அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025

Childrensbkday_pic

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமுழுதும் கொண்டாடப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதை கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதையை நாமெல்லாருமே படித்திருப்போம். இவருடைய நூல்களில் லிட்டில் மெர்மெய்டு (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை மிகவும் பிரபலமானது. இது தமிழில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மொழிபெயர்த்து வானம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

இந்தக் குட்டி கடற்கன்னிக்காக டென்மார்க் கோபன்ஹேக் துறைமுகத்தில் ஒரு பாறையின் மீது கடற்கன்னி உட்கார்ந்திருப்பது போல் சிலை செய்து வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து இந்தக் கதாபாத்திரத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கு இருக்கும் அன்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

‘சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;

உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;

தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);

குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;

சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியன.     

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாக (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

இந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்?

குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் போல வேடம் அணிந்து பள்ளிக்கு வருதல்; ஒருவருக்கொருவர் புத்தகங்களை மாற்றிக் கொண்டு புது வகை புத்தகங்கள் வாசிப்பது; புதிய எழுத்தாளர்களை வாசிப்பது;

வகுப்பில் பிடித்த புத்தகத்தைக் குறித்து விநாடி வினா நடத்துவது; சிறந்த புத்தகங்களை வகுப்பு சுவரில் பரிந்துரை செய்வது;

கதை மூலம் கிடைக்கும் வெவ்வேறு செய்திகளைக் குழந்தைகளைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்; குழந்தகளுக்குப் பிடித்த புத்தகங்கள், அவற்றின் வகை, எழுத்தாளர்கள், அதன் கருப்பொருள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடுவது;

இது வரை வாசிக்காத நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் குறித்தும், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுதல்;

இப்படிப் பல்வேறு விதமாக இந்தக் கொண்டாட்டம் அமையலாம். குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதாகவும், வாசிப்பின் அருமையை உணர்த்துவதாகவும் இந்நாள் அமைய வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *