அன்புடையீர்!
வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிரிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்!
‘சுட்டி உலகம்’ துவங்கி, இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. பார்வைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தொடுகின்றது என்பது, மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஏறக்குறைய 150 சிறார் நூல்கள் பற்றிய அறிமுகங்களைச் சுட்டி உலகத்தில் வெளியிட்டுள்ளோம். வயதுக்கேற்ற புத்தகங்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வசதியாக, புத்தகங்களை வயதுவாரியாகப் பிரித்து அறிமுகம் செய்துள்ளோம்.
ஜனவரி 2024இல் சென்னை புத்தகக் காட்சி துவங்கவிருக்கிறது. இன்னும் பல சிறார் நூல்கள், அப்போது வெளியிடப்படும். புதியவர்கள் பலர் இப்போது சிறுவர்க்காக எழுதுகிறார்கள். குழந்தைகளுடன் எப்போதும் இருக்கும் பெண்கள் பலர், தற்காலத்தில் எழுத முன்வந்துள்ளார்கள். இக்காலத்துக்கேற்ற நவீன சிந்தனைகளுடன் கூடிய, புத்தகங்கள் வெளிவந்தமுள்ளன.
பெற்றோர் இப்புதிய சிறார் நூல்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சிறந்த சிறார் நூல்களை மாணவர்க்குப் பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் வாசித்திருப்பது, மிகவும் அவசியம்.
பெரும்பாலும் பெற்றோர் ஆங்கில நூல்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதையே பெருமையாக எண்ணுகிறார்கள். ஆங்கில நூல்கள் வாசிப்பதில் தடையேதுமில்லை. அதே சமயம், தமிழை முற்றிலுமாகப் புறக்கணித்து, அந்நிய மொழியை மட்டுமே போற்றிக் கொண்டாடும் நம் மனநிலை மாற வேண்டும். ஏனெனில் தமிழ் தான், நம் அடையாளம்!
தாய்மொழியான தமிழே வாசிக்கத் தெரியாமல், அடுத்த தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் ஈராயிரம் ஆண்டு பழமையான மொழி என்று வெற்றுப் பெருமை பேசுவதால், எந்தப் பயனுமில்லை. நம் தமிழை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு, தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. எனவே பெற்றோர் தமிழ்ப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சிறந்த தமிழ் நூல்களை, மாணவருக்குப் பரிந்துரைத்து வாசிக்கச் சொல்ல வேண்டும்.
சுட்டி உலகம் காணொளியில் குழந்தைப் பாடல்கள் வெளியாகின்றன. கதைகளும் சொல்கிறோம். குழந்தைகளுக்கு இவற்றைப் போட்டுக் காட்டினால், தமிழை உச்சரிப்பதிலும், புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதிலும், நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.
இப்பூவுலகில் மனித உயிர் நிலைக்க, குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியது நம் கடமை. அவர்களுக்கு மாதம் ஒரு மரம், பறவை, விலங்கு அறிமுகம் செய்கின்றோம்.
பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு ஒன்றே, குழந்தைகளின் பன்முகத் திறமையை வெளிக் கொண்டுவரும். அதிலும் கதைப்புத்தகங்களே அவர்களது கற்பனையைத் தூண்டிப் படைப்பூக்கத்தை ஊக்குவிக்கும்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.