அன்புடையீர்! வணக்கம்! எல்லோருக்கும் (‘அட்வான்ஸ்’) இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்!
‘சுட்டி உலகம்’ துவங்கி மூன்று மாதங்களே ஆன போதிலும், பார்வைகளின் (views) எண்ணிக்கை நாலாயிரத்தைக் கடந்துவிட்டது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம்.
குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்ட இத்தளத்தில், இதுவரைக்கும் 70 க்கும் மேல், அச்சு+கிண்டில் புத்தகங்களை அறிமுகம் செய்திருக்கிறோம். வயது வாரியாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நூல்களை வாங்கி, உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து வாசிக்கச் செய்தீர்களென்றால்,’ சுட்டி உலகம்’ துவங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்!
கனடா நாட்டைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தை, ஒரு முழுக்கதையை எழுதிச் சாதனை புரிந்துள்ளமை குறித்து, இம்மாதம் வெளியாகியுள்ள சிறப்புப் பதிவை அவசியம் வாசியுங்கள். அச்சிறுமி ஒரு வயதில் வாசிக்கத் துவங்கி, மூன்று வயதில் கதையெழுதி முடித்துவிட்டாராம்!.
தொலைக்காட்சி, கைபேசி, இணையம் ஆகியவற்றிலிருந்து, குழந்தைகளின் கவனத்தைத் திருப்பி, கற்பனா சக்தியைத் தூண்டி, அவர்களிடம் மறைந்திருக்கும் படைப்புத்திறனை வெளிக்கொண்டுவர, புத்தக வாசிப்பு உதவும். கொரோனா காரணமாக ஓராண்டுக்கும் மேல், வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடப்பதனால், மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை, அதிலிருந்து மீட்பதற்கான ஒரே வழி, புத்தக வாசிப்பு மட்டுமே!
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கித் தந்து, நம் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார், நீரஜ் சோப்ரா. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாகத் தடகளப் போட்டியில் தங்கம் வென்று, வரலாறு படைத்துள்ள நீரஜ் சோப்ராவைச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்.
நாம் விளையாட்டின் மூலம் மிகச் சிறந்த மனித நேயப் பண்புகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி மீண்டும் நிரூபித்திருக்கிறது. விட்டுக் கொடுப்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் பேரானந்தம் கிடைக்கும் என்பது நிரூபணம் ஆகியிருக்கின்றது!
ஆண்கள் உயரம் தாண்டும் போட்டியில், இறுதிச் சுற்றில் போட்டியிட இத்தாலி வீர்ர் கியான்மார்கோ டாம்பேரியா(Gianmarco Tamberi) கத்தார் வீர்ர் முதாஸ் எஸ்ஸா பர்ஷீம் (Mutaz Essa Barshim) ஆகியோர் தகுதி பெற்றனர். இருவரும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்க, 4 வது வாய்ப்பு இருவருக்கும் தரப்பட்டது. ஆனால் இத்தாலி வீரருக்குக் காலில் அடிபட்டிருந்ததால், போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார், இந்நிலையில் தாமும் விலகிக் கொண்டால், இருவருக்கும் தங்கப்பதக்கம் கிடைக்குமா என்று கத்தார் வீர்ர் கேட்க, கிடைக்கும் என்று ஒலிம்பிக் நடுவர் கூறியதும், அடுத்த நிமிடம் சிறிதும் யோசிக்காமல், தாமும் விலகிக்கொள்வதாகப் பர்ஷீம் சொல்லிவிட்டார்.
இத்தாலி நாட்டு வீர்ர் சக போட்டியாளரைக் கட்டித் தழுவி, தம் நன்றியைத் தெரிவித்ததோடு, தரையில் விழுந்து அழுது புரண்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டார். விளையாட்டின் மூலம் சாதி, மதம், இனம், மொழி என எல்லா வேறுபாடுகளையும் கடந்து, மனித குல மாணிக்கங்களாக நாம் ஜொலிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! ஒலிம்பிக் வரலாற்றில் மனித குலம் உள்ளளவும், நினைவு கூறத்தக்க அற்புதத் தருணமிது!
தம் பரந்த மனப்பான்மையால், கத்தார் நாட்டுக்குத் தங்கப் பதக்கத்தோடு சேர்த்து, உலகளவில் பெரும் மதிப்பைத் தேடித் தந்து, அனைவரது நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்ற கத்தார் வீரரைச் சுட்டி உலகம் வாழ்த்துகிறது! வாழ்க முதாஸ் எஸ்ஸா பர்ஷீம்!
மீண்டும் அடுத்தமாதம் சந்திப்போம்,
நன்றியுடன்,
ஆசிரியர்.