பள்ளியில் கணிதம் என்றாலே, மாணவர் பலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது. வரலாறு போல, இதை மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்க முடியாது. புரிந்து படிக்க வேண்டும். வகுப்பில் கணித ஆசிரியர் நடத்தும் விதம், எல்லா மாணவர்க்கும் புரியுமென்றால், பிரச்சினை இல்லை. ஆனால் அப்படி நடப்பது அபூர்வமே. ஏனெனில் எல்லா மாணவர்க்கும், பாடத்தைக் கிரகிக்கும் திறன், ஒன்று போல் இருக்காது. புரியாமல் கணிதத்தைப் படித்துத் தேர்வு எழுதும் மாணவர்க்கு, இது ஒரு சிக்கலான விஷயமே. எனவே தான் புரிதல் இல்லாத, தெளிவு இல்லாத கணிதத்தின் மீது, மாணவர்க்குப் பயம் கலந்த வெறுப்பு ஏற்படுகின்றது.
இந்தச் சிக்கலைப் போக்கச் சிறார்க்கு விளையாட்டு மூலம், கணிதத்தை எளிமையாகப் புரிய வைக்கும், புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் விழியன். கணிதத்தில் நம் மாணவர்க்கு ஆர்வம் ஏற்பட, இது மிக மிக வரவேற்க வேண்டிய நல்ல முயற்சி. கணிதத்தில் ஏற்படும் ஆர்வம் மாணவர்களை அறிவியல் துறை நோக்கித் தானாகவே நகர்த்தும்.
ஏற்கெனவே தமிழ்ச் சிறார் நூல் வரலாற்றில், முதல் முயற்சியாகச் ‘சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்’ என்ற நூலை வெளியிட்டு, சீட்டுக்கட்டு விளையாட்டு மூலம், கணிதம் எப்படிக் கற்றுக் கொள்ளலாம் என்று இவர் விளக்கியிருந்தார். இப்போது இந்த நூலில், சிறுவர்க்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் மூலம், கணிதத்தை மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி விளக்கியிருக்கிறார். கணிதத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ள, மாணவர்க்கு, இது ஒரு வழிகாட்டு நூல் எனலாம்.
இதில் குழந்தைகளுக்குக் கிரிக்கெட் குறித்தும், கணிதம் குறித்தும், ஏற்படும் சந்தேகங்களை விளக்கும், முக்கியமான கதாபாத்திரத்தின் பெயரே, கணிதா. ‘மலைப்பூ’ நூலில் தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட மலைக்கிராமத்து லட்சுமி, இதில் தேசிய அளவிலான பெண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு, அசத்துகிறாள். தமிழ் நாட்டிலிருந்து இந்திய அணிக்குத் தேர்வு பெறுமளவுக்கு உயர்கிறாள்.
நம் மலைக் கிராமத்துச் சிறுமியைத் தம் நூலின் மூலமாகவாவது, அடுத்தடுத்த நிலைக்கு, உயர்த்திச் செல்லும் விழியன் வாழ்க! அவர் முந்தைய நூல்களின் கதாபாத்திரங்களும், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் ஒற்றைச் சிறகு ஓவியாவும், மாணவ எழுத்தாளர்களான ரமணியும், ரமணாவும், இதில் கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பது சிறப்பு! ரமணா கேட்கும் கேள்விகள், மெல்லிய நகைச்சுவையைத் தூண்டி, வாசிப்பைச் சுவாரசியமாக்குகின்றன.
கிரிக்கெட்டில் பயின்று வரும் கணிதத்தைப் பல எடுத்துக்காட்டுகள் மூலம் மாணவர்க்குப் புரியும் வண்ணம், எளிமையாகவும், சுவாரசியமாகவும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். மேலும் “ஸ்டேடியம் ஏன் ஓவல் வடிவத்தில் இருக்கிறது?” “பந்தின் எடை எவ்வளவு? கிரிக்கெட் மட்டையின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்?” “வீசுகளம் எந்தத் திசையில் இருக்க வேண்டும்? ஏன்?” “உலக கிரிக்கெட் தரவரிசையை எப்படிக் கணக்கிடுவது?” போன்று கிரிக்கெட் குறித்து, என் போன்று பெரியவர்களுக்குத் தெரியாத அதிகப்படியான செய்திகளையும், இதில் தெரிந்து கொள்ளலாம். கிரிக்கெட் குறித்து, இத்தனை விபரங்களைத் தெரிவிக்கும் நூல், தமிழில் இதற்கு முன் வெளி வந்திருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.
மேலும் சர்வதேசப் போட்டிகளில், ஸ்கோர் கார்டில் காட்டப்படும் பலவித புள்ளிவிபரத் தரவுகளை ஆய்வு செய்து, தகவலாக்கி, இன்னும் நுணுக்கமாக விளையாட்டை எப்படி அணுகலாம் என்றும், இந்நூல் விளக்குகிறது. கணிதம் மட்டுமின்றி, பள்ளியில் கிரிக்கெட் அணியில் விளையாடும் மாணவர்க்கு, கிரிக்கெட் குறித்தும், விரிவாகத் தெரிந்து கொள்ள உதவும் நூல்.
கிரிக்கெட் என்றாலே, ஆண்களுக்கான விளையாட்டு என்பது பெரும்பாலோரின் எண்ணம். “ஆண்கள் விளையாட்டுக்கு இருக்கும் கவனம் பெண்கள் விளையாட்டுக்கு இல்லை” என்ற தம் ஆதங்கத்தையும், கணிதா மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். உண்மை நிலை இப்படியிருக்க, சிறுமி லஷ்மி மட்டையைச் சுழற்றுவதை, அட்டைப்படமாக வெளியிட்டிருப்பதற்குப் பாராட்டுகள்! நூல் முழுதும் அருமையாகப் படங்கள் வரைந்துள்ள ஓவியர் மதனுக்கு, என் ஸ்பெஷல் பாராட்டுகள்!
கணிதத்தில் ஆர்வம் ஏற்படுத்திக் கொள்ளவும், கிரிக்கெட் பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்து கொள்ளவும், 13+ சிறுவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்.
வகை | சிறுவர் அபுனைவு |
ஆசிரியர் | விழியன் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல்:- +91 8778073949 |
விலை | ரூ 90/-. |