தலையங்கம் – ஜனவரி 2023

Kavin_Editorial_pic

அன்புடையீர்! வணக்கம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்! கொரோனாவின் துன்பங்கள் நீங்கி, வளமும் நலமும் பெற்ற ஆண்டாக இப்புத்தாண்டு மலர, அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த புத்தக அறிவுலகத் திருவிழா சென்னையில் 06/01/2023 அன்று துவங்கி, 22/01/2023 வரை நடக்கவிருக்கிறது. இந்தாண்டு முதல்முறையாக 1000 அரங்குகளுடன், பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவாகத் துவங்கியிருக்கிறது.  குழந்தைகளுக்கான புத்தகங்களுக்குத் தனியாக அரங்குகள் இம்முறை ஒதுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

புத்தகத் திருவிழாவுக்கு அவசியம் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் வயதுக்கேற்ற பாடப்புத்தகங்கள் அல்லாத கதைப்புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, வாசிப்பை ஊக்குவியுங்கள். நூல்களைச் சுட்டி உலகத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற சிறார் நூல்களை அறிமுகம் செய்துள்ளோம். நாலு வயது குழந்தைக்குப் பொன்னியின் செல்வன் நாவலை வாங்கிக் கொடுத்தால், வாசிப்பென்றாலே ஓடிவிடுவார்கள்.

தமிழில் தற்காலத்தில் ஏராளமான சிறந்த கதைப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன. பழைய பஞ்ச தந்திரக்கதைகளையும், இதிகாசம் புராணக்கதைகளையும் வாங்குவதை விடுத்து, இக்காலக்குழந்தைகளின் கற்பனையையும் சிந்தனையையும் ஊக்குவிக்கும் விதமாகப் புதிய கதைப்புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். குழந்தைகளின் கற்பனைத் திறன் பெருகுவதற்குக் கதைகள் வாசிப்பது மிகவும் அவசியம். 

ஆங்கிலக் கதை நூல்களை வாங்குவதோடு, தமிழில் வெளியாகியிருக்கும் நூல்களையும் வாங்கிக் கொடுப்பது, மிகவும் முக்கியம். நம் தாய்மொழியை இளந்தலைமுறைக்குக் கொண்டு செல்வது, நம் கடமை. தமிழ்ப்புத்தகங்கள் அதிகளவில் விற்பனையானால், பதிப்பாளர்களும் புதிய சிறார் நூல்களை வெளியிட முன்வருவார்கள்.  எழுத்தாளர்களும் சிறார் இலக்கியம் படைப்பதில் கவனம் செலுத்துவார்கள்.

குழந்தைகளின் பிறந்த நாளுக்கும், முக்கிய பண்டிகைகளுக்கும் புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கும் வழக்கத்தைத் துவங்குவோம்!  புத்தகம் வாங்குவது செலவல்ல: அது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கான முதலீடு என்பதில் நம்பிக்கை கொள்வோம்.

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: