அன்புடையீர்!
வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துகள்!
2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது, ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுவர் நூலுக்குக் கிடைத்துள்ளது. இதை எழுதிய எழுத்தாளர் மு.முருகேஷ் அவர்களைச் சுட்டி உலகத்தின் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்!
ஜனவரி 3 ஆம் தேதி, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ என்ற சிறப்புப் பெறும், சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்த நாள். இந்நாள் பெண்களின் கல்வி தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவரின் கணவர், ஜோதிராவ் புலே என்பவரும் சமூக சீர்திருத்தப் போராளி. இவர்கள் இருவரும் இணைந்து, அக்காலத்தில் கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருந்த பெண்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்காகவும் போராடினார்கள். 1848 ஆம் ஆண்டு, பெண் குழந்தைகளுக்காக, இந்தியாவிலேயே முதல்முறையாகப் புனேவில் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து, சாவித்திரிபாய் புலே ஆசிரியராக அமர்ந்தார்.
பெண்களுக்குக் கல்வி போதித்தார் என்பதற்காக, இவர் பட்ட கஷ்டம், கொஞ்சம் நஞ்சமல்ல. பழமைவாதிகளும், மேல்சாதியினரும் தினமும் இவர் பள்ளிக்குச் செல்லும் வழியில், இவர் மேல் சாணியையும், சேற்றையும் வாரி வாரி வீசுவார்களாம்.
அதனால் தினமும் பள்ளிக்கூடம் போனபோது, இரண்டு புடைவை எடுத்துப் போய், உடையை மாற்றிக் கொண்டு, பாடம் நடத்துவாராம். இத்தனை சிரமங்களையும் தாங்கிக் கொண்டு, அன்று இவர் செய்த சமூக சீர்திருத்தத் தொண்டினால் தான், இன்று பெண்களும் ஆண்களுக்கிணையாகக் கல்வி கற்று முன்னேறியிருக்கிறார்கள். எனவே இந்நாளில் சாவித்திரி பாய் புலேவின் நினைவைப் போற்ற வேண்டியது, நம் கடமையல்லவா?
2022 ஆம் ஆண்டிலாவது, கொரோனாவின் பிடியிலிருந்து முற்றிலுமாக விடுபடுவோம் என்று ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் ஒமைக்ரான் என்ற புதிய அலை மீண்டும் நம்மைத் தாக்கும் என்று எச்சரிக்கிறார்கள். எனவே குழந்தைகள் முதல் பெரியவர் வரை, தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதால், வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுடன், பொழுது போவதும் மிகவும் கஷ்டம். எந்நேரமும் கைபேசி, இணையம், தொலைக்காட்சி என அவர்கள் மூழ்கிப் போகாமலிருக்க, வாசிப்புப் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்துவது மிகவும் அவசியம்!
மன அழுத்தம் அவர்களை அண்டாமல் இருக்கக் கதைப்புத்தகங்கள் மிகவும் உதவும். வாசிப்பு மனமகிழ்ச்சியைத் தருவதுடன், நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்கவும், குழந்தைகளின் கற்பனையை வளர்க்கவும் பெரிதும் உதவும்.
கொரோனாவின் ஒமைக்ரான் அலையால், 2022 ஜனவரி 5 ஆம் தேதி துவங்கவிருந்த, நாம் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை புத்தகக்காட்சி ஒத்திப்போடப் பட்டுள்ளது. அநேகமாக மார்ச் 2022 ல் நடக்க வாய்ப்புள்ளது.
இந்தாண்டு புத்தகக்காட்சியில் ஏராளமான சிறுவர் நூல்கள் வெளியாக இருக்கின்றன. குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதி வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கையும், தற்போது அதிகமாகியிருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. சிறுவர்கள் எழுதும் நூல்களை வாங்கி, மேலும் எழுத அவர்களுக்கு உற்சாகமூட்டுங்கள்.
வெளியாகும் புதிய நூல்கள் பற்றிய விபரங்களைச் சுட்டி உலகம் புத்தகக் காட்சி துவங்கும் சமயம் வெளியிடும். கண்டிப்பாகப் புதிய சிறுவர் நூல்களை வாங்கிக் கொடுத்துச் சிறுவர்களுக்கு வாசிப்பின் சுவையை அறிந்திடச் செய்யுங்கள்.
ஆன்லைன் மூலமும், புத்தகங்களை வாங்க இயலும். ஏற்கெனவே சுட்டி உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களைக் குழந்தைகளின் வயதுக்கேற்றபடி வகைப்படுத்தி, பதிப்பகங்களின் பெயர்களோடு அறிமுகம் செய்திருக்கிறோம். உங்கள் குழந்தையின் வயதுக்கேற்ற புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்வது பெற்றோரின் கடமை!
சுட்டி உலகம் துவங்கி எட்டு மாதங்களே ஆன நிலையில், பார்வைகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்குகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம். சுட்டி உலகத்தின் யூடியூப்பிலும் அவ்வப்போது தமிழ்ப் பாடல்களும், கதைகளும் அடங்கிய காணொளிக் காட்சிகள் வெளியாகின்றன. குழந்தைகளுக்கு அவற்றைப் போட்டுக் காட்டி, மகிழச் செய்யுங்கள்.
மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்!
அன்புடன்
ஆசிரியர்
சுட்டி உலகம்.