காலத்திற்கு ஏற்ப ஓடு – ச.ச.சுபவர்ஷினி (9 வயது)

Kalathirku_story_pic

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) 

கருக்கம்பாளயம் என்று ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் பூச்செடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கி இருந்தன. அன்று மழை கனமாகப் பெய்து கொண்டிருந்தது. அப்போது நீலா வெளியில் போய் மிதிவண்டி ஓட்ட முடியாது என்று ஜன்னல் ஓரமாக நின்று மழையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மறுநாள், நீலா இன்று மிதிவண்டி ஓட்டலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள். சாயங்கால நேரம் வெளியில் போய்ப் பார்க்கும் போது ரொம்ப இருட்டாக இருந்தது. மழை வரும் போல உணர்ந்தாள் நீலா.

தலையை அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள் நீலா. அப்போது அவள் மூக்கின் மீது ஒரு துளி மழை நீர் விழுந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகம் ஆனது. கன மழையாக வந்தது.

இது போலவே ஐந்து நாட்கள் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. நீலாவால் மிதிவண்டியே ஓட்ட முடியவில்லை. ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் நீலா.

அந்தச் சமயம் அவளுக்கு ஒரு குரல் கேட்டது. யார் என்று திரும்பிப் பார்த்த போது, அங்கே ஒரு அழகான தேவதை நின்றது. ஆச்சர்யத்துடன் பார்த்தாள் நீலா.

நீலா பயந்து போய் “நீங்க யாரு? நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“நான் தான் தேவதை, நீ ரொம்ப சோகமாக இருப்பதைப் பார்த்து உனக்கு உதவி செய்யலாம்னு வந்தேன்” என்றது தேவதை. “சரி உனக்கு என்ன வேணும் கேளு” என்றது தேவதை. சற்று அமைதியாக இருந்து பின் பேசத் தொடங்கினாள் நீலா.

“இங்க மழை தொடர்ந்து ஐந்து நாட்களாக பெய்து கொண்டே இருக்கு, என்னால மிதிவண்டி ஒட்டவே முடியவில்லை” என்றாள்.

“அப்படியா, அப்போ உனக்கு மழை தானே நிக்கனும். சரி இப்போவே மழை நின்றுவிடும்” அப்படினு சொல்லி முடிக்கும் போது மழையும் நின்று விட்டது. அந்த தேவதையும் மறைந்து போனது.

நீலா அவளுடைய மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அவங்க அம்மாகிட்ட சொல்லிட்டுக் கிளம்பினாள். சூரியன் பளிச்சுனு இருந்தது. நீலா மிதிவண்டி ஓட்டிட்டுப் போயிட்டு இருந்தா. மழை பெய்தால் என்ன இருக்கும்? அங்க சின்ன சின்னதா தண்ணி தேங்கி இருக்கும்ல. அந்த வழியில் ஒரு வாய்க்காலும் இருந்தது. வாய்க்கால் நிறைய தண்ணி இருந்தது.

நீலா ஆழம் குறைவா இருக்கும் இடத்தில் மிதிவண்டியை ஓட்டினாள் என்ன ஆகும்? தண்ணி தெறிக்கும்ல… அதேதான் நடந்தது. அப்பறம் அவள் ஜாலியா போய்ட்டு இருந்தாள்.

அப்போ அங்க பாசி இருந்தது. அந்தப் பாசி பட்டு வழுக்கி நீலா கீழே விழுந்துட்டா. அந்த வழியாகப் போய்க்கொண்டு இருந்த ஒரு பாட்டி வந்து, “என்னமா விழுந்துட்ட? இப்போ தான் மழை நின்று இருக்கு அதுக்குள்ள சைக்கிள் எடுத்துட்டு வந்துட்டயே” என்றார்.

“ஆமாம் பாட்டி எனக்கு மிதிவண்டி ஓட்டுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால் தான் வந்தேன் பாட்டி” என்றாள் நீலா. பாட்டியும் அவங்க கிட்ட இருந்த கொஞ்ச பணத்தை வைத்து பேண்டேஜ் வாங்கி அவளுக்கு உதவி செஞ்சாங்க.

நீலாவும் பத்திரமா சைக்கிள் ஓட்டிக்கிட்டே வீடு வந்து சேர்ந்துட்டா. அதுக்கு அப்பறம் ஒரு மாசம் மழையே வரல. நீலாவுக்கு மழையில் விளையாட ஆசை. ஆனா மழையே வரல. அவளும் காத்துக் கொண்டு இருந்தாள்.

“தேவதையே! தேவதையே”னு கூப்பிட்ட போது தேவதை வரவே இல்லை. சோகமாக உட்கார்ந்து இருந்த போது அவங்க அம்மா வந்து என்ன ஆச்சுனு கேட்டாங்க. “மழைல விளையாடலாம்னு இருக்கு அம்மா. ஆனா ஒரு மாசமா மழையே காணும்” என்றாள் வருத்தத்துடன்.

“நீலா, மழைக்காலம் முடிஞ்சுதுமா. இனி எப்போ வரும்னு சொல்ல முடியாது. அதுக்காக சோகமா இருந்தா எப்படி? மழை வந்த போது எப்போ நிக்கும்னு நினச்ச. இப்போ எப்போ வரும்னு காத்திருக்க. நேரமும் காலமும் வரப்போ தான் பயன்படுத்திக்கணும்” என்றார் அம்மா. “சரிங்கமா”னு சொல்லிட்டு விளையாடப் போயிட்டா நீலா.

(நடுவர் கருத்து:-

அழகான கருவைத் தேர்வு செய்து சுவாரசியமாகக் கதை சொன்னதற்குப் பாராட்டுகள்!  கதையின் நடை எளிமையாக இருக்கிறது.  ஆனால் பேச்சுத் தமிழிலும், எழுத்துத் தமிழிலும் மாறி மாறி உள்ளது.  அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.)

அன்பு சுபவர்ஷினி,

கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள்!  இன்னும் கற்பனை வளம் பெருக, கதைப்புத்தகங்கள் பலவற்றை வாசித்துத் தொடர்ந்து எழுதுங்கள்.

வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ எங்கள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: