இந்நூலிலுள்ள 27 கட்டுரைகள், இந்து தமிழ் திசையின் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளிவந்து, தமிழக முழுக்க இளையோரால் பரவலாக வாசிக்கப்பட்டவை. நூலின் தலைப்புக்கேற்றாற் போல், எல்லாமே மாணவர்கள் எளிதாக வாசிக்கக்கூடிய, குட்டிக் குட்டிக் கட்டுரைகள்.
இந்நூலில் உள்ள செய்திகள் ‘டீன் ஏஜ்’ என்று குறிப்பிடப்படும் வளரிளம் பருவத்தினரைச் சிந்திக்க வைக்கவும், அவர்களிடையே பல்வேறு துறைகளில் தேடலை உருவாக்கவும், வாழ்வில் சிறந்த பாதையில் அவர்கள் அடியெடுத்து வைத்துத் தடம் பதிக்கவும், வழிகாட்டக் கூடியவை.
இக்கட்டுரைகள் பதின்பருவத்தினருக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரிடமும், போதிக்கும் ஆசிரியர்களிடமும், நுட்பமான மாற்றங்களை ஏற்படுத்திப் பின்னாளில் பெரிய நகர்வுகளை நிகழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவை. வாழ்வில் வெற்ற பெற்றவர்கள் பலரும், இந்தப் பருவத்தில் தான், வாழ்வை மாற்றி அமைத்துக் கொண்டார்கள் என்று சொல்லும் ஆசிரியர், சின்ன மாற்றங்களும், தொடர்ச்சியான செயல்பாடுகளும் தாம் வெற்றிக்கான அடித்தளம் என்று முதல் கட்டுரையில் கூறுகிறார்.
வரலாறுகளை வெறும் ஆண்டுகளாகப் பார்க்காமல், அதிலிருந்து கேள்விகளை உருவாக்கித் தேடலைத் துவங்க வேண்டும் என்று வரலாற்று நூல்களை வாசிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர். நம் உயரங்களைப் பெரிதாக்கவும், இலக்குகளை அடையவும், வானத்தை வசப்படுத்தி விண்மீன்களைத் தொடவும், வாசிப்பு மிக அவசியம் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளார்.
‘பல்துறை ஆளுமைகளை நமக்கு அறிமுகம் செய்வதில், புத்தகத்தின் பங்கு மகத்தானது; ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்வது, ஓர் அலாதியான அற்புதமான அனுபவம்; அவர்களைப் பற்றி வாசிக்கும் போது, நம்மையுமறியாமல் அவர்களின் விடாப்பிடியான சுறுசுறுப்பான மனநிலை தொற்றிக் கொள்ளும்’ என்று இவர் கூறியிருப்பது, மிகச்சரியான கருத்து.
நாளிதழ்களைத் தினமும் வாசித்து, நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வதின் அவசியத்தை இன்னொரு கட்டுரை பேசுகின்றது. ‘மேடைக்கு முந்து’ என்பது, மேடையில் பேசத் தயங்கும் மாணவர்களின் அவநம்பிக்கையைப் போக்கித் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கட்டுரை.
‘கணக்கும் இனிக்கும்’ என்ற கட்டுரையில், பெரும்பாலான மாணவர்கள் வெறுக்கும் கணிதப் பாடத்தை அவர்கள் விருப்பத்துக்குரிய பாடமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று வழிகாட்டுகிறார் ஆசிரியர். ஊரிலுள்ள தூங்கும் நூலகங்களைத் தட்டி எழுப்பி, அதை உயிர்ப்பிக்கும் வழிகள் என்ன? ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பீடு செய்வது சரியா? புத்தகக் காட்சிக்கு ஏன் செல்ல வேண்டும்? நம் நாட்டின் அரசியலைப் புரிந்து கொள்வதற்கான அவசியமென்ன? போன்ற பல கேள்விகளுக்கு இந்நூலில் பதில் கிடைக்கும்.
மாணவர்கள் தம் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் பள்ளிக்குள்ளே ஒரு சிறார் இதழை நடத்துதல், மாற்றுத் திறனாளிகளை நையாண்டி செய்யாமல் அரவணைத்துச் செல்லுதல் போன்று தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை, இந்நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்.
“தொடப்படாத நூல்கள் என்பது, ஒரு கலாச்சார அவமானம்” (பக் 57);
“இருக்கும் திசைகள் எல்லாம், உனக்கு எதிரானால், புதிதாய்த் திசையை உருவாக்கு” (பக் 38)
பதின் பருவத்தினர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். இந்நூலுக்கு ஓவியர் அப்பு சிவா, அருமையாக ஓவியங்கள் வரைந்துள்ளார்.
வகை | இளையோர் கட்டுரை |
ஆசிரியர் | விழியன் |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 +91 8778073949 |
விலை | ரூ 95/- |