எல்லோருக்கும் அன்பு வணக்கம்.
பெண்கள் அனைவருக்கும், மகளிர் தின வாழ்த்துகள்!
மார்ச் 8 ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினமாகக் கொண்டாடப் படுகின்றது என்பது, எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான். இது வெறும் கொண்டாட்ட நாள் அல்ல; சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை, இந்நாள் வலியுறுத்துகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்ற வரலாற்றை, அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1910இல் சர்வ தேச மகளிர் தினத்தை முதன்முதலில் அறிவித்த கிளாரா ஜெட்கின் குறித்தும், வாக்குரிமைக்காகப் போராடிய பெண்கள் குறித்தும், பெண் கல்வி வேண்டும் என்று போராடிய சாவித்திரி பாய் பூலே குறித்தும் இந்நாளில் தெரிந்து கொள்வது அவசியம். பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் போராடிய அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் வாசிக்க வேண்டும். நம் தமிழ்ச் சமுதாயத்தில் பாலினச் சமத்துவத்துக்குப் பெண், போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
மகளிர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், புதுச்சேரியில் 9 வயது பெண் குழந்தை ஆர்த்தியின் வன்புணர்வு கொலை பற்றிய செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிப் பெண் குழந்தைகளை வெளியே அனுப்பக் கூடாது என்று, பெற்றோர் முட்டாள்தனமாக முடிவெடுத்து, வீட்டுக்குள் முடக்குவதை விடுத்து, ஆண் குழந்தைகளைச் சரியான முறையில் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும்.
பெண் என்பவள் போகப் பொருள் அல்ல என்பதை, ஆண் குழந்தைகள் சிறுவயதிலேயே உணரும்படிச் செய்வது அவசியம். பெண்ணைச் சக மனுஷியாகப் பாவித்து, அவர்களின் உணர்வுகளை மதித்துத் தோழமையுடன் நடத்த வேண்டும் என்பதை, ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்.
சுட்டி உலகத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற புத்தக அறிமுகங்கள் உள்ளன. வாசிப்பு மனதைப் பண்படுத்தும். வாசிப்புப் பழக்கத்தைச் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள். நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவு செய்யவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் புத்தகங்கள் உதவும். இவ்வுலகில் புத்தகத்தைப் போன்ற சிறந்த துணை வேறில்லை.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.