கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன் எழுதிய இக்குறுநாவல், கையெழுத்துப் பிரதியாக இருந்த போதே, 1978 ஆம் ஆண்டுக்கான ‘இலக்கிய சிந்தனை,’ பரிசைப் பெற்றது. சுற்றுச்சூழல் மாசுபட்டு நஞ்சாக மாறியிருக்கும் இன்றைய சூழலில், நம் குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்; அவசரமும் கூட. அந்த வகையில், கி.ராவின் பிஞ்சுகள் சுவாரசியமான குறுநாவல்.
இக்கதையின் நாயகன் சிறுவன் வெங்கடேசு, சிறிய அளவில் பறவைகளை வேட்டையாடினாலும், பறவை முட்டைகளைச் சேகரித்தாலும், பறவைகளின் அழகை ரசிக்கக் கூடியவனாக, அவற்றின்பால், அன்பு கொண்டவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான்.
ஆசிரியர் இந்நூலில் வாலாட்டிக்குருவி, போர்க்குயில், கருங்குயில், வல்லயத்தான், தேன்கொத்தி, தேன்சிட்டு, தட்டைச்சிட்டு, செஞ்சிட்டு, பூஞ்சிட்டு, பட்டுச்சிட்டு, வேலிச்சிட்டு, முள்சிட்டு, மஞ்சள்சிட்டு, செஞ்சிட்டு, கருஞ்சிட்டு, தைலான் பறவை, தாராக்கோழி, தண்ணிக்கோழி, ஏத்துமீன், தூறி, ஈராங்காயம் (வெங்காயம்), ஒட்டுப்புல், கொக்கராளி இலை, பல்லக்குப் பாசி, கல்லத்தி, புன்னரசி, குழிநரி, புழுதி உண்ணி, குங்குமத் தட்டான், பட்டு வண்டு என ஏராளமான இயற்கை உயிரினங்களின் பெயர்களை அறிமுகப்படுத்துகிறார்.
இயற்கையின் மீது நம் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படவும், நம் மண் சார்ந்த உயிரினங்களின் தமிழ்ப்பெயர்களை அறிந்து, அவற்றைப் பாதுகாக்கவும், சிறுவர் மட்டுமின்றிப் பெரியவர்களும், அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
நம் மண்ணின் உயிரினங்களை அறிந்து கொள்ளவும், இயற்கையை நேசிக்கவும் உதவும் நூல்.
வகை | சிறுவர் குறுநாவல் |
ஆசிரியர் | கி.ராஜநாராயணன் |
வெளியீடு | அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர். |
விலை | ரூ 150/- |