தமிழ்ச்சிறார் இலக்கியத்தில், நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய யதார்த்த கதைகள், மிகக் குறைவு என்ற குறையைப் போக்கும் விதத்தில், இந்நாவல் அமைந்துள்ளது.
இக்கதையில் வரும் மாரிக்கு, எதற்கெடுத்தாலும் பயம்; அவனுக்கு அம்மா தான் எல்லாம். அம்மா அருகில் இருந்தால் தான், அவனுக்குத் தைரியம் வருகின்றது. பள்ளியில் ‘குட்டைக் கத்தரிக்காய்’ என்று, சக மாணவர்கள் உருவகேலி பண்ணும் போது, அடித்துத் துவைக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அவர்களைப் பார்த்தாலே, அவனுக்கு நடுக்கம் ஏற்படுகின்றது.
இருட்டைப் பார்த்துப் பயப்படுபவனுக்கு, “இருள் என்பது குறைந்த ஒளி; அதற்குப் பயப்படக் கூடாது; பேய், பிசாசு என்று எதுவும் கிடையாது” என்று அம்மா தைரியம் கொடுத்துப் பயத்தைப் போக்குகிறார். மகனின் கற்பனையைத் தூண்டும் விதமாக, அவ்வப்போது கதைப்புத்தகம் வாசித்துக் காட்டி மகனை மகிழ்விக்கிறார்.
அவனது ஆளுமை படிப்படியாக வளர்ந்து, கடைசியில் நாடகத்துக்குக் கதை எழுத ஆரம்பிக்கின்றான். சிறுவர்களுக்குச் சிறுவயதில் இருக்கக்கூடிய பயங்களையும், அவற்றை அம்மாவின் துணை கொண்டு மாரி எப்படி வெல்கிறான் என்பதையும், இந்நாவல் விளக்குகிறது. பேய், பிசாசு என்பதெல்லாம் வெறும் கற்பனையே என்ற அறிவியல் உண்மையையும், இந்நாவலை வாசிக்கும் சிறுவர் தெரிந்து கொள்வர்.
மாரியின் ஆளுமை வளர்ச்சிக்கு அம்மா எப்படியெல்லாம் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருந்தார் என்பதை, இந்நாவல் சுவாரசியமாக விவரிக்கின்றது. சிறுவர்கள் தாமே வாசித்துப் புரிந்து கொள்ள உதவும், எளிய மொழிநடை.
அவசியம் சிறுவர்க்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | அறிவியல் வெளியீடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோபாலபுரம், சென்னை-86 www.tnsf.co.in |
விலை | ரூ 65/- |