தலையங்கம்-செப்டம்பர் 2021

cover photo for editorial sep

அன்புடையீர்!

வணக்கம்.  சுட்டி உலகம் துவங்கி நான்கு மாதங்கள் முடிவடையும் நிலையில் பார்வைகளின்(views) எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தொட்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம்.

2020 ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது வாங்கியிருக்கும் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியைச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்.

இதுவரை 80 அச்சு+ மின்னூல் புத்தகங்களைக் குழந்தைகளுக்காக அறிமுகம் செய்திருக்கிறோம். செப்டம்பர் 5 ஆம் தேதி கப்பலோட்டிய தமிழன் வ,உ.சிதம்பரம் அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டுச் சிறப்புப் பதிவு வெளியிட்டுள்ளோம். 

குழந்தைகளுக்கு இவருடைய வாழ்க்கை வரலாற்றையும், நாட்டின் விடுதலைக்காக இவர் பட்ட கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லுங்கள்.  வாய்ப்புக் கிடைக்கும் போது, ஒட்டப்பிடாரத்தில் உள்ள இவரது நினைவில்லத்துக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று காட்டுங்கள். 

கோவை தொண்டாமுத்தூர் புளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரிவர்ஷிணி என்ற நான்காம் வகுப்பு மாணவி, ஒன்பது சிறுவர் கதைப் புத்தகங்களைத் தம் அம்மாவின் உதவியுடன் எழுதி, ஒரே நாளில் ஒன்பது இடங்களில் வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.  அவருக்குச் சுட்டி உலகம் சார்பாக, வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

“குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் சமூக விழுமியங்களை வளர்த்தெடுக்கவும், இளந்தளிர் இலக்கியத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.  “இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 100 குழந்தைகளுக்கு இலக்கிய நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் வெளியிடப்படும்” என்றும்,

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம், 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களுக்கு 25 ரூ ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புகள், குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவித்துச் சிறார் எழுத்தாளர்கள் பலரை, உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகள் எழுத வேண்டுமென்றால், வாசிப்பு அவசியம். வாசிக்க வாசிக்கத் தான் எழுத்து வசப்படும். எனவே உங்கள் குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். வாசிப்பு உங்கள் குழந்தையின் கற்பனையைத் தூண்டி, படைப்புத் திறனை வெளிக்கொண்டு வரும். நாளை உங்கள் குழந்தையும் எழுத்தாளராகிச் சாதனை படைக்கலாம்!

அடுத்த மாதம் சந்திப்போம்,

ஆசிரியர்.

Share this: