யானைகள் சார்ந்து முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழுவினர், செப்டம்பர் 2020 முதல், ‘சுட்டி யானை’ – சிறுவர் மாத இதழைத் துவங்கினார்கள். வளரும் தலைமுறைக்கு, யானை, வனம், இயற்கை ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இதன் முக்கிய நோக்கம்
யானைகள் சிறப்பிதழாக மலர்ந்த முதல் இதழுடன், வீட்டில் இருக்கும் மண்ணில் விதைக்கச் சொல்லிக் காய்கறி விதைப் பொட்டலம் ஒன்றும் அனுப்பியிருந்தார்கள். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைச் சந்திக்கத் துவங்கியிருக்கும் இக்காலக்கட்டத்தில், வளரும் குழந்தைகளுக்கு இயற்கையில் ஈடுபாடு ஏற்படுத்திட, சிறந்த முன்னெடுப்பு!.
குழந்தைகளுக்குப் பறவை கூர்நோக்கலில் ஆர்வம் ஏற்படுத்தும் நோக்கத்தில், ஒவ்வோர் இதழிலும், பட்டைத் தலை வாத்து, மலை இருவாச்சி எனப் படங்களுடன், ஒரு பறவை அறிமுகமாவது சிறப்பு!
தற்போது வெளிவந்துள்ள 7 ஆம் இதழில், குட்டிப்பாப்பா சொன்ன வானவில் கதை, பாட்டி சொன்ன புதிர், லதா அக்காவின் படக்கதை தொடர், கென்யா ஓர் மந்திர லோகம், ஜூஜூ ஒரு பறக்கும் யானை எனக் குழந்தைகளுக்குப் பிடித்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சுட்டிக்குழந்தைகளின் ஓவியங்களும், அதற்கேற்றார் போல் கதைகளும் இதழை அலங்கரிக்கின்றன.
இந்த இதழுடன் பரிசாகச் சுட்டி யானையின் குட்டிக் கதை புத்தகம், கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. . குழந்தைகளின் சினிமா அறிமுகம், தாவர அறிமுகம், பிடி விளையாட்டு எனப் பல்சுவை பகுதிகள் அடங்கிய சுட்டி யானையை, அவசியம் வாங்கிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.
தினம் ஒரே ஒரு ரூபாய் சேமித்து, மாதம் 30 ரூபாயில் ‘சுட்டி யானை’ வாங்கலாம்.
வகை | சிறுவர் மாத இதழ் |
வடிவம் | அச்சு |
வெளியீடு | இயல்வாகை சூழலியல் இயக்கம் தொடர்பு எண்: +91-9500125125 / +91-9500125126 |
விலை | தனி இதழ் விலை ரூ30/- மட்டுமே. ஆண்டுச்சந்தா ரூ .350/- |