அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்!
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், 48வது புத்தகக்காட்சி டிசம்பர் 27ஆம் தேதி துவங்கி, ஜனவரி 12 வரை 17 நாட்கள் நடைபெறும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
வாசகருக்கான நுழைவு கட்டணம் 10 ரூபாய்; ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில், 10 லட்சம் விலையில்லா டிக்கெட் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ளோர் அவசியம் ஒரு முறையாவது இந்தப் புத்தகக் காட்சிக்குச் சென்று வர வேண்டும்.
பெற்றோர் தவறாமல் தங்கள் குழந்தைகளை அறிவுத் திருவிழாவான இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னென்ன தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவருகின்றன? என்று அவர்கள் புத்தகங்களைக் கையில் எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கவும், புதுப்புத்தக வாசனையை மூக்கில் வைத்து நுகரவும் அனுமதியுங்கள். படங்களைப் பார்த்து ரசிக்கும் அவர்களுக்குப் புத்தகங்கள் மீது தானாகவே ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
புத்தகக் காட்சியில் உங்கள் குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை வாங்கிப் பரிசளியுங்கள். உங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்காமல், அவர்கள் விருப்பத்திற்கேற்ப புத்தகங்களை வாங்கிப் பரிசளிப்பது மிகவும் முக்கியம்.
குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் இருப்பது அவசியம். ஒரு அலமாரியில் இரண்டு தட்டுகளையாவது புத்தகங்களுக்கு என ஒதுக்கி ஒரு நூலகம் அமையுங்கள். குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் அவசியம் ஒரு புத்தகம் வாங்கிப் பரிசளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
தற்காலத்தில் குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதிப் புத்தகங்கள் வெளியிடுவது, அதிகரித்திருக்கிறது. குழந்தை எழுத்தாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவது, வரவேற்க வேண்டிய செய்தி. உங்கள் குழந்தையும் ஒரு படைப்பாளர் ஆக வேண்டுமா? குழந்தைகளுக்குக் கதைப் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். கதைப் புத்தகம் வாசிப்பது குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, படைப்பூக்கத்தை வெளியில் கொண்டு வந்து, அவர்களைப் படைப்பாளர்களாக மாற்றக் கூடிய வல்லமை படைத்தது.
எங்கள் ‘சுட்டி உலக’த்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறார் நூல்களின் அறிமுகங்கள் உள்ளன. உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களின் அறிமுகத்தை வாசித்துப் பார்த்துச் சிறந்த நூல்களை நீங்கள் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்க, இந்த அறிமுகம் உதவும்.
மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.