2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘டோராவும் மறைந்து போன தங்கநகரமும்’ (Dora and the Lost City of Gold) என்ற அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கியவர், ஜேம்ஸ் பாபின் ஆவார்.
இது தொலைக்காட்சியில் வெளிவந்த ‘டோரா தி எக்ஸ்புளோரர்’ என்ற அனிமேஷன் தொடரைத் தழுவி எடுக்கப்பட்டது. தொலைக்காட்சி தொடரில், டோரா துவக்கப்பள்ளி மாணவி. இப்படத்தின் துவக்கத்தில் 6 வயது குழந்தையாக அறிமுகமாகும் டோரா, பின்னர் பதின்பருவ உயர்நிலைப்பள்ளி மாணவியாக நடிக்கிறார். குழந்தைகளின் மனங்கவர்ந்த டோரா பாத்திரத்தில், இசபெல்லா மோனர் என்பவர் நடிக்கிறார்.
பெரு நாட்டின் அடர்ந்த காட்டில் டோராவும், அவள் பெற்றோரும் வசிக்கின்றனர். அவள் பெற்றோர் அகழ்வாராய்ச்சித் துறை பேராசிரியர்கள். டோராவின் மாமா பையனும், விளையாட்டுத் தோழனும் ஆன டீயகோ குடும்பமும் அங்கேயே வசிக்கின்றது. அக்காட்டில் டோராவும், டீயகோவும் ஒன்றாக விளையாடி, ஜாலியாகப் பொழுதைப் போக்குகிறார்கள். டோராவுக்கு பூட்ஸ் என்ற பெயருடைய குரங்குக்குட்டி, சிறந்த நண்பனாக இருக்கின்றது. ஒரு நாள் டீயகோவின் குடும்பம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குக் குடி பெயர்கிறது. டோரா வருத்தத்துடன் டீயகோவுக்குப் பிரியாவிடை கொடுக்கிறாள். டோராவுக்குப் பெற்றோர் வீட்டிலேயே கல்வி போதிக்கின்றனர்.
பத்தாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு, இன்கா நாகரிகத்தின் தொலைந்து போன பாரபட்டா தங்கநகரம் இருந்த இடத்தைப் பெற்றோர் ஓரளவு யூகிக்கின்றனர். அந்த இடத்தை நேரில் சென்று கண்டுபிடிக்க, இருவரும் பெரு காட்டுக்கு உள்ளே செல்ல முடிவு எடுக்கின்றார்கள். எனவே 16 வயதான டோராவை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்க அனுப்புகிறார்கள். அங்கு டீயகோ வீட்டில் தங்கி டோரா படிக்கிறாள்.
காட்டில் வளர்ந்த டோராவுக்கு, நகரத்துப் பள்ளி மாணவரிடையே பழகுவதும், சுமுகமான நட்பு ஏற்படுத்திக் கொள்வதும் எளிதாக இல்லை. பள்ளியில் அவள் ஆடும் மயில் நடனத்தை, மற்ற மாணவர்கள் பயங்கரமாகக் கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். அதைப் பார்த்த டீயகோவுக்கு மிகவும் அவமானமாக இருக்கின்றது, வகுப்பில் புத்திசாலித்தனமான பதில்களைச் சொல்லும் டோராவை, ஏற்கெனவே நன்றாகப் படித்த சாம்மி என்ற மாணவி, தனக்குப் போட்டியாக நினைத்துப் பொறாமை கொள்கிறாள்.
ஒரு நாள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட டோரா வகுப்பு மாணவர்களைப் பள்ளி அழைத்துச் செல்கிறது. அச்சமயம் டோராவையும் அவளுடன் சேர்த்து டீயகோ, சாம்மி. ராண்டி ஆகிய மூவரையும், ஒரு கூலிப்படை கும்பல், பெரு நாட்டுக்குக் கடத்தி விடுகின்றது. அங்கு அவர்களைச் சந்திக்கும் அலெஜாண்டிரோ என்பவர், அவர்கள் தப்பிக்க உதவி செய்கிறார். டோராவின் அப்பா தம்முடைய நண்பர் என்று அவர் தம்மை அறிமுகம் செய்து கொள்கிறார். டோராவின் பெற்றோர் காணாமல் போய்விட்டனர் என்றும் அவர் சொல்கின்றார்.
பாரபட்டா தங்க நகரத்தின் இருப்பிடத்தை யூகித்த தம் பெற்றோரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலம் பெரும் செல்வத்தைக் கைப்பற்ற, அந்தக் கூலிப்படை முயற்சி செய்கிறது என்று தெரிந்து கொள்கிறாள் டோரா. பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்காக, டோராவும் அவள் நண்பர்களும் அந்தக் காட்டுக்குள் பயணம் செய்கின்றனர். அலெஜாண்டிரோவும் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றார். டோரா வைத்திருந்த அக்காட்டின் வரைபடத்தைக் கூலிப்படையைச் சேர்ந்த ஸ்வைப்பர் என்ற நரி, தந்திரமாகத் திருடி எடுத்துச் சென்று விடுகின்றது.
டோராவும் அவள் குழுவினரும் காட்டுப் பயணத்தின் நடுவில் பயங்கரமான சோதனைகளையும், தடைகளையும் எதிர் கொள்ள நேருகின்றது. சதுப்பு நிலத்தில் மாட்டிக்கொண்டு, வெளியே வரமுடியாமல் தவிக்கின்றார்கள். ஈர மண்ணில் மூழ்கப் போகும் கடைசி நிமிடத்தில், அலெஜாண்டிரோவைக் காப்பாற்றுகிறார்கள். இடையிடையே கூலிப்படையினர் இவர்கள் மீது பயங்கரமான தாக்குதல் நடத்துகிறார்கள். டோராவின் நண்பனான பூட்ஸ் குரங்குக்குட்டி, டோராவுக்கும், அவள் நண்பர்களுக்கும் ஆபத்து சமயங்களில் கைகொடுத்து உதவுகின்றது.
பல்வேறு தடைகளைத் தாண்டி, முடிவில் பாரபட்டாவின் எல்லையில் டோரா அவளுடைய பெற்றோரைச் சந்திக்கிறாள். அவர்களைப் பிடித்து அலெஜாண்டிரோ சிறையில் அடைக்கின்றான். அப்போது தான் அலெஜாண்டிரோ தன் அப்பாவின் நண்பன் அல்ல; அவனே அந்தக் கூலிப்படையின் தலைவன் என்ற உண்மை டோராவுக்குத் தெரிய வருகின்றது. இந்த உண்மை தெரிந்து, டோராவும், அவள் நண்பர்களும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள்.
டோராவையும் அவள் நண்பர்களையும் பின்புறமாகக் கைகளைக் கட்டி அலெஜாண்டிரோ தன்னுடன் கொண்டு போகிறான். ஆனால் பூட்ஸ் குரங்கு கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கின்றது. டோராவும் அவள் நண்பர்களும் அவனிடமிருந்து தப்பித்து, அந்தப் பாரபட்டா தங்கநகரத்தைத் தேடிச் செல்கின்றனர். தங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்து, தன் பெற்றோரை விடுவிக்கலாம் என்பது டோராவின் எண்ணம்.
அந்தப் பாரபட்டா கோவிலுக்குள் நுழைந்து, அந்தத் தங்கச்சிலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, அவர்கள் பல கடினமான புதிர்களை விடுவிக்க வேண்டியுள்ளது. பயங்கரமான பல ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் முடிவில் வெற்றிகரமாக அந்தக் கோவிலின் நடுவில் இருந்த தங்கச்சிலையைக் கண்டுபிடிக்கிறார்கள். இரகசியமாக அவர்களைப் பின்தொடர்ந்து வரும் அலெஜாண்டிரோ தங்கச்சிலையைக் கைப்பற்ற நினைத்து, அதன் பொறியில் மாட்டிக் கீழே விழுந்து விடுகின்றான். பாரபட்டா காவல்படையினர் கூலிப்படையினரை அடித்து நொறுக்கி, அலெஜாண்டிரோவைப் பிடித்துச் சிறையில் வைத்து விடுகின்றனர். டோரா குழுவினர் மீதும், அந்தக் காவல் படையினர் கோபம் கொள்கின்றனர்.
“என் பெற்றோரைத் தேடித்தான் நானும் என் நண்பர்களும் வந்தோம்; தங்கத்தைத் தேடி வரவில்லை” என டோரா அந்தப் படையினரின் அரசியிடம் விளக்குகிறாள். டோராவின் விளக்கத்தால் அரசி கோபம் நீங்கி சமாதானம் அடைகிறாள். ஒரு நிமிடம் தங்கச்சிலையைச் சிறுவர்கள் பார்க்க அனுமதி கொடுக்கிறாள். டோராவும் அவள் குழுவும் தகதகவென ஜொலிக்கும் சிலையைப் பார்த்து, வியப்பும், இன்ப அதிர்ச்சியும் அடைகின்றார்கள். அந்தச் சமயம் ஸ்வைப்பர் நரி அங்கு வந்து, சிலையைத் தூக்கிக் கொண்டு ஓடுகின்றது. அதனால் கடவுள்கள் கோபமடைந்து, அங்கிருந்த கட்டிடங்கள் பயங்கரமாக இடிந்து விழுந்து நொறுங்குகின்றன. டோரா அந்தச் சிலையைக் கைப்பற்றி, மீண்டும் பழைய இடத்தில் வைத்தவுடன், கடவுள்களின் கோபம் தணிந்து, எங்கும் அமைதி திரும்புகின்றது.
எல்லோரும் பத்திரமாக ஊர் திரும்புகின்றனர். டோராவின் பெற்றோர் மீண்டும் ஒரு காட்டுக்குக் குடும்பத்தோடு செல்லலாம் என்று சொல்லும் போது, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று, தான் பள்ளியில் படிக்க விரும்புவதாக டோரா சொல்கிறாள். அதற்குப் பிறகு டோராவிடம் பள்ளி மாணவர்கள் அனைவரும் நெருங்கிய நட்பு கொள்கின்றனர். பாரபட்டாவைக் கண்டுபிடித்து நிகழ்த்திய சாதனையை நினைத்து டோராவும் அவள் நண்பர்களும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இவர்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடும் காட்சியுடன், படம் முடிவடைகின்றது.
சாகசமும் விறுவிறுப்பும், நகைச்சுவையும் நிறைந்த இப்படத்தை, 12 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம்.
(மே 2022 பொம்மி இதழில் எழுதியது)