தலையங்கம் – ஏப்ரல் 2024

Editorialapril_pic

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் சுட்டி உலகத்தில் செய்யப்பட்டு உள்ளன. குழந்தைகளின் வயதுக்கேற்ற புத்தகங்களை வாங்க, இந்த அறிமுகம் மிகவும் உதவும்.

முழு ஆண்டுத் தேர்வு முடிந்து, எல்லோருக்கும் கோடை விடுமுறை துவங்கி விட்டதா? புத்தக வாசிப்பில் ஈடுபட, இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது வரை புத்தக வாசிப்பின் சுவையை உணராதவர்கள், முதன் முறையாகப் புத்தகம் ஒன்றை வாசித்துப் பாருங்கள்.

உங்கள் ஊரில் நூலகம் உள்ளதா? அது செயல்படும் நிலையில் இருக்கின்றதா? இதுவரை நூலகப் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள், விடுமுறையின் போது, ஒரு முறை சென்று பாருங்கள். நூலக உறுப்பினர் ஆகிப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்து வந்து வாசியுங்கள்.  நாள் முழுக்க செல்போன், தொலைகாட்சியில் மூழ்கிக் கிடக்காமல், வாசிப்பில் ஈடுபட்டால், புதுவித வாசிப்பு இன்பம் கிடைக்கும். அத்துடன் அறிவும் விசாலமாகும்.

வாசிப்பைப் பொறுத்தவரை, ஏப்ரல் மிகவும் ஏற்ற மாதம். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி தான், உலகம் முழுக்க, குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகின்றது என்ற செய்தி, உங்களுக்குத் தெரியுமா?    

இந்நாளைப் பற்றி மேலும் விபரம் அறிய, சுட்டி உலகத்தில் உள்ள ‘அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் 2024’ என்ற கட்டுரையை வாசிக்கலாம்.

மேலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதி, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகின்றது.  புத்தக வாசிப்பு, பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், யுனெஸ்கோ இந்நாளைக் கொண்டாடுகின்றது.

புத்தகம் அறிவைப் பெருக்குவதோடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும் உதவுகின்றது. மனிதரிடையே புரிதல், சகிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உதவுகின்றது.

சிறு வயதிலேயே வாசிக்கத் துவங்கியவர்கள் தாம், முதுமை வரை வாசிப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. எனவே சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது?’ என்ற கேள்விக்கு, அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் சொன்ன பதில், “புத்தகம்”. எனவே சுட்டிகளே! இன்று முதல் வாசிக்கத் துவங்குங்கள்!

கோடையில் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில், தண்ணீர் வற்றிக் காய்ந்து விடும். எனவே பறவைகளுக்கு மொட்டை மாடியில், மண் சட்டியில் தினமும் தண்ணீர் வைக்க மறவாதீர்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

(நன்றி – படம் – இணையம்)

Share this: