எல்லோருக்கும் அன்பு வணக்கம்.
சிறார் வாசிப்பை ஊக்குவிக்க ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 10/05/2021 அன்று துவங்கிய இத்தளத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய அறிமுகத்தை வெளியிட்டிருக்கிறோம்.
‘சுட்டி உலகம்’ துவங்குமுன் இணையத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய விபரம் தெரிவிக்கும் தளம் ஏதுமில்லை. ஆனால் ஆங்கில நூல்கள் பரிந்துரைக்குப் பல்வேறு வலைத்தளங்கள் இணையத்தில் இருந்தன;இருக்கின்றன.
எனவே தற்காலத்தில் தமிழில் என்னென்ன தலைப்புகளில் சிறார் நூல்கள் கிடைக்கின்றன? எந்தெந்தப் பதிப்பகங்கள் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? இப்போது குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்கள் யார்? என்ற விபரம் எதுவும் அன்று கிடைக்கவில்லை. எனவே முதல் முயற்சியாகப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க வழிகாட்ட வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் ஆரம்பித்த இந்த வலைத்தளம் நான்காண்டுகளை வெற்றிகரமாக முடித்து அடுத்த மாதம் 10/05/2025 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
குழந்தைகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை துவங்க இருக்கின்றது. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். கைபேசி, இணையம் போன்றவற்றிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கப் புத்தக வாசிப்பு ஒன்றே சிறந்த வழி!
இந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகக் குழந்தைகள் புத்தக நாள் உலகமுழுதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதைக் கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதை குழந்தைகளிடையே மிகவும் பிரபலம்.
இவருடைய இன்னொரு பிரபலமான நூல் ‘லிட்டில் மெர்மெய்டு’ (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை. தமிழிலும் இதன் மொழிபெயர்ப்பு கிடைக்கின்றது. வானம் பதிப்பகம், சென்னை இதை வெளியிட்டுள்ளது.
சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.
இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாகத் (theme) தேர்வு செய்துள்ளார்கள்.
நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser) என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.
“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”
“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”
குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகம் செய்ய வேண்டும்; அவர்கள் வாசிப்பின் அருமையை உணர வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கம்.
எனவே பெற்றோரே! உங்கள் குழந்தை வருங்காலத்தில் பன்முகத் திறமை பெற்றுச் சிறந்த ஆளுமையாகத் திகழ வேண்டும் என்பது உங்கள் கனவா? இன்றே குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுங்கள்; வாசிப்பின் அருமையை அவர்கள் உணரச் செய்யுங்கள்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.