அன்புடையீர்! வணக்கம்.
சுட்டி உலகம் துவங்கி, இரண்டு மாதங்கள் முடிவடையும் நிலையில் பார்வை(views)களின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்துவிட்டது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம்.
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி! சிறார் நலன் காக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உதயமாகி, அதன் இணைய மாநாடு 13/06/2021 அன்று எழுத்தாளர் உதயசங்கர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் உதயசங்கர் இதன் தலைவராகவும், சிறார் எழுத்தாளர் விழியன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இன்னும் குழந்தைநல செயல்பாட்டாளர்கள் அறிஞர் பெருமக்கள், எழுத்தாளுமைகள்,கல்வியாளர்கள் அனைவரும் இச்சங்கத்தில் முக்கிய பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
இச்சங்கத்தில் குழந்தைகளின் நலனில் அக்கறை உள்ள அனைவரும் உறுப்பினராகலாம்.. நம் குழந்தைகளின் நலன் காக்க எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து, ஓர் அமைப்பாகத் திரள்வது, காலத்தின் கட்டாயம். அதிலும். கொரோனா பேரிடர் காலத்தில், பெற்றோரையும், உற்றோரையும் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன் காக்க, இந்தச் சங்கம் அமைவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சியான விஷயம்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, கோரத்தாண்டவமாடி விலை மதிப்பில்லாப் பல உயிர்களைப் பலி கொண்டுவிட்டது.. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கோ வார்த்தைகளில் வடிக்க முடியாத சோகம்! மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற செய்தி, மேலும் கவலையளிக்கிறது. எனவே குழந்தைகள் இக்காலக்கட்டத்தில் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம். அவர்களுக்கும் தடுப்பூசி கிடைத்துவிட்டால், மருத்துவ அறிவியலின் துணை கொண்டு வெற்றிகரமாக கொரோனாவை வெல்வோம்!
போரடிப்பது நல்லது! இதை நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தாலும், அதுவே ஆய்வுகளின் வழியாக உளவியலாளர் கண்டறிந்த உண்மை.. போரடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றிச் சிறப்புப் பதிவொன்றை இம்மாதம் வெளியிட்டுள்ளோம். அவசியம் வாசியுங்கள்!
பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலேயே அடைபட்டுக் கிடப்பதால் மன அழுத்தம் அதிகமாகி, மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்கேற்ற கதைப்புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்! தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றிலிருந்து புத்தக வாசிப்பு அவர்கள் கவனத்தைத் திருப்பி, கற்பனா சக்தியைத் தூண்டி அவர்களிடம் மறைந்திருக்கும் படைப்புத்திறனை அடையாளம் காட்டும். புத்தக வாசிப்பு ஒன்றே கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மன அழுத்தத்திலிருந்து, குழந்தைகளை மீட்பதற்கான ஒரே வழி!
மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்,
நன்றியுடன்,
ஆசிரியர்.