தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூலில் பழைய தமிழ்நாட்டு விளையாட்டுகளைக் கதை மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். டிஜிட்டல் மீடியாவிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடக்கும் இந்நாளைய சிறுவர்க்குக் கைபேசி இல்லாமல் மட்டுமல்ல, எந்த வித எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் இல்லாமலே கூட விளையாட முடியும் என்பதை இந்நூல் சொல்கிறது.
“எனக்கு ஃபோன் தர மாட்டேங்கிறான்” என்று அண்ணன் மீது புகார் சொல்லும் தமிழினிக்கு, அவள் அம்மா புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் ஒத்தையா?ரெட்டையா? என்ற விளையாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார். தமிழ் மொழியுடன் நெருக்கமான இவ்விளையாட்டுகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும் என்று விளக்குகிறார் தமிழினியின் அப்பா.
தமிழினிக்கு ஆர்வம் அதிகமாக, கில்லா பிறாண்டி, எலி-பூனை விளையாட்டு போன்ற மற்ற விளையாட்டுகளையும் அம்மா கற்றுக் கொடுக்கிறார். கில்லா பிறாண்டி விளையாட்டின் போது பாடப்படும் பாட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
குழந்தைகளுக்குப் பழைய பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யும் இந்நூல் 12-14 வயது சிறார்க்கானது.
வகை | சிறார் கதை |
ஆசிரியர் | ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு |
வெளியீடு:- | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06 |
விலை | ரூ 50/- |