அனைவருக்கும் அன்பு வணக்கம். 2025 ஜனவரி மாதம் சென்னை புத்தகத் திருவிழா முடிந்து, அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் புத்தகத் திருவிழா நடந்தவண்ணம் உள்ளது. உங்கள் ஊருக்கு அருகாமையில் நடக்கும் புத்தக விழாவுக்கு உங்கள் குழந்தைகளை அவசியம் அழைத்துச் சென்று, புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.
என்னென்ன தலைப்புகளில் புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதை, அவர்கள் தலைப்புகளை வாசித்துத் தெரிந்து கொள்ளட்டும். அவர்கள் விரும்புகிற புத்தகங்களை வாங்கி வாசிக்கக் கொடுங்கள். உங்கள் விருப்பத்தை அவர்கள் மேல் திணிக்காமலிருப்பது நல்லது. அக்பர் பீர்பால், பஞ்ச தந்திரக் கதைகள் போன்ற பழையன கழிந்து நவீன அறிவியல் சிந்தனையுடன் கூடிய புதிய புத்தகங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
தற்காலம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். சிறார்க்காகப் பல புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதியவர்கள் பலர் சிறார்க்காக எழுதத் துவங்கியிருக்கிறார்கள். பல புதிய பதிப்பகங்கள் சிறார் நூல்களை வெளியிட முன்வந்துள்ளன. பெற்றோர் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கி ஆதரவு அளிக்கவேண்டும். அப்போது தான் இன்னும் தரமான நூல்கள் வெளியிட பதிப்பகத்தார் முன்வருவார்கள். ஆசிரியர்கள் வகுப்பறைகளில் மாணவர்க்குப் புதிய நல்ல நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும். அதற்கு அவர்களுக்கும் வாசிப்பில் ஆர்வம் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதும் நூல்களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. கதைப் புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளுக்குக் கற்பனா சக்தி அதிகமாகும். நாளாக ஆக அவர்களுக்கு எழுதும் திறனும் கைவரப் பெறும். கதை வாசிக்கும் குழந்தைகளின் படைப்பூக்கம் தூண்டப்பெற்று வருங்காலத்தில் அவர்கள் சிறந்த படைப்பாளர்களாக மிளிர்வது உறுதி.
இந்த மாதம் பிறந்த ஓர் ஆளுமை குறித்துத் தெரிந்து கொள்வோமா? பிப்ரவரி 19ஆம் தேதி “தமிழ்த் தாத்தா” என்று சிறப்பித்து அழைக்கப் பெறும் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாள். அவருடைய முயற்சியாலும், கடின உழைப்பாலும் தாம், சீவக சிந்தாமணி உட்பட நம் பழந்தமிழ் இலக்கியங்கள் அழிந்து போகாமல் பதிப்பிக்கப் பெற்றன.
உ.வே.சா அழிந்து போகும் நிலையில் இருந்த மூவாயிரத்துக்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்து பிரதிகளையும் பல ஊர்களுக்குப் பயணம் செய்து அரும்பாடுபட்டுச் சேகரித்தார். சேகரித்தவற்றை ஆராய்ந்து, பிழை திருத்தித் தொகுத்து நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை அச்சிலேற்றினார். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். உ.வே.சாவின் தமிழ்த் தொண்டுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். அவரது பிறந்த நாள் ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாகக் கொண்டாடப் படுமென்று சென்ற ஆண்டு தமிழ் நாடு முதல்வர் அறிவித்து இருக்கிறார்.
சுட்டி உலகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறார் நூல்களின் அறிமுகம் உள்ளது. வயது வாரியாகப் புத்தக அறிமுகங்கள் உள்ளன. உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூலை வாங்க இந்த அறிமுகம் உதவும். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகம் வாங்கிப் பரிசளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ2152 கோடி நிதியை உ.பிக்கும் குஜராத்துக்கும் பகிர்ந்து அளித்திருக்கிறது. ‘PM SHRI’ திட்டத்தில் இணைய வேண்டும்’ என்ற ஒன்றிய அரசின் நிபந்தனையைத் தமிழ்நாடு ஏற்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான அத்திட்டத்தில் இணைந்தால், மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசு எதிர்த்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்வி நிதியை மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு மாற்றியிருக்கிறது.
தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் ஒன்றிய அரசின் இந்த முடிவு, கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காத செயல். தமிழ்நாட்டைப் பழி வாங்கும் நடவடிக்கை இது. நம் மாணவர்களின் நலன் காக்க, கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒன்றாக இணைந்து, ஒன்றிய அரசின் இம்முடிவை எதிர்க்க வேண்டிய நேரமிது. ‘சுட்டி உலகம்’ சார்பாக என் வன்மையான கண்டனத்தை இங்குப் பதிவு செய்கிறேன்.
அன்புடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.