நாட்டுப்புறப் பாடல்களும், சிறார் இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் – 2

Nila_pic

நாட்டுப்புறப் பாடல்களில், தாலாட்டுக்கடுத்து வருபவை, குழந்தைப் பாடல்கள்.

2. குழந்தைப் பாடல்கள்:-

தாலாட்டுப் பாடலும், குழந்தைப்பருவ விளையாட்டுப் பாடலும் குழந்தைக்கு மொழியைக் கற்பித்து, நினைவாற்றலை மேம்படுத்திக் கற்பனையை வளர்க்கக் கூடியவை.  குழந்தைப் பருவம் மனித வளர்ச்சியில் மிக இன்றியமையாத பருவம்.  இப்பருவத்தில் அவர்களின் மனதில் பதியும் செய்திகள், பசுமரத்தாணி போல் ஆழமாகப் பதிவதற்குக் குழந்தைப் பாடல்கள் பெரிதும் துணைபுரிகின்றன.

குழந்தைப் பாடல்களின் பாடுபொருள் தெரிந்ததாகவும், எளிய நடையில் வயதிற்கேற்பவும் அமைவதோடு, இனிய சந்த நயத்தோடு குழந்தைகள் தாமே பாடி மகிழ்வனவாக இருக்கும். 

இப்பாடல்களில் ஆழ்ந்த நுண்ணிய கருத்துகள் இருக்க வேண்டியதில்லை.  ஒரு சில கருத்துகள் அமைந்த பாடல்களே போதுமானவை.  இவற்றில் பொருளிலிப் பாடல்களும் உண்டு.  இவற்றில் ஓசை நயமே முதலிடம் பெறும்.  செவிக்கின்பம் பயப்பதே நோக்கமாகக் கொண்டு விளங்கும். 

“மலை மேலே பஞ்சு

மாதுளங்காய் பிஞ்சு

தலைகாணி பஞ்சு

தவிட்டுப் புறாக் குஞ்சு”

என்பது பொருளிலிப் பாடலுக்கு, ஓர் எடுத்துக்காட்டு. இது பொருள் இல்லாமல், ஓசை இன்பத்தைத் தருகின்றது.

“மலை மேல மஞ்சு

மல்லிகைப் பூப் பஞ்சு

மாலை வெயில் கொஞ்சும்

வந்து விளையாடும்

தங்கத் தீவைப் போலே

பொங்கும் தீயைப் பாராய்” 

………………………………(பெ.தூரன்– மழலை அமுதம்)

 “இக்குழந்தைப் பாடல்கள் கல்லில் வார்த்த அடைகள் அல்ல; ஒரே அளவாக ஒரே நிறமாக இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்க.  வானில் பூத்த மலர்கள்.  காற்றில் மிதக்கும் கனிகள். இவை செய்யப்பட்டவை அல்ல; சிதறப்பட்டவை” என்று இப்பாடல்களின் அமைப்பு குறித்து முனைவர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

“குழந்தைப்பாடலுக்குப் பதவுரை, நயவுரை சொல்லிக்கொண்டிருக்க முடியாது.  பெரும்பாலான குழந்தைப்பாடல்களில் பொருளுள்ள பாடல்களைக் காணமுடியாது.  ஓசை நிறைவுள்ள பாடல்களே அதிகம் காணப்படும்.  இப்பாடல்களை எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையும், இனிமையும் இருக்கும்.  வட்டார வழக்குச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் அதிகம் காணலாம்” என்று முனைவர் சு சக்திவேல் கூறுகிறார்.

இக்குழந்தைப் பாடல்களை, இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்.

முதலாவது குழந்தைக்காக மற்றவர் பாடுவது.   இவற்றை மழலைப் பாடல்கள் எனலாம்.

தவழல், உண்ணல், சாய்ந்தாடல், கை வீசல், கை தட்டல், அம்புலி பார்த்தல், நாப்பயிற்சி போன்ற குழந்தையின் வளர்ச்சி நிலைக்கேற்ப பெற்றோரும், உற்றோரும் பாடுவது, முதல் வகையில் அடங்கும்.

இரண்டாவது குழந்தைகள் ஓடியாடும் சிறுவர்களாக வளர்ச்சியடைந்த பிறகு, அவர்களே  பாடும் பாடல்கள்  ஆகும்.

முதல் வகை:- மழலைப் பாடல்கள்

குழந்தை கை வீசும் போதும்,  சாய்ந்தாடும் போதும், அம்புலியை அழைத்து உணவூட்டும் போதும், பெற்றோர் குழந்தைக்குப் பாடும் பாடல்களான “கை வீசம்மா கை வீசு”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” நிலா நிலா வா வா, நில்லாமல் ஓடி வா” ஆகியவை நம்மிடையே மிகவும் பிரபலம். இவை நாட்டுப்புறப் பாடல்கள் என்றும், வாய்மொழியாக வழிவழி வந்தவையென்றும், பெரும்பாலோர் தவறாக எண்ணியிருக்கிறார்கள். 

குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில், எளிய சொற்களில் அமைந்த இவற்றைப் பாடி வளராத தமிழ்க் குழந்தைகளே இல்லை.   ஆனால் இவை நாட்டுப்புறப் பாடல் பாணியில், மயிலை சின்னத்தம்பி ராஜா (எம்.சி.ராஜா) என்பவர் இயற்றிய மழலைப் பாடல்கள்.  சிறுவர் இலக்கிய முன்னோடிகளில் இவர் முக்கியமானவர்.  ஏனோ இவரைக் கொண்டாட மறந்து விட்டோம்!

எம்.சி.ராஜா அம்பேத்கருக்கு முன்பே, அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக உழைத்தவர்.  இவர் ஆர். ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து, ‘கிண்டர்கார்டன் ரூம்’ (Kindergarten Room) என்ற தலைப்பில் மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இதன் மூன்றாம் பதிப்பு 1930 ஆம் ஆண்டில் வெளியானது.

இந்நூலில் தான்  ‘கை வீசம்மா கைவீசு’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘நிலா நிலா வா வா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா! போன்ற பல மழலைப் பாடல்கள் உள்ளன.  இந்நூல் சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டு, ஜெர்மனியில் வசிக்கும் முனைவர் சுபாஷிணி அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளை 2013-ல் மின்னூலாக வெளியிட்டுள்ளது.

“அகத்திக் கீரை பிண்ணாக்கு

அதிலே கொஞ்சம் நெய்வாரு

பிஞ்சி கத்திரிக் காய்பொரியல்

பின்னும் கொஞ்சம்  நெய்வாரு” என்பதும், இவர் எழுதிய பாடலே!

இவரது ‘சாய்ந்தாடம்ம்மா சாய்ந்தாடு’ பாடலின் தாக்கத்தில் கவிஞர் வாணிதாசன் எழுதிய பாடலிது:-

சாய்ந்தா டம்மா! சாய்ந்தாடு!

தங்கச் சிலையே! சாய்ந்தாடு

காயும் நிலவே சாய்ந்தாடு!

கண்ணே! மணியே! சாய்ந்தாடு!

……………………………

பாலும் தருவேன்!  சாய்ந்தாடு!

பழமும் தருவேன்! சாய்ந்தாடு!

மேலும் மேலும் சாய்ந்தாடு!

விலையில் மணியே!  சாய்ந்தாடு!

எம்.சி.ராஜா அவர்களின் ‘நிலா நிலா வா வா’ பாடலைப் போலக் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய ‘நிலாப்பாட்டு’ இது:-

“நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடி வா

பல காலம் இப்படிப்

பாடிப் பயன் இல்லையே!

……………………………….

உன்னை விரும்பி அழைத்துமே

ஓடிநீ வராததால்

விண்க லத்தில் ஏறியே

விரைவில் வருவோம் உன்னிடம்”

நான் எழுதிய நிலாப் பாட்டிலிருந்து, சில வரிகள் மட்டும்:-

“நிலா நிலா ஓடி வா

வெள்ளை நிலா ஓடி வா

பிள்ளை முகம் மலர வா

பாலமுது ஊட்ட வா

நிலா நிலா ஓடி வா

வெள்ளி நிலா ஓடி வா

அல்லி மலர் பூக்க வா

துள்ளி அலை குதிக்க வா

………………………………………….”

எம்.சி.ராஜா அவர்களின் பாடலின் தாக்கத்தில், அவருக்குப் பின் வந்த பலரும், ‘கை வீசம்மா கை வீசு’  பாடலைப் பலவிதமாக எழுதியிருக்கின்றனர். 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடலிது:-.

“கை வீசம்மா கை வீசு!

கடலை வாங்கலாம் கை வீசு!

நெய் உருண்டை கை வீசு!

நிறைய வாங்கலாம் கை வீசு!”

‘மழலையர் மணிப்பாடல்கள்’ என்ற நூலில், கவிஞர் வெற்றிச் செழியன்

“கைவீசம்மா கை வீசு

கூடி மகிழ்ந்து கை வீசு

குதித்து ஆடிக் கை வீசு” 

என்று பாடியுள்ளார்.

பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் மாத மின்னிதழில், நான் எழுதிய ‘கை வீசம்மா’ பாடலிது:-

“கை வீசம்மா கைவீசு

கடலுக்குப் போகலாம் கைவீசு

கப்பல் பார்க்கலாம் கைவீசு

அலையில் ஆடலாம் கைவீசு

கிளிஞ்சல் பொறுக்கலாம் கைவீசு

படகில் செல்லலாம் கைவீசு

பட்டம் விடலாம் கைவீசு

மண்வீடு கட்டலாம் கைவீசு

நண்டு புடிக்கலாம் கைவீசு

மீனு வாங்கலாம் கைவீசு

பொரிச்சித் தின்னலாம் கைவீசு!!”

இரண்டாவது வகை – சிறுவர் பாடல்கள்:-

இவற்றை வளர்ந்த சிறுவர்கள் தாமே கற்றுக் கொண்டு பாடுவர். இவற்றில் எண்ணுப்பயிற்சிப் பாடல்கள், அகரவரிசைப் பயிற்சிப் பாடல்கள், பக்திப் பாடல்கள், நீதிப்பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், பறவை, மிருகங்களைப் பற்றிய பாடல்கள், நாப்பயிற்சிப் பாடல்கள், வினா விடைப்பாடல்கள், விடுகதைகள் போன்றவை அடங்கும்.

எண்ணுப்பயிற்சி பாடலுக்கு “ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரே பூ பூத்துச்சாம்” என்று எல்லோருக்கும் தெரிந்த நாட்டுப்புறப் பாடலைச் சொல்லலாம்.  இது சிறுவர்க்கு 1 முதல் 10 வரை எளிதாகக் கற்பிக்க உதவும்.

இந்தப் பாணியில் கவிஞர்கள் பலர் பாடல்கள் இயற்றியுள்ளனர்.  அவற்றுள் பேராசிரியர் மயிலை ‘சிவமுத்து’ அவர்கள் எழுதிய பாடலும் ஒன்று. நிலாவை அழைத்துப் பாடுவது, நம் சங்கக் காலத்திலிருந்து தொடரும் வழக்கம். நிலாவை அழைக்கும் பாடலிலேயே, பேரா.சிவமுத்து அவர்கள், எண்ணுப்பயிற்சியையும் குழந்தைகளுக்குச் சேர்த்தளிக்கிறார்.

“வெள்ளை வெள்ளை நிலாவே

வெளியில் வந்து உலாவே

ஒன்று இரண்டு மூன்று

என்ப தற்குள் தோன்று

நான்கு ஐந்து ஆறு

நாங்கள் சொன்னோம் பாரு

ஏழு எட்டு ஒன்பது

ஏன் வராமல் நிற்பது?

பத்து நூறு ஆயிரம்

பறந்து வாநீ சீக்கிரம்”

‘உடற்பயிற்சி’ என்ற தலைப்பில் அமைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பாடலும்,

“ஒன்று இரண்டு சொல்லுங்கள்

ஓடி வந்து நில்லுங்கள்

மூன்று நான்கு எண்ணுங்கள்

முதுகை ஒட்டப் பண்ணுங்கள்

ஐந்து ஆறு கூறுங்கள்

அரசக் குதிரை ஏறுங்கள்

ஏழு எட்டு கொட்டுங்கள்

எல்லாம் கையைத் தட்டுங்கள்

ஒன்பது பத்து சொல்லுங்கள்

உடலை நிமிர்த்தி நில்லுங்கள்

……………………………………….”

எனக் குழந்தைகளுக்கு எளிதாக ஒன்று முதல் பத்து வரை, எண்ணுவதற்குப் பயிற்சி தருகிறது.

எண்ணுப்பயிற்சிப் பாடல்கள் போலவே, ஆத்திசூடி பாணியில் அகர வரிசையைக் குழந்தைகளுக்கு எளிதாகக் கற்றுத் தரவும், பல பாடல்களைக் கவிஞர்கள் இயற்றியுள்ளனர்.

அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா” என்பது, அகர வரிசையைக் குழந்தைகளுக்கு எளிதாகக் கற்பிக்கும் பாடல். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதோடு, பள்ளியில் முதல் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் இருந்ததால், தமிழ்நாடு முழுக்க மிகப் பிரபலமான பாடலும் கூட. 

நாட்டுப்புறப் பாடலின் தாக்கத்தில், எளிய சொற்களுடன் குழந்தைகள் பாடத்தக்க வகையில், இதை எழுதியவர்,  மே.வீ. வேணுகோபால் அவர்கள்.  இவரின் தமிழ்ப்புலமை காரணமாக ‘மகா வித்வான்’ என்றும்,  ‘இலக்கணத் தாத்தா’ என்றும் இவரை அழைத்தனர். 

அகர வரிசையைக் கற்பிக்கும் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடலிலிருந்து சில வரிகள் மட்டும்:-

                     “அ, ஆ என்றேனே.

                     அத்தை வீடு சென்றேனே.

                     இ, ஈ என்றேனே.

                     இட்டலி எட்டுத் தின்றேனே.

                     …………………………………

                     ஒள என்று சொன்னேனே.

                     ஆடிப் பாடிக் குதித்தேனே.

                     ஃ என்று சொன்னேனே.

                     அக்கக் காவெனச் சிரித்தேனே!”

அகர வரிசையில் அமைந்த, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடலிது:-

“அம்மா மிகவும் நல்லவள்!

ஆட்டித் தூங்கச் செய்தவள்!

இளைக்கக் கண்டு அழுதவள்!

ஈயை ஓட்டி நின்றவள்!

உழக்கு நெய்யைச் சோற்றிலே,

ஊற்றிப் பிசைந்து கொடுத்தவள்!

எடுத்துத் தூக்கி அணைத்தவள்!

ஏணை கட்டிப் போட்டவள்!

ஐயன் அப்பன் என்றவள்!

ஒளவைக் கதையைச் சொன்னவள்!

ஒப்பனைகள் செய்தவள்!

ஓயா தென்னைக் காப்பவள்!” (‘பாச்சோறு’ நூலின் முதல் பாடல்)

அக்காலக் கிராம விளையாட்டுக்களில் பாடலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும். “கொலை “கொலையா முந்திரிக்கா! நரி நரியைச் சுத்தி வா, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்? கூட்டத்திலே பார் கண்டுபிடி” என்பதும், “பூப்பறிக்க வருகிறோம், வருகிறோம் இந்த மாதத்தில்” என்பதும் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பாடல்கள்.

வெள்ளைக்காரன் அறிமுகம் செய்த புகைவண்டி வந்த பிறகு, குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு, ‘சிக்கு புக்கு ரயில் வண்டி’.

ரயில் வண்டி‘ என்ற தலைப்பில் பெ.தூரன் எழுதிய விளையாட்டுப்பாடலிது:-

 “குப்குப் குப்குப் போகுதுபார்

குமுறியே புகையும் பொங்குதுபார்

ஜக்ஜக் ஜக்ஜக் போகுதுபார்

தடதட கடகட ஓடுது பார்”

புகைவண்டி விளையாட்டு’ எனும் தலைப்பில், பெருஞ்சித்திரனார் எழுதியுள்ள பாட்டு இது:-

“புகையில் லாமல் கரியில் லாமல்

போகுதுவண்டி குப் குப் குப்

வகைவகை யான வண்டித் தொடர்கள்

வருமாம் பின்னே குப் குப் குப்

……………………………………………

வெட்ட வெளியில் மாலைப் பொழுதில்

விளையாடு வமே புகைவண்டி

கொட்டும் மழையில் கொளுத்தும் வெயிலில்

குப் குப் வண்டி செல்லாதே”

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நாட்டுப்புறப் பாடல் பாணியில் பல வேடிக்கைப் பாடல்களை எழுதியுள்ளார் அதிலிருந்து ‘கணபதி’ என்ற தலைப்பில் அமைந்த, ஒரு பாட்டு:-

“தொந்தி இல்லாத கணபதியாம்

துதிக்கை இல்லாத கணபதியாம்

தந்தம் இல்லாத கணபதியாம்

என்  தம்பியே

அந்தக்  கணபதியாம்!”

பெ.தூரன் நகைச்சுவை கலந்து ,எழுதிய வேடிக்கைப்பாடலிது:-

“தாடி நீண்ட தாத்தா

தடவி ஒருநாள் பார்த்தார்

மாடப் புறா ரண்டு

மைனாப் பறவை ரண்டு

காடைக் குருவி ரண்டு

கரிக் குருவியும் ரண்டு

தாடிக் குள்ளே தங்கி

கூடு கட்டி அங்கு

மூடி ஒளிந்து கொண்டு

முட்டை யிட்டன ரண்டு

தாடி நீண்ட தாத்தா

தடவி ஒருநாள் பார்த்தார்”

‘சிறகு முளைத்த யானை’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள, கவிஞர் கிருங்கை சேதுபதி இயற்றிய “பாறைக் கூட்டங்களின் பயணம்” என்ற  பாடலின் சில வரிகள்,

“காடு நல்ல காடு

காட்டுக்குள்ளே

வண்டி போக

ரோடு நல்ல ரோடு!

ரோடு நீள ரோடு

ரோட்டு வழி

போகும் காரில்

மொத்தம் ஆறு பேரு!

ஆறு பேரும் யாரு

ஐயப்ப சாமி மாரு

………………”

அதோ பாரு ரோடு

ரோட்டுக்குள்ள யாரு

காருக்குள்ளே யாரு

நம்ம மாமா நேரு”

என்ற நாட்டுப்புறப் பாடலின் தாக்கத்தில் அமைந்துள்ளன.

குழந்தைகளுக்கு நாக்கு நன்றாகப் பிறண்டு, வார்த்தைகளைச் சரியான ஒலியில் உச்சரிக்கக் கற்றுக்கொடுக்க உதவுபவை நாப்பயிற்சி பாடல் ஆகும். ஆங்கிலத்தில் இதை ‘Tongue Twister’ என்பர்.

“இது யாரு தைச்ச சட்டை?

தாத்தா தைச்ச சட்டை”

என்று வேகமாகச் சொல்வதால், நாக்குக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. 

ழ’ வைச் சரியாக உச்சரிக்க, சொல்லப்படும் வாக்கியம் இது:-

ஏழைக்கிழவன் வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்தான்” 

கவிஞர் செல்லகணபதி அவர்கள் எழுதிய ‘நனையும் பூ’ பாடலின், கீழ்க்கண்ட வரிகளையும், ‘ழ’ உச்சரிப்புக்குச் சொல்லிப் பழகலாம்:-

மழைமழைமழை மழைமழைமழை

மழையினால்

மலர்மலர்இதழ் உடல்குளிப்பதும்

அழகுதான்”  

இன்னும் கவிஞர்கள் குழந்தைகளுக்காக இயற்றியுள்ள அறநெறியைப் போதிக்கும் பாடல்கள், வினா விடைப்பாடல்கள், விடுகதைகள் , பல்சுவைப்பாடல்கள் ஆகியவற்றிலும் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் மிகுதியாக உள்ளது.

இவ்வாறு நாட்டுப்புறப் பாடல்கள் கவிஞர்களுக்குக் கற்பனையின் ஊற்றுக்கண்ணாக விளங்கிச் சிறார் இலக்கியத்திற்குப் பெரும் வளம் சேர்த்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்களும், இணையக் கட்டுரைகளும்:-

தமிழக நாட்டுப்புறவியல், முனைவர் சரசுவதி வேணுகோபால், தாமரை வெளியீடு, மதுரை.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தில், நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம்

எழுத்தாளர் சுகுமாரன்- (https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-july19/37639-2019-07-18-08-17-52)

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும் – வந்தியத்தேவன் (http://siragu.com/)

திராவிட இயக்கக் கவிஞர்களின் குழந்தைப் பாடல்கள் – முனைவர் சி.அங்கயற்கண்ணி https://www.seragu.com/wp-content/uploads/2015/07/ANGAYARKANNI.pdf

Share this: