தலையங்கம் – ஜூன் 2023

Adhithiread_pic

அனைவருக்கும் வணக்கம்.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளி செல்லவிருக்கும் சுட்டிகளுக்கு,  அன்பு வாழ்த்துகள்!

உங்கள் விடுமுறையை எப்படிக் கழித்தீர்கள்? எத்தனை பேர் உங்கள் ஊரில் உள்ள நூலகத்துக்குச் சென்றீர்கள்? உங்கள் ஊரில் அரசு நூலகம் இருக்கிறது அல்லது இல்லை என்ற விபரம், உங்களுக்குத் தெரியுமா?  நூலகத்துக்குச் சென்று புத்தகம் ஏதும் வாசித்தீர்களா? புத்தகம் வாசித்த, குழந்தைகளுக்கு, எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

இது வரை போகாத குழந்தைகள் பெற்றோருடன், உங்கள் ஊர் நூலகத்துக்குச் சென்று, அங்கு உறுப்பினர் ஆகுங்கள். அங்கு வகை வகையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் புரட்டிப் பாருங்கள். என்னென்ன பிரிவுகளில், எத்தனை தலைப்புகளில், அங்குப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நூலகத்தில் சிறுவர் பிரிவுக்குச் சென்று, வண்ணப் படக்கதைகளை எடுத்துப் படங்களைப் பாருங்கள். பிடித்த புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்து வாசித்துப் பழகுங்கள். முதலில் எழுத்துக் கூட்டி வாசிப்பதில் சிக்கல் இருந்தாலும், தொடர்ந்து வாசித்தால், வாசிப்பு வசப்படும். சிறு புத்தகம் என்றாலும், அதை வாசித்து முடித்தவுடன், அலாதியான ஓர் இன்பம் கிடைக்கும். என்னால் யார் உதவியுமின்றி வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். உங்கள் மொழித்திறனில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும்.

‘சுட்டி உலகம்’ கடந்த மே மாதம் மூன்றாவது ஆண்டில், அடியெடுத்து வைத்ததையொட்டி, எங்கள் தளத்தில், தமிழ்க் கற்பிக்கும் காணொளிகளை வெளியிடத் துவங்கியிருப்பதை, நீங்கள் அறிவீர்கள் தானே? வெளிநாடுவாழ்க் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் வாழும் குழந்தைகளும், தமிழ் எழுத்துகளைக் கற்க, இக்காணொளிகள் பயனுள்ளதாயிருக்கும்.

பெற்றோர் தம் குழந்தைகளுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், படைப்புத் திறனை ஊக்குவிக்கவும் விரும்பினால், பாடப் புத்தகங்கள் தாண்டிய கதைப் புத்தகங்களை வாங்கி, வாசிக்கக் கொடுக்க வேண்டியது அவசியம். அவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டிப் படைப்பூக்கத்தை ஊக்குவிப்பதில், கதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப் படைப்பூக்கமே, இன்றைய அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்ட எங்கள் சுட்டி உலகத்தில், குழந்தைகளின் வயதுக்கேற்ற நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியாகியுள்ளன. குழந்தைகளுக்கு வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்த, அவர்கள் வயதுக்கேற்ற புத்தகங்களைத் தேர்வு செய்து கொடுப்பது அவசியம்.

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகப்பரிசு கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பட, பாடப்புத்தகம் வாசிப்பது மட்டும் போதாது. அதைத் தாண்டிய வாசிப்பு அவசியம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரேயொரு அலமாரியிலாவது, ஒரு சிறு நூலகம் அமைப்பது மிக முக்கியம்!

‘சுட்டி உலகம்’ காணொளியிலும், குழந்தைகளுக்கான பாடல்களும், கதைகளும் வெளியாகின்றன. பல புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொள்ளவும், தமிழைத் திருத்தமாக உச்சரிக்கவும், இக்காணொளிகள் மிகவும் உதவும்.

வாசிப்பை நேசிப்போம்! வாசிப்பைச் சுவாசிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: