பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை-6

Siragu_Yaanai_pic

சிறகு முளைத்த யானை –  குழந்தைப் பாடல்கள்

கிருங்கை சேதுபதி

புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார்.  கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட இவர், சிறார் இலக்கியத்துக்கும், குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளார்.

இவரது ‘சிறகு முளைத்த யானை’ என்ற குழந்தைப்பாடல்கள் நூல், 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமியின் சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருதை’ வென்றது. 

இந்நூல் 9 பிரிவுகளாக அமைந்து, அதில் 44 சிறுவர் பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன.‘அம்மா போல’ என்ற முதல் பிரிவில், 5 பாடல்கள் உள்ளன. ‘அம்மா போல’ என்ற முதல் பாடலில், மலையைப் போல மெளனமாக இருக்கவும், மரத்தைப் போல உயரமாக வளரவும் விரும்பும் குழந்தை, அம்மா போல அனைவருக்கும் தொண்டு செய்ய விரும்புகிறது.

‘நாளை சொல்வேனே’ என்ற 2 வது பாடலில், விரல் வலிக்க வீட்டுப் பாடம் எழுதும் குழந்தை, மனதில் உதிக்கும் கவிதையை மறப்பதற்கு முன் எழுத, ஒரு தாள் கேட்கின்றது.

வீட்டுப் பாடம் எழுதியே

விரல் வலிக்கும் போதுநான்

பாட்டுப் புதிதாய்ப் பாடவே

பாடல் ஒன்றும் எழுதுவேன்”

‘ஆசை, ஆசை ஆசை’ என்ற 3 வது பாடல், ‘சின்னச் சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை’ என்ற திரையிசைப் பாடலை நினைவுபடுத்துகிறது.

“ஒரு சின்னப் பறவை

சிறகில் வண்ணம்

பூசிப்பார்க்க ஆசை

ஒரு சின்ன மழைத்துளி

உள்ளே புகுந்து

ஒளிந்துகொள்ள ஆசை………”

‘சன்னல் எனக்கு நல்ல தோழி’ என்ற பாடலில், சன்னலையும் தோழியாகப் பாவிக்கிறது குழந்தை மனம். ‘தென்றல் காற்றை மட்டும் உள்ளே விடு;கொசுவை வரவிடாதே” என்ற வரியில், மெல்லிய நகைச்சுவை இழையோடுகின்றது.

தென்றல் காற்று வந்தால் மட்டும்

உள்ளே விடு சன்னலே!

திரும்பத் திரும்பக் கெஞ்சும் கொசு

வரவிடாதே சன்னலே!”

‘எண்ணமும் வண்ணமும்’ என்ற 2 வது பிரிவில், 7 பாடல்கள் உள்ளன. ‘எண்ணும் எண்ணமும்’ என்ற எண்ணுப்பயிற்சிப் பாடலில், ஒன்று, இரண்டு என்ற எண்களைச் சிறுவர்கள் விளையாட்டாகப் பாடலின் மூலம் கற்கலாம்.

‘காலித்தீப்பெட்டியில் தங்கக்கட்டி’ என்ற பாடல், சிறுவர்கள் காலித் தீப்பெட்டியை வைத்து, ரயில் வண்டி இணைப்பதும், தொலைபேசி இணைப்பைக் கோர்ப்பதும், மாடிவீடும் கட்டுவதுமான விளையாட்டுகள் பற்றிச் சொல்கின்றது.

“குச்சி தீர்ந்த பெட்டிகளை

இணைத்து ரயில் செய்குவேன்!

தொய்வில்லாது நூலைக் கட்டித்

தொலைபேசி ஆக்குவேன்

மிச்சமாகும் பெட்டிகளால்

மாடிவீடும் கட்டுவேன்

மினுமினுப்புத் தாளைச் சுற்றித்

தங்கக்கட்டி ஆக்குவேன்”

3 வது பிரிவான ‘புதிதாய் ஒரு பூமி’யில், 5 பாடல்கள் உள்ளன.

“ஆறும் பேரும்” என்ற 2 வது பாடல், சிறுவர்கள் பாடுவதற்கேற்ற ஓசை நயம் கொண்ட பாடல்.  ‘ஆறில்லாவிட்டால், ஊர் ஏது?’ என்ற வினாவையும் தொடுத்து, நீரின் அருமையை உணர வைக்கின்றார் ஆசிரியர்.

ஆறு! ஆறு! ஆறு!

ஆறுக்கந்த பேரைத் தந்தது

யாரு? யாரு? யாரு?

“ஆறு! ஆறு! ஆறு!

ஆறுக்கந்த பேரைத் தந்தது

நீரு! நீரு! நீரு!

நீரு! நீரு! நீரு!

நீரில்லாத போதும் அதே

ஆறு! ஆறு! ஆறு!

ஆறு! ஆறு! ஆறு!

ஆறில்லாமல் ஏது இந்த

ஊரு?பேரு?கூறு!”

‘விடிந்த கனவுகள்’ என்ற 4 வது பிரிவில், 5 பாடல்கள் உள்ளன. இதில் முயற்சி செய்வதன் அவசியம், நேரத்தின் அருமை, கலாம் கனவு பற்றிச் சொன்ன கருத்து ஆகியவை குறித்த பாடல்கள் உள்ளன.

‘கேள்வியும் பதிலும்’ என்ற 5 வது பகுதியில், 6 வினா விடைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 2 வதாக இடம் பெற்றுள்ள ‘கொசு கூறிய பதில்’, சுற்றுப்புறத் தூய்மையைக் காப்பதன் அவசியத்தைச் சிறுவர்கள் மனதில் விதைக்கும்  பாடல்:-

“கொசுவே கொசுவே

காதில் வந்து

என்ன சொல்லுகிறாய்?

கொஞ்சம் உணவாய்க்

குருதி எடுக்க

இசைவு கேட்கிறேன்!

எடுப்பது குருதி

கொடுப்பது கிருமி

உன் செயல் சரிதானா?

வசிக்கிற நீரைச்

சாக்கடையாக்கினீர்

கிடைப்பது அதுதானே!”

இந்நூலில் 7 ஆம் பாகம், ‘அல்லியின் அதிசய உலகம்’; இதில் 3 பாடல்கள் உள்ளன.

‘அல்லியின் அதிசய உலகம்’ என்ற முதல் பாடல் சிறுவர்கள் பாடுவதற்கேற்றவாறு எளிய சொற்களும், இனிய ஓசையும், பாடுபொருளும் கொண்து:-

“………

குட்டிப் போடச் சின்ன மயில்

தோகை வேண்டுமா?

கொட்டிடாத தேளும், வண்டும்

காண வேண்டுமா?

பெட்டிக் குள்ளே சுருண்டிருக்கும்

பாம்பு வேண்டுமா?

பேசிடாமல் சிரிக்கும்

நல்ல பாப்பா வேண்டுமா?”

இரண்டாவது ‘செல்போன்களின் மெளனவிரதம்’ பாடலில், உலகிலுள்ள செல்போன்கள் எல்லாம் சேர்ந்து, ஒரு நாள் மெளனவிரதம் இருக்கின்றன. செல்போன் மெளனவிரதம் இருந்தால் என்ன நடக்கும் என்று  வித்தியாசமான கற்பனை செய்து, வரிசையாய்ப் பட்டியலிடும் கவிஞர், மெல்லிய நகைச்சுவை இழையோட இப்படி முடிக்கிறார்:-

“……….

இருப்புத் தொகை, ‘பாட்டரி சார்ஜ்’

தீரவுமில்லை!

இதனால் ஒன்றும் சுழலும் பூமி

நிற்கவே யில்லை!”

இந்நூலின் 8 வது பாகத்தில், இந்நூலின் தலைப்பான, ‘சிறகு முளைத்த யானை’ பாடல் இடம் பெற்றுள்ளது.

“ஒருநாள் இரவில்

சிறகு முளைத்த

யானை வந்தது – மேகம்

ஊர்வல மாகப்

போகும் வானில்

பறந்து வந்தது

“வருவாய்” என்றே

என்னைத் தூக்கி

வைத்துக் கொண்ட்து – வானில்

வட்டம் போட்டுச்

சுற்றிக் காட்டி

இன்பம் தந்தது!

………………”

குழந்தைகள் விரும்பும் பல தலைப்புகளில் அமைந்த இப்பாடல்களில் கற்பனை வளமும், இனிய ஓசையும் நிரம்பியுள்ளன; சிறுவர்க்கு நன்கு தெரிந்த எளிய சொற்களும், அவர்களுக்கேற்ற பாடுபொருளும் தேர்வு செய்யப்பட்டுள்ளமை சிறப்பு.

வெளியீடு:-

பழனியப்பா பிரதர்ஸ், ‘கோனார் மாளிகை’,

25 பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை,

சென்னை – 600014.

044-28132863 / 43408000.

Share this: