தலையங்கம் – டிசம்பர் 2021

Editorial_Dec_2021

அன்புடையீர்! வணக்கம்.

எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! 

நாம் இன்னும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடவில்லை. ஒமிக்ரான் என்ற பெயரில், கொரோனாவின் புதிய அலை  தற்போது உலகை அச்சுறுத்தத் துவங்கியிருக்கின்றது.  இந்தியாவிலும் இது மெல்ல பரவத் துவங்கியிருக்கும் செய்தி, கவலையளிப்பதாக உள்ளது.  

எனவே குழந்தைகள் அனைவரும் கொரோனா போய்விட்டது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.  தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்தும்,  தொடர்ந்து முகக்கவசம் அணிந்தும், கைகளை அடிக்கடிக் கழுவியும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்!

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டுச் சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியின் முடிவுகள், குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதியன்று சுட்டி உலகத்தில் வெளியிட்டோம்!  அதன்பிறகு தொடர்ச்சியாகப் பரிசு வென்ற கதைகளைச் சுட்டி உலகத்தில் வெளியிட்டிருக்கிறோம். 

இந்தக் கதைப்போட்டியில் குழந்தைகள் பலர், சிறப்பாகத் தங்கள் கற்பனைத் திறனை வெளிப்படுத்தியிருந்தார்கள். போட்டியில் பங்கு பெற்று அசத்திய குழந்தைகள் அனைவருக்கும், எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

தொடர்ச்சியாகப் பிரசுரம் செய்வதற்கு, நீங்கள் எழுதும் கதைகளைச் சுட்டி உலகத்துக்கு அனுப்புங்கள். சிறப்பான கதைகளைப் பிரசுரம் செய்வோம். உங்கள் கதை பற்றிய ஆக்கப்பூர்வமான விமர்சனங்களோடு, நாங்கள் வெளியிடுவோம் என்பதால், உங்கள் எழுத்தை இன்னும் மேம்படுத்த அது உதவும். ஓவியத் திறமை உள்ளவர்களும் சுட்டி ஓவியம் பகுதிக்கு ஓவியங்களை அனுப்பலாம். 

முகவரி team@chuttiulagam.com 

பரிசு வென்றவர்களுக்கு அவர்கள் மெயில் முகவரி வழியாகத் தகவல் அனுப்பிக் கணக்கு எண் விபரங்களைத் தரச் சொல்லிக் கேட்டிருந்தோம்.  சிலர் மட்டும் இன்னும் அனுப்பவில்லை.  அவர்கள் எங்கள் முகவரிக்குக் கணக்கு எண் அனுப்பினால் மட்டுமே, எங்களால் பரிசுத்தொகையை அனுப்பவியலும்.  இதுவரை அனுப்பாதவர்கள், உடனே அனுப்பிப் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

போட்டியில் பரிசு பெற்று, சுட்டி உலகத்தில் பிரசுரமான எல்லாக் கதைகளும் தொகுக்கப் பெற்று, புத்தகமாக வெளியிடப்படும்.  அதற்கான வேலையை லாலிபாப் சிறுவர் உலகம் மேற்கொள்ளும்.  புத்தகம் வெளியான பிறகு, கதையை எழுதியவர்களுக்கு ஆளுக்கு ஒரு பிரதி அனுப்புவோம்.

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தைப் படைப்பாளர்களின் இடம் நீண்டகாலமாக வெற்றிடமாகவே இருந்தது. ரமணி எழுதிய ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற சிறார் கதைகள் புத்தகத்தையும், ரமணா எழுதிய ‘சிம்பாவின் சுற்றுலா’ என்ற சிறுவர் நாவலையும் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டைப் பற்றிய நூல் அறிமுகத்தைச் சுட்டி உலகம் வெளியிட்டுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த ஹரிவர்ஷினி ராஜேஷ், தம் 9 வது பிறந்த நாளின் போது கோவையில் 9 இடங்களில் 9 சிறுவர் கதைப் புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை படைத்திருக்கிறார். இவரது கதைகளுக்கு இவரது சகோதரி வர்தினி ராஜேஷ் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

அண்மையில் தமிழில் கதைகள் எழுதும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாவதும், அடுத்தடுத்து அவர்கள் கதைப்புத்தகங்கள் வெளிவருவதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.  குழந்தைகளுக்காகக் குழந்தை படைப்பாளர்கள் எழுதும் கதை புத்தகங்களை வாங்கி, உற்சாகப்படுத்துங்கள்.  அப்போது தான் இன்னும் பல குழந்தைகள் எழுத முன்வருவார்கள்.

குழந்தைகளின் பிறந்த நாளின் போது, பொம்மையுடன் ஒரு சிறுவர் கதைப் புத்தகமும் வாங்கிப் பரிசளியுங்கள்.  இது குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட உதவும்.  சுட்டி உலகத்தில் குழந்தைகளின் வயது வாரியான புத்தக அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.  எனவே குழந்தைகளின் வயதுக்கேற்ற புத்தகங்களை வாங்கிப் பரிசளியுங்கள்.

சுட்டி உலகம் காணொளியில் சிறுவர் பாடல்களும், கதைகளும் வெளியாகின்றன  மறக்காமல் ‘சப்ஸ்கிரைப்’ செய்து, உங்கள் நட்பு வட்டங்களுக்கும் இத்தளத்தின் முகவரியைப் பகிருங்கள். ஆங்கில நர்சரி பாடல்களுக்கிடையே நம் தாய்மொழித் தமிழ்ப் பாடல்களையும், இடையிடையே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையல்லவா?

சுட்டி உலகம் துவங்கி ஏழு மாதங்களே ஆன நிலையில், பார்வைகளின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை நெருங்குகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம். 

மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்!

அன்புடன்

ஆசிரியர்

சுட்டி உலகம்.

Share this: