தியா

diya book cover

இது 2016 ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்ற நூல்..  மிகச் சிறப்பான மொழியாக்கம்..  யூ.கே.ஜி படித்த போது, உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்ற  சிறுமி, பின் படிப்பை வெறுத்துப் பள்ளிக்குப் போக மறுப்பதேன் என்று தேடத் துவங்கியதின் விளைவே, இந்நாவலுக்குத்  தூண்டுகோல் என ஆசிரியர், தம் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். 

நாவல் முழுக்க ஆறு வயது தியாவின் ஆசைகள், அனுபவங்கள், மகிழ்ச்சிகள், துன்பங்கள், ஏமாற்றங்கள் ஆகிய அனைத்தும், அவள் கோணத்திலிருந்தே அழகாகச் சொல்லப்படுகின்றது.  பெற்றோர் தாம் குழந்தைகளின் முன்மாதிரி.  குழந்தைகளுக்குச் சொல்லும் அறிவுரையை, பெற்றோர் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பது இந்நாவலிலிருந்து பெரியவர்கள் பெற வேண்டிய படிப்பினை..

“அப்பா வீட்டில் இருந்தாலும், சிலர் வரும்போது, அப்பா வீட்டில் இல்லையென்று அம்மா பொய் சொல்கிறார்.  பொய் சொன்னால், கடவுள் தண்டிப்பார் என்று அம்மா தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.  அம்மா பொய் சொன்னால், கடவுள் தண்டிக்கமாட்டாரா?  குழந்தைகள் பொய் சொன்னால் மட்டும் தான், கடவுள் தண்டிப்பாரா?” என்று தியாவின் மனவோட்டத்தைக் குழந்தையின் கண்ணோட்டத்தில் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.  

செலவில்லாத அரசுப்பள்ளிகள், தாய்மொழியில் உரையாடத் தடையில்லாச் சூழல்,. குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டு சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் என இத்தனை சிறப்புகள் இருந்தும்   தனியார் பள்ளிகளில் தாம், தரமான கல்வி கிடைக்கும் என்று நம்பி, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, சக்திக்கு மீறிக் கல்விக்கட்டணம் செலுத்தும் நடுத்தரக் குடும்பங்களின் நம்பிக்கையை, இந்த நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. 

தனியார் பள்ளிகளின் வகுப்புக்குள், தாய்மொழியில் பேசத் தடை; சந்தேகம் கேட்கத் தடை என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்!  இறுக்கமான சூழ்நிலை பள்ளியை ஒரு சிறையாக மாற்றி,  குழந்தைகளின் உற்சாகத்தையும், அறிவுத் தேடலையும் மழுங்கச் செய்வதால், இன்றைய கல்வி குழந்தைகளுக்குச் சுமையாக மட்டுமே இருக்கின்றது என்பதை நாவல் வாசிப்போர் மனதில் அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.  மொழிபெயர்ப்பாக இருந்தாலும், நம் தமிழ்க் கல்விச்சூழலுக்கும், கச்சிதமாகப் பொருந்துகிறது.

வகைமொழியாக்கம் – மலையாள சிறுவர் நாவல்
ஆசிரியர்(ஆசிரியர்) பி.வி.சுகுமாரன்
(தமிழில்) யூமா வாசுகி
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை  (+91-9444960935)
விலைரூ 100/-
தியா

Share this: