குழந்தை வளர்ப்பு குறித்த இத்தொகுப்பில் 26 கட்டுரைகள் உள்ளன. “எந்தக் குழந்தையும், நல்ல குழந்தை தான், ,மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே” என்ற பாடல், நமக்கெல்லாம் தெரிந்தது தானே? பெற்றோரின் வளர்ப்பும், குடும்பச் சூழ்நிலையுமே, குழந்தை நாளை, நல்ல குடிமகனாக உருவாவாதற்கு, முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இந்நூல் பெற்றோரும், இளையோரும் சந்திக்கும் பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதோடு, அதற்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், முன் வைக்கின்றது.
அதுவும் சமுதாய சிக்கல்கள், அபரிமிதமான சமூக ஊடகங்களின் வளர்ச்சியினால் ஏற்படும் நிழலுலகப் பாதிப்புகள், வளரிளம் பருவத்துக்குரிய சிக்கல்கள், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை. ஆகியவை மிகுந்து காணப்படும், இன்றைய காலக்கட்டத்தில், குழந்தைகளைச் சீரிய முறையில் வளர்த்தெடுப்பது, பெற்றோருக்குச் சவாலான பணியாகவே உள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பதின்பருவத்துப் பிள்ளைகள், சமுதாயப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், அவர்களைப் பெற்றோர் எப்படி வழிநடத்துவது என்பது பற்றியும், நடப்பு வாழ்வியல் உதாரணங்களோடு, பயனுள்ள தகவல்களைத் தருகிறது இந்நூல்.
பொதுத்தேர்வு எழுதப் போகும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக, இதில் கொடுத்திருக்கும் கருத்துகள், மிக முக்கியமானவை:. ‘அணைக்கட்டின் அடிச்சுவர் பலமாக இருக்கட்டும்’, ‘சரியான அழுத்தமே பலூனுக்கு அழகு’, ‘கரையே நோக்கியே கண்கள் இருக்கட்டும்’ எனக் கவித்துவமான தலைப்புகளும் அருமை.
“உங்கள் பிள்ளைகளுக்காக, நீங்கள் என்ன சேமிக்கின்றீர்கள் என்பதை விட, அவர்கள் எதிர்காலத்தில், மனிதநேயமுள்ள வெற்றியாளர்களாகத் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளக் கற்றுக் கொடுப்பதே சிறந்த்து என்கின்றார், ஆன் லேண்டர்ஸ் என்ற உளவியலார்”. (பக் 79)
இந்நூலிலிருந்து கொஞ்சம்:-
“பெற்றோரின் நல்ல எண்ணங்கள், நல்ல பேச்சு, நற்பழக்கங்கள், நன்னடத்தை யாவும் நன்மைகளின் கருவூலம் போன்றது. கண்களுக்குத் தெரியாத, கைகளால் தொடமுடியாத இந்நன்மைகளின் பலன்கள், நாம் நினைத்த நேரத்தில் அல்லாமல் தேவையான போது, நம் பிள்ளைகளுக்கு வந்து சேரும். வங்கியில் நம் கணக்கில் பண இருப்பு இருந்தால் தான், அதற்கான வட்டி நமக்கு வந்து சேரும். பணமே போடாமல், வட்டியை எதிர்பார்க்க முடியாது என்பது போல, நம்மிடம் இல்லாத நற்பழக்கங்களை நம் பிள்ளைகளிடம் எதிர்பார்க்க முடியாது கணவனும், மனைவியும் எப்போதும் சண்டை போடுவது, மரியாதையின்றிப் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவதுமாக இருந்தால், அதைத் தான் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். நன்மைகளின் கருவூலம் காலியாக இருந்தால், நாம் நன்மைகளை எப்படி எதிர்பார்க்க முடியும்? சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்?” (பக் 39)
பெற்றோருக்கு மட்டுமின்றி, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க விழையும் அனைவருக்குமே, மிகவும் பயனுள்ள நூல்.
வகை | குழந்தை வளர்ப்பு குறித்த கட்டுரை தொகுப்பு |
ஆசிரியர் | பிரியசகி & ஜோசப் ஜெயராஜ் |
வெளியீடு | பாரதி புத்தகாலயம், சென்னை |
விலை | ரூ 150/- |