கேள்வி கேட்டுப் பழகு

Kelvikettu_pic

மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சக.முத்துக்கண்ணன் அவர்களும், ச.முத்துக்குமாரி அவர்களும் இணைந்து, இந்நூலை எழுதியுள்ளனர்.  

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகள் கேள்வி கேட்பதன் அவசியத்தை வலியுறுத்தும் முதல் நூலாக, இது அமைந்துள்ளது. நம் நாட்டில் குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்துக்குத் தடையாக அமைந்துள்ள பல்வேறு மூடநம்பிக்கைகளை, இந்நூல் கேள்விக்குள்ளாக்குகிறது.

குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிறைந்தது. ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பல நேரங்களில் பெரியவர்கள் சரியான பதிலைச் சொல்வதில்லை. பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்பாமல், கேள்வி கேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதன் மூலமாகவே, இந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியும் என்று முன்னுரையில், இவ்வாசிரியர்கள் கூறியிருப்பது மிகச் சரியான கருத்து.    

ஒரே வகுப்பில் படிக்கும் மாதவனும், வாணியும் நண்பர்கள். பவானி டீச்சர் பாடம் நடத்தும் போது, இருவருக்கும் அடிக்கடி சந்தேகம் வருகின்றது. அவர்களது கேள்விகளையும், ஆசிரியர் உட்பட மற்றவர்கள் சொன்ன பதில்களையும், இருவரும் ஒரு நோட்டில் எழுதி வைக்கிறார்கள். திருப்தியான பதில் கிடைக்கும் வரை, அவர்கள் கேள்வி தொடர்கிறது.

“வெள்ளிக்கிழமை முடி, நகம் வெட்டக்கூடாது” என்கிறார் பாட்டி; “சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது” என்கிறார் அப்பா. நல்ல காரியம் பற்றிப் பேசும் சமயம், தும்மியதற்குப் பாட்டி திட்டுகிறார். இது போல் குழந்தைகள் அன்றாடம் வீடுகளில் எதிர்கொள்ளும் பல்வேறு குருட்டு நம்பிக்கைகள் குறித்தும், இவற்றில் அறிவியல் உண்மை சிறிதளவும் இல்லை என்பது குறித்தும், குழந்தைகளுக்குப் புரியும் விதமாக எளிய மொழியில் இந்நூல் விளக்குகின்றது.  

சிறுவர் வாசிப்புக்கேற்றவாறு, புத்தகமும் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. குழந்தைகளின் பகுத்தறிவைத் தூண்டி, அறிவியலில் ஆர்வம் கொள்ளத் தூண்டும் நூல். அவசியம் வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.  

வகைசிறுவர் கட்டுரை நூல்
ஆசிரியர்கள்சக.முத்துக்கண்ணன் & ச.முத்துக்குமாரி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன்,பாரதி புத்தகாலயம், சென்னை-18 +91 8778073949
விலைரூ 50/-
Share this: