இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளிலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே கதாநாயகர்களாக வலம் வருகின்றார்கள்! ‘சறுக்கு விளையாடிய அணில் குஞ்சு’, ‘சிங்க ராஜா’ ‘மலர்க்கோட்டையின் மகாராணி’ போன்ற கதைகள், வாசிக்கும் குழந்தைகளைப் பெரிதும் மகிழ்விப்பவை.
‘குரங்கு கையில் விளையாடிய விதை’ என்ற கதை, குழந்தைகள் மனதில் மரம் வளர்க்க வேண்டிய அவசியத்தை விதைக்கும். சிறுவர்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத தேவாங்கு, ஒரு கதையில் அறிமுகமாகி, உருப்படியான யோசனையைச் சொல்கிறது.
‘மூக்கு நீண்ட குருவியின் கதை’ சுவாரசியமான கற்பனை! வயலில் உள்ள புழுக்களை உண்டால், குருவியின் மூக்கு நீண்டுவிடும் என்று புழு சொன்ன பொய்யை உண்மையென்று நம்பி, தன் மூக்கு நீண்டு விட்டதாகக் கவலைப்பட்டுக் காட்டில் எல்லோரிடமும் கவலையுடன் புலம்பிக் கொண்டிருக்கிறதாம் சின்னக் குருவி!
சில கதைகள் விட்டுக்கொடுத்தல் மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரம் ஆகியவற்றின் அவசியத்தை உணர்த்துவதோடு, குழந்தைகளுக்கு உயிரினங்களை நேசிப்பது குறித்தான புரிதலையும் ஏற்படுத்துகின்றன. மேலும் பூமி பசுஞ்சோலையாகத் திகழ வேண்டும் என்ற ஆசிரியரின் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், வெளிப்படுகின்றது.
கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய சுவாரசியமான சிறுவர் கதைகள்! அவசியம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்!
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | கன்னிக்கோவில் இராஜா |
வெளியீடு | வானம் பதிப்பகம், சென்னை-89 (+91) 91765 49991 |
விலை | ₹ 50/- |
6-8
9-12
நல்ல தகவல்கள்