கிரீடம் – பூ.தனிக்‌ஷா பாரதி(14 வயது)

Greedam_story_cover_pic

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

நந்தினியின் ஊரில் ராஜாவிற்கு வயதாகிவிட்டது அதனால் அந்நாட்டு அரசரின் செல்ல மகளான இளவரசி ஊர்வசிக்கு அடுத்த ராணி சிம்மாசனம் கிடைத்தது. எல்லாம் சரியாகத்தான் நடந்தது; ஆனால் ஊர்வசிக்குக் கிரீடம் இல்லை.

ராஜாவின் கிரீடம் மிகவும் எடையுடையதாகவும், தலையில் வைத்தால் பாரமாகவும் இருப்பதாகச் சொன்னாள். இதனால் பல ஊர்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் கூட லட்சக்கணக்கான கிரீடங்களை ராஜா ஊர்வசிக்காக வரவழைத்தார்.

அனைத்தும் தங்கத்தாலும், வைரத்தாலும் இன்னும் விலையுயர்ந்த உலோகங்களைக் கொண்டும், விலையுயர்ந்த கற்களைப் பதித்தும் இருந்தன. ராணியால் எதையும் சில நிமிடங்களுக்கு மேல் தலையில் வைத்திருக்க முடியவில்லை.

“கிரீடம் இல்லாத ராணி என்று எல்லோரும் என்னை கேலி செய்வார்கள்” என்று சொன்னாள். இதனால் ராஜா ஒரு போட்டியை அறிவித்தார்.

“யார் ராணியின் விருப்பத்திற்கேற்ற கிரீடம் செய்து கொடுக்கிறாரோ அவருக்கு பத்தாயிரம் பொற்காசுகளும், அரண்மனையில் வேலையும் கிடைக்கும்” என்று சொன்னார்.

எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன; ஊர் முழுக்க இதே பேச்சு தான். அடுத்த வாரம் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொருவரும் தங்கள் கிரீடங்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

நந்தினியின் அப்பா ஒரு தையல்காரர்; அவர் மிக அற்புதமான உடைகளைத் தைப்பார். ஆனால், எவ்வளவு முயன்றும் அரண்மனையில் தையல்காரர் வேலை கிடைக்கவேயில்லை.

“அரண்மனையில் மட்டும் வேலை கிடைத்துவிட்டால், ராணிக்கு தினம் தினம் அழகான உடைகளைத் தைத்துக் கொடுக்கலாம். அதனால் கண்டிப்பாக இந்தப் போட்டியில் பங்குபெற்று வென்றுவிட வேண்டும்” என்று நந்தினியின் அப்பா நந்தினியிடமும், நந்தினியின் அம்மாவிடமும் புலம்பிக்கொண்டிருந்தார்.

நந்தினி “அப்பா, பெரிய பெரிய பொற்கொல்லர் செய்த கிரீடத்தையே ராணி மறுத்துவிட்டார். நீங்கள் இதுவரை எந்த ஆபரணமும் செய்ததேயில்லையே?” என்று கேட்டாள்.

“நான் இதுவரை பல துணிகளைத் தைத்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, பையில் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றார். நந்தினி அம்மாவிடம் “என்னம்மா இவர் சம்மந்தமே இல்லாமல் தைக்கத் தெரியும் என்று சொல்லிவிட்டு போகிறார்?” என்று கேட்க, “ஒரு வேளை துணியால் கிரீடம் செய்யப் போகிறார் போல” என்று அம்மா சொல்ல, இருவரும் பெரும் சப்தத்துடன் சிரித்துக்கொண்டிருக்கும் போதே அப்பா பச்சை நூல் கண்டுகளுடனும், ஒரு புதிய பளபளக்கும் ஊசியுடனும் வீட்டுக்குள் நுழைந்தார்.

அப்பா சொன்னார் “என்ன செய்கிறேன் என்று மட்டும் பாருங்கள்; இன்னும் ஒரு வாரத்தில் பத்தாயிரம் பொற்காசுகளுடனும் அரண்மனை வேலையுடனும் தான் வீட்டிற்கு வருவேன்” என்று சொல்லிவிட்டு வீட்டின் மிக அருகில் இருக்கும் அவரின் தையல் கடைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

ஒரு நாள் சென்றது. இரண்டு மூன்று நாட்கள் சென்றும் பூட்டிய கதவு திறக்கவேயில்லை. ஆனால் 24 மணி நேரமும் அவரின் பாட்டு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

நந்தினி அம்மாவிடம் “இவர் கிரீடம் செய்கிறாரா இல்லை பாட்டு பயில்கிறாரா?” என்று கேட்க “என்னவோ செய்யட்டும், சமைத்துத் தரவேண்டியது என் வேலை. தினம் தினம் சமைத்து, எடுத்துக்கொண்டு போய் கடையில் கொடுக்கிறேன். அத்துடன் என் வேலை முடிந்தது. வேளா வேளைக்கு காலி பாத்திரத்தை உன் அப்பா திருப்பித் தருகிறார்! அவர் கிரீடம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன?” என்று அம்மா சொன்னார். “அப்படியானால் அம்மாவிற்குக் கிரீடத்தைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை; ஆனால் எனக்கு இருக்கிறதே” என்று நந்தினி நினைத்தாள்.

உடனே பதுங்கிப் பதுங்கி கிரீடம் இருக்கும் மேசையை நோக்கிச் சென்றாள். அப்பா கடையின் ஒரு ஓரத்தில் உள்ள நாற்காலியில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

“கிரீடம் பார்ப்பதற்கு பெரிதாக விசித்திரமாகவெல்லாம் இல்லை. இந்த அட்டை கிரீடம் செய்வதற்காகவா ஒரு வாரம் வீட்டுக்குக் கூட வராமல் வேலை செய்தார்? இதைக் கேட்டிருந்தால் வீட்டில் உள்ள அட்டைப் பெட்டியை வெட்டி நானே செய்திருப்பேன். சரி என்னவோ ஏதோ இது இன்று மாலை வெற்றிபெற்றுவிடும். ஏனென்றால் இது அட்டையைக் கொண்டு செய்ததால், கனமற்று ஊர்வசி அரசிக்கு ஏற்றதாக இருக்கிறதே! என்னதான் இருந்தாலும் அரசி அணியப் போகும் கிரீடம் அப்பா தூங்கி எழுவதற்குள் இதைப் போட்டுக்கொண்டு நண்பர்களிடம் காட்டிவிட்டு வந்துவிடலாம். அப்படி காட்டியபின் இது வெற்றி பெற்று அரசியின் தலைக்குச் சென்றுவிட்டால், பின்பு நமக்கு ஒரே பெருமை தான்!” என்று நினைத்துக்கொண்டு அதைத் தலையில் அணிந்துகொண்டு நண்பர்களைப் பார்க்கச்சென்றாள்.

அவள் நண்பர்கள் புங்க மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நந்தினி அவர்களிடம் “என் தலையில் பார்த்தீர்களா, என்னவென்று? இது தான் நாளை அரசி அணியப்போகும் கிரீடம். முதன்முதலில் நான் அணிந்திருக்கிறேன்!” என்று புகழ்ச்சி மிக்க குரலில் சொன்னாள்.

உடனே லதா “ம்கும்.. அட்டை கிரீடத்தை அணிந்துகொண்டு தற்புகழ்ச்சி செய்கிறாள்! என்னவோ நாட்டின் அரசியானவளைப் போல!” என முணுமுணுத்தாள்.

நண்பர்களிடம் காட்டிவிட்டு உடனடியாக அப்பா தூங்கி எழுவதற்கு முன்னால் இதை வைக்க வேண்டும் என்று வேகமாக ஓடினாள். அப்பொழுது ஒரு காக்கை அதன் கால்களால் கிரீடத்தைப் பற்றியது.

நந்தினி கிரீடத்தை இழுக்க, காக்கை மறுபக்கம் இழுக்க, கிரீடம் இரண்டு துண்டானது. காக்கையைத் திட்டிக்கொண்டே நந்தினி இரண்டு துண்டுகளையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவதற்குள் போட்டி நேரம் ஆரம்பித்துவிட்டது. வேகவேகமாக பசையைக் கொண்டு அட்டை கிரீடத்தை ஒட்டினாள். சரியாக ஒட்டமுடியவில்லை கிழித்து ஒட்டிய அடையாளம் தெரிந்தது.

வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு, கிரீடத்தை எடுத்துக்கொண்டு போட்டி நடக்கும் மேடைக்குச் செல்ல, அப்பாவும் அம்மாவும் மேடைக்குக் கீழே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து பொற்காசுகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

கிரீடத்தை அவள் முதுகுக்குப் பின் வைத்துக்கொண்டு “அப்பா…” என்று அழைக்க நந்தினியின் அப்பா” எங்கே சென்றாய் நீ? நான் பரிசு வாங்குவதைப் பார்க்க ஏன் வரவில்லை? அரண்மனைத் தையல்காரனாக ஆகிவிட்டேன்” என்றார் உற்சாகமாக.

நந்தினி வியப்பாக “அப்பா, என்ன சொல்கிறீர்கள்? கிரீடம் இதோ என்னிடம் இருக்கையில் நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?” என்றாள். “என்னது உன்னிடமா? அப்படியானால் ராணி ஊர்வசியின் தலையில் இருப்பது என்ன?” என்று அப்பா கேட்க, நந்தினி ஊர்வசியின் தலையைப் பார்த்தாள்.

மயில் இறகுகளை ஒன்றுடன் இன்னொன்றை இணைத்துத் தைத்து மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த கிரீடம். மயிலிறகால் செய்ததால் எடை குறைவாகவும் இருக்க அரசிக்கு மிகவும் பிடித்துப் போய் பரிசும் பெற்றது.

நந்தினி அவளிடம் இருந்த அட்டை கிரீடத்தைக் காட்டி “அப்பா, அப்படியானால் இந்த அட்டை கிரீடம்…?“ என்று கேட்க. அப்பா “ஹ ஹ ஹா.. இது வெறும் மாதிரி வடிவம் தான்” என்றார். நந்தினி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். நல்ல வேளை இந்நேரம் மயிலிறகு கிரீடத்தை எடுத்துக்கொண்டு போய் உடைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அன்று முதல் நந்தினி புரிந்துகொண்டாள். மற்றவர்களுக்கான பொருட்களின் மீது ஆசைப்படக்கூடாது என..

நடுவர்களின் கருத்து:-

(வித்தியாசமான கற்பனையும், எளிய நடையும், சுவாரசியமான கதை சொல்லலும் இந்தக் கதையின் பாராட்டத்தக்க அம்சங்கள்.  மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்ற நீதியைத் தனியே வெளிப்படையாக முடிவில் எழுதியது, சிறு குறை.   கதையின் வழியாகவே வாசிப்பவர்கள், நீதியை உணர்ந்து கொள்வார்கள்).

அன்பு தனிக்‌ஷா பாரதி!

“என்னுடைய கதைக்கு இரண்டாம் பரிசு தந்தது, மிகுந்த மகிழ்ச்சியடையச் செய்கிறது. மிக்க நன்றி. இது கதைகளுக்காக நான் பெறும் முதல் பரிசு என்பதால் என்றைக்கும் நினைவில் இருக்கும். மேலும் எங்கள் கதைகள் புத்தகமாக வெளிவரும் என்பது கூடுதல் மகிழ்ச்சி” என்று மெயிலில் எழுதியிருந்தீர்கள்.

இது தாங்கள் பெறும் முதல் பரிசு என்றறிந்து, மிக்க மகிழ்ச்சி.  மென்மேலும் பல கதைப்புத்தகங்களைத் தொடர்ந்து வாசித்தால் எழுத்து வசப்படும். தொடர்ந்து வாசித்தும், எழுதியும் வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராக மிளிர, சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்.  

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

13 thoughts on “கிரீடம் – பூ.தனிக்‌ஷா பாரதி(14 வயது)

  1. கிரீடம் கதை சுவாரசியமாக இருக்கிறது..வாழ்த்துகள்மா..

    1. தங்கள் வருகைக்கும் கிரீடம் கதை சுவாரசியமாய் இருப்பதாய் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி புவனாபாபு.

  2. மிக அழகாக இருந்தது. கதையின் எழுத்துநடை, வார்த்தை பிரயோகங்கள் அற்புதம். மேலும் சிறக்க வாழ்த்துகள் தனிக்ஷா.

    1. வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி பூர்ணிமா!

  3. அற்புதமான கதை. அழகான நீதி.

    1. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி புவனா!

  4. அழகான தெளிவான எழுத்து நடையுடன் விறுவிறுப்பான கதையோட்டத்துடன் மிகவும் அருமையாக உள்ளது. மேலும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க சுட்டி தனிஷ்கா பாரதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    1. கிரீடம் கதை அருமை எனப் பாராட்டியதற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அன்னபூரணி!

  5. வணக்கம் ஆசிரியருக்கு

    நேர்த்தியாக போட்டியை ஒருங்கிணைத்து, சரியான நேரங்களில் தகவலளித்து, குழந்தைகளை உற்சாகமும் உத்வேகமும் ஊட்டி சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துகள். சிறுவர் இலக்கியத்துக்கு நீங்கள் செய்யும் பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

    எனது மகள் பூ.தனிக்‌ஷா பாரதியின் சிறுகதையைத் தேர்ந்தெடுத்தமைக்கும் வெளியிட்டமைக்கும் நன்றி.

    அன்புடன்
    இரா.பூபாலன்
    9842275662

    1. தங்கள் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சார்! போட்டியில் தங்கள் மகள் தனிக்‌ஷா பாரதி கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி! வருங்காலத்தில் தனிக்‌ஷா பாரதி சிறந்த எழுத்தாளுமையாகத் திகழ எங்கள் நல்வாழ்த்துகள்!

  6. என்ன ஒரு அழகான நீதிக்கதை

    தொடர்ந்து எழுதுங்கள் நல்வாழ்த்துக்கள்

    1. தங்கள் வருகைக்கும். வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றி!

  7. தனிக் ஷா பாரதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிரீடம் கதை மிகவும் சிறப்பு

Comments are closed.