கேஷூ 2009 ஆம் ஆண்டு வெளிவந்த, சிறந்த மலையாள சிறுவர் திரைப்படம். இதன் இயக்குநர் சிவன். தேசிய அளவிலும், கேரள மாநிலத்திலும் பல விருதுகளைப் பெற்ற திரைப்படம்.
கேஷூ எனும் சிறுவன், பிறந்த போதே அம்மாவை இழந்து, அம்மாவழி மாமாவிடம் வளர்கிறான். காது கேட்காத, வாய் பெசவியலா மாற்றுத் திறனாளியான இவன், மிகவும் முரடனாக இருக்கிறான்.
அந்தக் கிராமத்திலிருந்து, தினமும் அவனைப் பற்றிய புகார்கள் வருகின்றன. அவனிடம் வம்பு வளர்ப்போரைக் கிட்டிப் புள்ளை வைத்துக் குறி பார்த்து அடித்து, அவர்களின் கோபத்துக்கு ஆளாகிறான். ஒவ்வொரு முறையும் மாமாவிடம் அவர்கள் புகார் செய்ய, அவர் பிரம்பை எடுத்து, அவனைப் பின்னி எடுக்கிறார்.
ஆனால் மற்ற உயிர்களிடம் அவன் நேசமாக இருக்கின்றான். கன்றுகுட்டிக்கு விடாமல், பாலை முழுவதும் கறப்பது பொறுக்காமல், கன்றுகுட்டியின் கட்டை அவிழ்த்து விடுகிறான். குளத்தில் யானையைக் குளிப்பாட்டுவதில், ஆசையாக உதவி செய்கிறான். அவனிடம் இருக்கும் ஓவியத் திறமையை யாரும் கண்டு கொள்ளவில்லை; பாராட்டவுமில்லை.
ஒரு முறை வீட்டுச் சுவருக்கு வாங்கி வைத்திருந்த பெயிண்டை எடுத்து சுவர் முழுக்க வண்ண ஓவியங்கள் தீட்டுகிறான். மாமா பிரம்பினால் அவன் உடம்பில் இரத்தம் கன்றிப் போகும் அளவுக்குப் பயங்கரமாக விளாசித் தள்ளுகிறார்.
ஓவிய ஆசிரியையாக அந்த ஊர்ப் பள்ளியில் பணியில் சேரும் பெண், கேஷூ வீட்டில் தங்குகிறார். அவர் சிறுவனிடம் இருக்கும் ஓவியத் திறமையைக் கண்டு வியக்கிறார். அவரிடமும் கேஷூ முதலில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். ஆனால் அவரின் உண்மையான அன்பும், அவன் மீது காட்டும் பாசமும், பரிவும் அவனை மெல்ல மெல்ல மாற்றுகிறது.
ஆசிரியை அவனது ஓவியத் திறமையை, மேலும் பாராட்டி ஊக்குவிக்கிறார். அவன் மாமாவிடம் அனுமதி வாங்கி, அவனைச் சிறப்புப் பள்ளியில் சேர்த்துவிடுகிறார். அவன் வரைந்த ஓவியம், தேசிய அளவில் பரிசு வாங்குகிறது. கிராமமே அவனைக் கொண்டாடுகிறது. அவனது மாமாவும் அவனிடம் தெரியும் மாற்றத்தைக் கண்டு மகிழ்கிறார்.
ஆசிரியைக்குத் திருமணம் நிச்சயமானதால், அவர் ஊருக்குத் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவரைப் பிரிய மனமின்றி கேஷூ அழுகிறான். அவரும் அவனைப் பிரிய மனமின்றி, அழுது கொண்டே ஊருக்குத் திரும்புகிறார். அவர் திரும்பி வருவார் என எதிர்பார்த்து, இரயில் நிலையத்தில் சிறுவன் காத்திருக்கிறான்.
அவர் திரும்பி வர மாட்டார் என்ற உண்மை புரிகிறது. அவனை அங்கிருந்து ஆதரவாக அணைத்து, மாமா வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவரிடம் பள்ளிக்குப் போக வேண்டும் என்ற தன் விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான். அவர் ஆசையாக அவனை அணைத்துப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சியுடன், படம் முடிகின்றது.
அன்பு மூலமே ஒரு குழந்தையைத் திருத்த முடியும்; அடிதடி அவனை மேலும் வன்முறையாளன் ஆக்கும். மாற்றுத் திறனாளி உட்பட, ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதோ ஒரு தனித்திறமை இருக்கும். அதைக் கண்டுபிடித்து ஊக்குவித்தால், அவர்கள் திறமை மேலும் வளரும்; வருங்காலத்தில் பெரிய சாதனைகளை அவர்கள் நிகழ்த்துவார்கள் போன்ற பல செய்திகளைச் சொல்லும் சிறந்த திரைப்படம்.
சிறுவர் படம் என்றாலும், குழந்தை வளர்ப்புக் குறித்த பெரியவர்களுக்கான பாடமும் இருப்பதால், அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்.
யூடியுப் காணொளியில் இப்படம் கிடைக்கிறது.
குழந்தைகளின் மனநிலை சார்ந்த இதுபோன்ற திரைப்படங்கள் சமூக மாற்றத்துக்குப் பெரிதும் உதவும். நல்லதொரு திரைப்பட அறிமுகத்துக்கு நன்றி.