மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் இவற்றின் பாடுபொருளாக அமைந்துள்ளன.  இப்பாடல்களில் ஓசை, உணர்ச்சி, சந்தம், இனிமை இருப்பதுடன், எளிய பேச்சு வழக்கில் அமைந்து, கேட்போர் மனதில் பதியும்படியிருக்கும். ஒலிநயம் என்பது பாடல்களின் உயிர்நாடியாக அமைந்திருக்கும்.

பல சமயங்களில் இலக்கண வரம்புக்கு உட்படாமல் இருப்பதால், இவற்றைத் தாமாக மலர்ந்து மணம் வீசும் காட்டுப் பூக்களுக்கும் மலையருவிக்கும் ஒப்பிடுகின்றனர், அறிஞர் பெருமக்கள்..

முனைவர் சு.சக்திவேல் அவர்கள், ‘நாட்டுப்புற இயல் ஆய்வு’’ என்ற தம் நூலில்,  இப்பாடல்களை எட்டாக வகைப்படுத்துகிறார்.

1.            தாலாட்டுப்பாடல்கள்

2.            குழந்தைப்பாடல்கள்

3.            காதல் பாடல்கள்

4.            தொழில் பாடல்கள்

5.            கொண்டாட்டப் பாடல்கள்

6.            பக்திப் பாடல்கள்

7.            ஒப்பாரி

8.            பன்மலர்ப்பாடல்கள்

இவற்றில் முதலிரண்டு மட்டும், சிறார் இலக்கிய வகைக்குள் அடங்குபவை என்பதால் அவற்றைப் பற்றிப் பார்ப்போம்,.

I – தாலாட்டுப் பாடல்கள்

தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கிய பரிசு தான் தாலாட்டு” என்கிறார் தமிழறிஞர் தமிழண்ணல்.  இன்றைய இலக்கியம் எல்லாவற்றுக்கும் தாய், அடிப்படை, வேர், ஊற்று, மூலம் தாலாட்டே ஆகும். 

“தாலாட்டுப் பாடல்களைக் கருவாகக் கொண்டு எழுந்த இடைக்கால இலக்கியங்கள் ‘தாராட்டு’ என்றும், பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்கள் ‘தாலேலோ’ என்றும் குறிப்பிடுகின்றன.  தமிழ் மொழியில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடியவர் பெரியாழ்வார் ஆவார்” என்கிறார் முனைவர் சு.சக்திவேல் அவர்கள். 

பெரியாழ்வார் கண்ணனைத் தொட்டிலில் இட்டு,

“மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி  

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே தாலேலோ

வையம் அளந்தானே தாலேலோ” என்று தாலாட்டுகிறார்.

தாலாட்டு என்பது சில இடங்களில் ராராட்டு என்று வழங்குகிறது.  மலையாளத்தில் தாராட்டு, தெலுங்கில் ஊஞ்சோதி, கன்னடத்தில் கோகுல என்று வழங்கப்படுகின்றது..  “சம்ஸ்கிருத மொழியில் தாலாட்டே இல்லை” என்கிறார், கரிசல் இலக்கிய பிதாமகன் கி.ராஜநாராயணன்.

முனைவர் சு.சக்திவேல் “நாட்டுப்புற இயல் ஆய்வு” என்ற தம் நூலில், தாலாட்டுப் பாடல்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்.  அவை வருமாறு:-

1.            குழந்தை பற்றியன. 

2.            குழந்தைக்குரிய கருவி பற்றியன.  (சங்குப்பாலாடை, வெள்ளிப்பாலாடை, தொட்டில், அரைஞாண் போன்றவை)

3.            குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன (உறவினரின் செல்வம், அறச்செயல், பக்தி, வீரதீரம், சிறுமை)

1.            குழந்தை பற்றிய தாலாட்டுப் பாடல்கள்:-

இவ்வகையில் குழந்தைக்காகத் தாய் பட்ட வேதனைகள், மகப்பேற்றுக்காகச் செய்யும் அறம்/தவம்/நோன்பு, குழந்தை பிறந்தபிறகு சமூகத்தில் தாய் பெற்ற ஏற்ற நிலை குறித்து மகிழ்ச்சி, பெண்/ஆண் குழந்தையை வர்ணித்தல், குழந்தையின் வருங்காலம், பெண் குழந்தையை அலங்கரித்தல் (வளையலிடல்) போன்றவை குறித்துப் பாடும் தாலாட்டுப் பாடல்கள் இவ்வகையில் அடங்குவன.

குழந்தையில்லாப் பெண்ணை இச்சமூகம் மலடி என வசை பாடுவதால், பிள்ளை வரம் வேண்டிப் பெண்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் அதிகம் உள்ளன.

கிண்ணியிலே போட்ட சோற்றைக்

கீறித் தின்ன பிள்ளையில்லை

ஊருக்குப் போகையிலே

உடன்வரப் பிள்ளையில்லை”

என்று வருந்துகிறாள் ஒருத்தி.

இன்னொருத்தியோ

பூக்கின்ற காலத்திலே

பூமாறிப் போனேனே!

காய்க்கின்ற காலத்திலே

காய்மாறிப் போனேனே!” என ஏங்குகிறாள்.

அடுத்து மலடியாக இருந்து, மற்றவர்களின் ஏச்சுக்கு இடமாக இருந்த தன்னைச் சமுதாயத்தில் உயர்த்திவிட்ட தன் குழந்தையைப் பார்த்து மகிழ்வாகப் பாடும் தாலாட்டுகள் பலவுள்ளன.

பத்து வருசமா பாலனில்லா வாசலிலே

கைவிளக்கு கொண்டு கலிதீக்க வந்தவனோ?

விளக்கிலிட்ட எண்ணெய் போல வெந்துருகி நிக்கயிலே

கலத்திலிட்ட பால்போல கைக்குழந்தை தந்தாரே

மலடி மலடி என்று மானிடர்கள் ஏசுகிறார்

மலட்டுக்குலமதையே நீ மறப்பிக்க வந்தவனோ

ஆராரோ……….

பொன் தூரிக் குள்ளிருந்து பொன்குயிலா கூவறது?

அன்னமோ கத்தறது ஆண்குயிலா கூவறது?

மலடி கண்டா வையாளோ வாழைக்குலை சாயாதோ

இருசி கண்டா வையாளோ ஈழக்குலை சாயாதோ”   

நம் நாட்டில் முதுமையில் பெற்றோர்  பிள்ளைகளைச் சார்ந்திருப்பது வழக்கம். எனவே குழந்தையில்லாதவர்களைச் சமூகம் செய்கின்ற நிந்தனைக்காக மட்டுமின்றி, குழந்தை இல்லையென்றால் முதுமையில் பற்றுக்கோடு இல்லாமல் போய்விடுமே என்ற கவலையும் ஒரு தாயை மலட்டுத் தன்மைக்குப் பெரிதும் அஞ்சவைக்கிறது என்று முனைவர் சரசுவதி வேணுகோபால், ‘தமிழக நாட்டுப்புறவியல்’ எனும் தம் நூலில் எழுதியுள்ளார்.  மேலும் தாலாட்டில் பெண் குழந்தையை விட ஆண் குழந்தையே பெரிதும் போற்றிப் பாடப்படுகின்றது என்று சொல்லி, அதற்கு எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கியுள்ளார்.

“ஆண்குழந்தை 1000 தாலாட்டுக்களில் புகழ்ந்து பேசப்படுகிறது.  அவன் எதிர்கால வெற்றிகள் முன்கூட்டியே கற்பனை செய்து சொல்லப்படுகின்றன.  ஆனால் பெண் குழந்தையாக இருந்தாலோ தாலாட்டு ஊமையாகி விடுகின்றது” என்று நாட்டுப்புற ஆய்வாளர் ஒருவர் சொல்லியிருப்பதாக, முனைவர் சரசுவதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘உலகாள வந்தவனோ?’ எனப் பாராட்டிப் பாடும் ஆண்குழந்தையின் தாலாட்டு இது:-

“சீரார் பசுங்கிளியே தெகட்டாத செந்தேனே

பேரார் குலக்கொழுந்தே பெருமானே கண்வளரீர்

இருகண் மணியே இலஞ்சியமே என்னுயிரே

ஒருகுடை கீழ்நீ உலகாள வந்தவனோ?

தெள்ளமுதக் கும்பமே தித்திக்கும் செங்கரும்பே- எங்கள்

பிள்ளைக்கலி தீர்க்கவந்த பெரியமத குஞ்சரமோ

ஆராரோ ஆராரோ ராரிராரி ராராரோ”

ஆளப்பிறந்தான்’ என்றும், ‘அரசு’ என்றும், ஆண்குழந்தையைப் போற்றிப் பாடும் பாடலிது:-

…………………………………………….

ஆளப் பிறந்தரசோ பஞ்சவர்கள் தந்தரசோ

மண்ணில் பிறந்தரசோ மகதேவர் தந்தரசோ

ஆளப் பிறந்தானே அரசுக்குக் காதுகுத்த

கோட்டை சொரியுங்கோ குத்துங்கோ பச்சநெல்லை

எள்ளைக் கலவுங்கோ வெல்லத்தைப் போடுங்கோ

தேங்காயைப் போட்டுச் செலுத்துங்கோ காப்பரிசி

வாரி வழங்குங்கோ வள்ளலுக்குக் காதுகுத்த

அள்ளி வழங்குங்கோ அரசுக்குக் காதுகுத்த”

பெண் குழந்தையின் தாலாட்டு இது:-

ஆரடிச்சு நீயழுதே – உன்

அங்கயற்கண் மைகரைய

மைகரைய நீயழுதா மாயாளோ ஒன்சேனை

பொட்டழிஞ்சு நீயழுதா பொறுக்குமோ ஒன்சேனை

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது

வாய்க்காலாப் பெருகி வழிப்போக்கர் காலலம்பி

இஞ்சிக்குப் பாஞ்சு எலுமிச்சைக்கு வேரோடி

நார்த்தைக்குப் பாஞ்சு நல்லபிலா பிஞ்சுவிட்டு

மஞ்சளுக்குப் பாஞ்சு மருதாணி வேரோடி

வாழைக்குப் பாயறத்தே மாறித்தாம் கண்ணீரு”

ஒரு தாய் வளைச்செட்டியாரை அழைத்துத் தன் பெண் குழந்தைக்கு வளையிலிட்டு மகிழும் காட்சி:-

“கறுத்த வளையெடடா கல்யாண சுந்தரிக்கு

செகப்பு வளையெடடா சுந்தரனார் பேத்திக்கு

பச்சை வளையெடடா பாண்டியனார் பேத்திக்கு

நீல வளையெடடா நித்திய கல்யாணிக்கு

கறுப்பும் செகப்புமா கலந்தருக்கு செட்டிநீ

பச்சையும் நீலமுமா பாத்தருக்கு செட்டிநீ

ராராரோ ராராரோ ராரிரரோ ராராரோ”

2.            குழந்தைக்குரிய கருவி

குழந்தைக்குப் பயன்படுத்தும் சங்கு, வெள்ளிப் பாலாடை, தொட்டில், அரைஞாண் கயிறு போன்றவை குறித்துப் பாடும் பாடல்கள் இரண்டாம் வகை.

சான்றாகத் தாய்மாமன் வாங்கி வந்த சங்கின் அழகு குறித்துத் தாய் பாடும் பாடலிது:-

கடைக்குக் கடை பார்த்துக்

கல்லிழைத்த சங்கெடுத்துச்

சுத்திச் சிகப்பிழைத்து

தூருக்கே பச்சைவைத்து

வாய்க்கு வயிரம் வைத்து

வாங்கி வந்தார் தாய்மாமன்”

என்ற பாடல் வரிகளும்

 “வைரம் பதிச்ச மாணிக்கத் தொட்டில்

வைச்சாட்ட சொல்லி  வரிசையிட்டார் ஒம்மாமன்”

என்ற இன்னொரு பாடல் வரிகளும் சங்கின் அழகு, மாணிக்கத்தால் ஆன தொட்டில் எனக் குழந்தைக்குரிய கருவிகளின் சிறப்புகளைச் சொல்வதுடன், கூடவே தாய் மாமன் சிறப்பையும், அவர் தரும் சீரையும் சிறப்பித்துச் சொல்கிறது.

3.            குழந்தைகளின் குலப்பெருமை, உறவினர் பெருமை பற்றியன)

உறவினரின் செல்வம், அறச்செயல், பக்தி, வீரதீரம், சிறுமை ஆகியவை குறித்துப் பாடப்படும் பாடல்கள் இப்பிரிவில் அடங்குவன.

“பச்சை வளையெடடா  பாண்டியனார்  பேத்திக்கு

செகப்பு வளையெட்டா  சுந்தரனார்  பேத்திக்கு”

பாண்டியனார், சுந்தரனார் எனக் குலப்பெருமை பேசும் பாடல் வரிகள் இவை.

ஆரிரரோ ஆராரோ

சட்டைமேலே சட்டை போட்டு- உங்களப்பன்

சருகைப்பட்டை மேலே போட்டு

தலைச்சவரம் பண்ணிக்கிட்டு-உங்களப்பன்

தலைப்பாவும் வச்சுக் கிட்டு

கோயம்புத்தூர் போறதுக்கு-உங்களப்பன்

குடையைக் கையில் புடிச்சிக்கிட்டு

பாதம் ரண்டும் நோகாமல்-உங்களப்பன்

பாதகொரடும் போட்டுக்கிட்டு

சாரட்டு வண்டிகட்டி-உங்களப்பன்

சலங்கை போட்ட மாடுகட்டி

கோயம்புத்தூர் போறாரு-உங்களப்பன்

………………………………..”      (காற்றில் வந்த கவிதை-பெ.தூரன்)

பெரும்பாலான பாடல்களில் தாய்மாமன் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளார்.

“அஞ்சுகிளி யெழுதி – ஒங்க

ஆசைமாமன் பேரெழுதி

கொஞ்சும் கிளி ரெண்டெழுதி

கொடுத்துவிட்டார் ஒம்மாமன்

கடைக்குக் கடைபாத்து கல்பதிச்ச சங்கெடுத்து

சுத்துக்குப் பச்சையிட்டு சூளவரக் கல்லளுத்தி

வாய்க்கு வைரமிட்டு வாங்கி வந்தார் உன் மாமன்

தங்கம் பெறந்து தவளரெண்டு மாதமிங்க

தங்கம் பொன்வெட்டி, தளங்கொண்டான் உன் மாமன்

வைரம் பதிச்ச மாணிக்கத் தொட்டில்

வச்சாட்ட சொல்லி வரிசையிட்டார் ஒம்மாமன்”

மாமன் பெண் குழந்தைக்குச் சீர்தரும் பழக்கத்தையும், குழந்தையின் விளையாட்டுப் பொருட்களையும், இப்பாடல் சொல்கிறது:-

 “ஏலங் குழலாளே என்னென்ன கேட்டழுதே

ஆட்டி விளையாட அம்மாலை கேட்டழுதே

தட்டி விளையாட தங்கமணி கேட்டழுதே

ஒட்டி விளையாட உருண்டைமணி  கேட்டழுதே

அத்தனையும் கொண்டு அருகே வந்தார் அம்மானார்”

நாட்டுப்புற இலக்கியம் குழந்தை இலக்கியத்தின் வேர் என்பதால்  நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம், குழந்தை இலக்கியத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. 

வாய்மொழியாக வந்த நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடலுக்கு, இலக்கிய வடிவம் கொடுத்துக் கவிஞர் சி. தேசிக விநாயகம் அவர்கள் எழுதிய ‘தாலாட்டு’ பாடல், ‘மலரும் மாலையும்’ தொகுப்பில், ‘மழலை மொழி’ என்ற பிரிவில்  இடம்பெற்றுள்ளது.

கவிமணியின் தாலாட்டுப் பாடலில் இருந்து, சில வரிகள் மட்டும் கீழே:-

ஆராரோ? ஆராரோ?

ஆரிவரோ? ஆராரோ?

மாமணியோ? முத்தோ?

மரகதமோ? மன்னவர்தம்,

தாம முடிமீது

தயங்கும் வயிரமதோ?

முல்லை நறுமலரோ?

முருகவிழ்க்குந் தாமரையோ?

மல்லிகைப் பூவோ?

மருக்கொழுந்தோ? சண்பகமோ?

…………………….

……………………………………..

மாங்கனியும் நல்ல

வருக்கைப் பலாக்கனியும்

வாங்கியுன் அம்மான்

வருவார்; அழவேண்டாம்!

கண்ணுறங்கு, கண்ணுறங்கு;

கண்மணியே!  கண்ணுறங்கு;

ஆராரோ ஆராரோ?

ஆரிவரோ? ஆராரோ?

நாரா.நாச்சியப்பன் அவர்கள் ‘பாடு பாப்பா’ என்ற நூலில், நாட்டுப்புறப் பாடலின் தாக்கத்தில் எழுதியுள்ள தாலாட்டுப் பாடலிது:-

கண்ணே கண்ணுறங்கு! – கட்டிக்

கரும்பே கண்ணுறங்கு!

மண்ணைப் பொன்னாக்க – வந்த

மணியே கண்ணுறங்கு!

அன்பில் பிறந்துவந்த –இன்

அமுதே கண்ணுறங்கு!

என்னைப் பெற்றெடுத்த – என்

தாயே கண்ணுறங்கு!

பொன்னே கண்ணுறங்கு-புதுப்

பூவே கண்ணுறங்கு!

மின்னல் ஒளிக்கீற்றே – சுவைத்

தேனே கண்ணுறங்கு!

நாட்டுப்புறத் தாலாட்டுகளின் தாக்கத்தில், பல சிறந்த திரையிசைப் பாடல்களும் வெளிவந்துள்ளன.  அவற்றில் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற படத்தில் இடம்பெறும் அருமையான இந்தப் பாடலும் ஒன்று.  அதிலிருந்து சில வரிகள் மட்டும்:-

“அன்பில் மலர்ந்த நல்ரோஜா

கண்வளராய் என் ராஜா-என்

வாழ்விலே ஒளிவீசவே

வந்தவனே கண்வளராய்

தங்கத் தொட்டிலில் தாலாட்டியே

சுகுமாரனே சீராட்டியே

வெண்ணிலா காட்டியே

பாலன்னம் ஊட்டியே

கொஞ்சிடும் நாள் வந்திடுமே!

ஆ தாலோ தாலோ தாலோ

ஆ ராரோ ராரோ ராரோ”

(தொடரும்)

பின் குறிப்பு:-

இதிலுள்ள நாட்டுப்புறப் பாடல்கள் யாவும் முனைவர் சரசுவதி வேணுகோபால் அவர்கள் எழுதிய ‘தமிழக நாட்டுப்புறவியல்’ எனும் நூலிலிருந்தும், முனைவர் சு.சக்திவேல் அவர்கள் எழுதிய ‘நாட்டுப்புற இயல் ஆய்வு’ என்ற நூலிலிருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன.

Share this: