Boredom operates similarly to feeling happy or excited. It results in you trying to approach something that, in this case, is more meaningful or interesting. It encourages people to explore because it signals that your current situation is lacking so it’s kind of a push to seek out something new.
குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளைத் தெரிந்து கொள்வதற்குப் போரடிப்பது அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள். ‘An idle mind is devil’s workshop’ என்றும், சும்மாயிருப்பது விபரீத எண்ணங்கள் வளர வழிவகுக்கும் என்றும், குழந்தைகளின் மகிழ்ச்சியைப் போக்கி, எரிச்சலை ஏற்படுத்தி விரக்தியில் கொண்டுவிடும் என்றும் முன்னர் நம்பப்பட்டது.. ஆனால் போரடிப்பது குழந்தையின் ஆழ்மன சிந்தனையையும், படைப்புத் திறனையும் தூண்டி, உள்ளார்ந்த உண்மையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனத் தற்கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் பொழுது போகாமல் படுத்தியெடுக்கிறார்கள் என்பதற்காகப் பெற்றோர் எல்லா நேரமும் அவர்களைத் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதும், மொபைலைக் கையில் கொடுத்து விளையாடச் சொல்வதும் தவறு. அவர்கள் தொண தொணத்தாலும், அதைச் சமாளித்து சில மணி நேரங்களாவது, அவர்களுக்குப் போரடிக்க விட வேண்டும் என்பது உளவியலாரின் கருத்து.
போரடிப்பதால் உண்டாகும் நன்மைகள்:-
1. குழந்தைகளுக்குள் இருக்கும் படைப்புத் திறனை வெளிக்கொண்டு வந்து ஊக்குவிக்கிறது.
2. விளையாட்டுப் பொருட்களை வைத்து, அவர்களாகவே புதுப்புது விளையாட்டுகளை உருவாக்கும் போது, கற்பனைத் திறன் மேம்படுகின்றது.
3. தனக்கென்ற ஓர் அடையாளத்தை ஏற்படுத்த உதவுகின்றது.
4. பெற்றோரின் உதவியின்றித் தாமாகவே ஓய்வு நேரத்தைச் செலவிட குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.
5. வாசிப்பில் நாட்டம் ஏற்பட உதவும்
6. புதுப்புது கலைகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
7. சிக்கலுக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் திறனை வளர்க்கின்றது.
என் சிறுவயதில் வானொலிப் பெட்டியைத் தவிர, தொலைக்காட்சி, கணிணி, இணையம் என்று பொழுதுபோக்குச் சாதனங்கள் எதுவும் கிடையாது. வானொலியில் அவ்வப்போது ஒலிச்சித்திரம் என்று திரைப்படத்தை ஒலிபரப்புவார்கள். காணொளியின்றி வசனத்தை மட்டும் கேட்க முடியும். குறிப்பிட்ட வார நாட்களில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகும். பாடலை ஒலிப்பதிவு செய்து கொண்டு, விரும்பும் போது கேட்கும் வசதி கொண்ட டேப் ரிக்கார்டர் கூட, பின்னாளில் தான் வந்தது.
எனவே பொழுது போக்க எங்களுக்கிருந்த ஒரே வழி, தெருவில் நம் வயதையொத்த பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது மட்டுமே. அப்போது குழந்தைகளின் பாதுகாப்பு பிரச்சினை ஏதுமில்லை. மேலும் இக்காலம் போல் பொம்மைகளுக்குத் தனியாக பெற்றோர் செலவழிக்க வேண்டிய அவசியமுமில்லை. எல்லாமே விட்டிலேயும், வீட்டைச் சுற்றியும் கிடைக்கும் செலவில்லாப் பொருட்கள் தாம்.
பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதலாம்; துடைப்பக் குச்சியை மண்ணில் செருகி, கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் விளையாடலாம். உடைந்த சில்லுகளைப் பொறுக்கி சில்லுக்கோடு ஆடலாம். கல்லா மண்ணா, ஒளிஞ்சான் பிடிச்சி, நொண்டியடித்துப் பிடித்தல் போன்ற ஆட்டங்களுக்கு எதுவுமே தேவையில்லை. கருங்கல் சல்லிகளைக் கொண்டு புதைகாய் ஆடலாம். புளியங்கொட்டைகளைக் கொண்டு பல்லாங்குழி ஆடலாம். பையன்கள் கோலிக்குண்டு, பம்பரம், கிட்டிப்புள் ஆடுவார்கள். காற்றடிக்கும் காலத்தில் பட்டம் விடுவார்கள். சிலர் சொந்தமாகவே பட்டம் தயார் செய்து பறக்க விடுவார்கள்.
ஒரு நாள் சும்மா இருந்த நேரத்தில் “எனக்குப் போரடிக்குதுப்பா!” என்று என் அப்பாவிடம் சொன்ன போது, “அது உன்னை அடித்தால், நீ திருப்பியடி” என்றார், நகைச்சுவையாக. நூலகத்திலிருந்து குழந்தைகளுக்கான புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்து, வாசிப்பின் சுவையை ஊட்டியவரும் அவரே. அணில் போன்ற சிறுவர் இதழ்களையும் அப்பா வாங்கிக் கொடுப்பார். போரடித்ததால் இளம் வயதில் நான் கற்றுக் கொண்ட வாசிப்புப் பழக்கம், இன்று வரை எனக்கு பக்கத் துணையாயிருக்கின்றது.
போரடித்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், தாளை எடுத்து ஓவியங்கள் வரைந்து வண்ணம் பூசியிருக்கிறோம். அப்படித்தான் ஓவியம் வரைவதிலும், வண்ணம் பூசுவதிலும் நாட்டம் ஏற்பட்டது. புதிது புதிதான விளையாட்டுகளை, நாங்களே கண்டுபிடித்து விளையாடினோம். களிமண்ணைக் குழைத்து, விதவிதமான பொம்மைகள் செய்தோம்.. மணலில் வீடு, கோவில் கட்டுவோம். மழைநீரில் காகிதக் கப்பல் விடுவோம். தாளில் சாதா கப்பல், கத்திக்கப்பல், ஏரோப்பிளேன், கூடை முறம், பந்து என விதவிதமான பொருட்கள் செய்யக் கற்றுக் கொண்டோம்.
திரைப்பட பாட்டுக்களின் வரிகளை மனப்பாடம் செய்து, பாடி மகிழ்வோம். அப்போது அப்பாடல்களை, சிறு சிறு நூல்களில் அச்சிட்டு விற்பார்கள். சில பாடல்களை வானொலியில் ஒலிப்பரப்பும் போது, உன்னிப்பாகக் கேட்டு, நோட்டு பின்பக்கத் தாள்களில் எழுதி வைத்து, மனப்பாடம் பண்ணுவோம். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடத் தவறில்லாமல் சொல்லக் கூடிய் அளவுக்கு, அவை மனப்பாடம் ஆகியிருந்தன.
அக்கம் பக்கத்திலிருந்த வாதாம் மரக் கொட்டைகளைச் சேகரித்து உடைத்து, அதிலிருந்த பருப்பைச் சிந்தாமல் சிதறாமல் எடுத்துத் தின்னக் கற்றுக் கொண்டோம். நம் மண்ணின் தாவர வகைகளின் பெயர்களும் ஊர்ப் பறவைகளின் பெயர்களும் எங்களுக்கு அத்துப்படி ஆயின. பூத்து உதிரும் வேப்பம் பூக்களை மண்படாமல் அம்மாவுக்குச் சமையலுக்குச் சேகரித்துக் கொடுத்தோம். செப்புச் சாமான்களை வைத்துக் கூட்டாஞ்சோறு ஆக்கினோம்.
மின்மினிப் பூச்சிகள் எப்படி வெளிச்சத்தை வெளியிடுகின்றன எனப் பகலில் பிடித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டோம். குளத்திலிருந்து சிறு மீன்களைத் தொடர்ச்சியாகப் பிடித்து வந்து வீட்டில் பாட்டில்களில் போட்டு வளர்க்க ஆசைப்பட்டு அநியாயமாகச் சாகடித்தோம். வீட்டுக் குழாய்களில் வரும் தண்ணீரில் குளோரின் அதிகமாக இருப்பதால், மீன்கள் சாகின்றன என்ற உண்மையை பிறகு தான் தெரிந்து கொண்டோம். கொசுக்களையும் பாட்டிலில் வளர்த்து, அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியைத் தெரிந்து கொண்டோம். இப்படி ஓய்வு நேரத்தைப் பலவிதமாகச் செலவழித்து நேரத்தைப் போக்கியதோடு, பல பயனுள்ள விஷயங்களையும் தெரிந்து கொண்டோம். இப்போதும் அந்த மலரும் நினைவுகள் மகிழ்ச்சியான நாட்களாக இனிக்கின்றன. எத்தனை கோடி கொடுத்தாலும், அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை.
பாதுகாப்பு கருதி இக்காலத்தில் அக்காலம் போல் குழந்தைகளை வெளியே விளையாட விட முடியவில்லை என்பது மிகப் பெரிய சோகம். இக்காலக் குழந்தைகள் இழந்தவை ஏராளம். இப்போது ஒன்றரை வயது குழந்தை கூட கையில் மொபோல் போனை வைத்துக் கொண்டு, தொடு திரையை அனாயாசமாக விரலால் தள்ளித் தள்ளிப் பிடித்த ஆங்கில நர்சரி பாடல்களைக் கேட்கின்றது. கார்ட்டூன் பார்க்கின்றது. எந்நேரமும் செல்போனையும்,, தொலைக்காட்சியையும் பார்ப்பதால், கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதோடு, கற்பனைக்கு வேலையில்லாததால், மூளைத் திறனும் பாதிக்கப்படுகின்றது.
குழந்தைகளுக்குப் போரடிக்கும் போது, அவர்களை ஆக்கப்பூர்வமாக வழிநடத்த பெற்றோர் என்ன செய்யலாம்?
சீட்டுக்கட்டு, கேரம்,செஸ், பரம பதம், பல்லாங்குழி போன்று வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகள், புத்தகம் வாசிப்பது, வரைவது, வண்ணம் பூசுவது, தோட்ட வேலை, சமையலில் புது பதார்த்தம் செய்வது, ஐஸ்கிரீம், கேக் செய்வது என அவர்களுக்குப் பிடித்த அனைத்தையும் எழுதி பட்டியல் ஒன்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். போரடிக்கிறது என்று அவர்கள் சொன்னவுடன், அந்த லிஸ்டை கொடுத்து அதிலிருந்து ஏதாவது ஒன்றை அவர்களையே தேர்வு செய்யச் சொல்லி, அதில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள்.
வாசிப்பதற்குத் தேவையான கதை புத்தகங்களை வாங்கி, அவர்கள் கண்ணில் படும் இடமெல்லாம் போட்டு வைப்பது அவசியம். அவர்கள் வயதுக்கேற்ற கதைப் புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.
ஒரு படத்தைக் கொடுத்து, அதற்குக் கதை எழுதச் சொல்லலாம்; அல்லது ஒரு கதையைச் சொல்லி, அதற்குப் படம் வரையச் சொல்லலாம். சின்னச் சின்ன கணிதப் புதிர்களைக் கொடுத்து, விடுவிக்கச் சொல்லலாம். விடுகதைகளைச் சொல்லலாம். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பெற்றோர் தம் ஓய்வு நேரமுழுமையும், குழந்தைகளுடன் செலவிட வேண்டும் என்று அவசியமில்லை. எல்லா நேரமும் பெற்றோர் கூடவேயிருந்தால், குழந்தைகள் தாங்களாக எதையும் செய்யக் கற்றுக்கொள்வது கடினம், வழிகளைக் காட்டி விட்டு, பெற்றோர் ஒதுங்கி விட்டால், குழந்தைகள் தாங்களாகவே போரடிப்பதைச் சமாளிக்கக் கற்றுக் கொள்வார்கள். அவ்வப்போது தங்களுக்குப் பிடித்த பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவது, பெற்றோரின் மனநலத்துக்கு நல்லது. இல்லையேல் அவர்களுக்கு வாழ்க்கையே போரடிக்கத் துவங்கிவிடும்!
“Your role as a parent is to prepare children to take their place in society. Being an adult means occupying yourself and filling up your leisure time in a way that will make you happy. If parents spend all their time filling up their child’s spare time, then the child’s never going to learn to do this for themselves.”
இக்கட்டுரை எழுத உதவிய இணைப்புகள்: