‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ வென்ற நூல் வரிசை-2

Ammavukku_makal

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’

ஆசிரியர் மு.முருகேஷ்

வெளியீடு: அகநி, அம்மையப்பட்டு,வந்தவாசி. (செல் 98426 37637/94443 60421)

விலை ரூ 120/-.

16 சிறுவர் கதைகள் கொண்ட இந்நூலுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்தது. எழுத்தாளர் மு.முருகேஷ் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்டவர். புதுக்கோட்டையில் பிறந்த இவர், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார்.

இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார். இவரது ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ ‘தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்’ ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்’ ‘நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை’ ஆகியவை, விருது பெற்ற சிறுவர் நூல்கள். 

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் கதை’ என்ற இந்நூலில், மொத்தம் 16 கதைகள் உள்ளன.  முதலில் இடம்பெற்றுள்ள ‘அழகிரிசாமியும் ஜீபூம்பா மரமும்’ கதையில் அழகிரிசாமி மகா கஞ்சனாகவும் உழைக்காமல் மற்றவர்களிடம் இரந்து பெற்றுச் சாப்பிடுபவனாகவும் இருக்கின்றான்.  சிறிய சாப்பாட்டுக்கடை வைத்திருந்த பாட்டியிடம் தன்னிடம் காசில்லை என்று பொய் சொல்லிச் சாப்பிடுகிறான். “திரும்பி வரும் போது காசு கொடு” என்று சொல்லிப் பாட்டியும் அவனுக்குச் சாப்பாடு போடுகின்றாள்.  உண்டபிறகு ஜீபூம்பா மனதில் நினைப்பதை உடனே நிறைவேற்றி தரும் அதிசய மரத்தின் அடியில் படுத்து உறங்குகிறான். பொய் சொல்லி அடுத்தவர்களிடம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மகா கஞ்சனுக்குப் புத்தி புகட்டுவதாய் கதையின் முடிவு இருக்கின்றது.

‘விருந்துக்கு அழைத்த நண்பர்கள்’ – ஒரு குளத்தில் இருந்த தவளையும் நண்டும் நண்பர்கள். அதில் இருந்த கெண்டை மீனைப் பிடித்து உண்ண இரண்டுக்கும் ஆசை.  நயவஞ்சகமாகக் கெண்டை மீனை விருந்துக்கு அழைத்து அதை உணவாக்கிக் கொள்ள இரண்டும் திட்டமிடுகின்றன.  அவற்றின் சத்திட்டத்தைக் கெண்டை மீன் எப்படி முறியடிக்கிறது என்பது தான் கதை.

பல்லு தேய்க்காத பலசாலி – மகா சோம்பேறியான சிங்க ராஜா பற்றி அதன் பெற்றோர் முனிவரிடம் சொல்கின்றன. அவர் தினமும் சிங்கம் பல் தேய்த்தால், அதன் பலம் என்றைக்கும் குறையாதென்று சொல்கிறார். தினமும் யாராவது வந்து தனக்குப் பல் தேய்த்து விடவேண்டுமென்று  சிங்கம் அறிவிப்புச் செய்கிறது. முதல் நாள் பல்லைத் தேய்த்து விடக் செல்லும் குட்டி முயல் சிங்கத்துக்குப் புத்தி புகட்டுகின்றது.

பழைய பாட்டியும் புதிய வடையும்

பாட்டி வடை சுட்டு விற்கிறாள். காகம் வருகின்றது. “இந்தா சாப்பிடு” என்று ஒரு வடையைக் கொடுக்கிறாள்.  வேலை எதுவும் செய்யாமல் இலவசமாக வாங்கித் தின்னக் காகம் மறுக்கிறது.  அடுப்பெரிக்கப் பாட்டிக்குக் காகம் சுள்ளி கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் பாட்டி கொடுத்த இரண்டு வடையை காகமும், குரங்கும் பகிர்ந்து தின்கின்றன. கதையில் நரியும் உண்டு.  ஆனால் அது காகத்தை ஏமாற்றிப் பறிக்கவில்லை. அதுவும் பாட்டிக்குக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொடுத்துவிட்டு வடை வாங்கித் தின்கிறது.

இந்தப் புதுக்கதையில் வருகின்ற எல்லா விலங்குகளும் யாரையும் ஏமாற்றிப் பறித்துத் தின்னவில்லை. இலவசமாகக் கிடைப்பதையும் ஏற்கவில்லை. உழைத்து விட்டு அதற்குக் கூலியாக வடைகளைப் பெற்று அவற்றை மற்றவற்றுடன் பகிர்ந்து உண்கின்றன. இக்காலச் சிறுவர்க்கு உழைப்பின் மேன்மையையும், பகிர்ந்து உண்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாகப் பழைய காக்கா கதையைச் சிறப்பாக மாற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.

பசியெடுக்காத வெள்ளரி

ஏரிப் பக்கத்தில் இருந்த தோட்ட்த்தில் பயிரிடப்பட்டிருந்த வெள்ளரியைத் தின்பதற்கு ஒட்டகத்தின் உதவியை நாடுகின்றது நரி.  ஏரியைக் கடந்து செல்ல ஒட்டகமும் உதவுகின்றது.  வயிறு முட்ட தின்று முடித்தவுடன் மகிழ்ச்சியுடன் ஊளையிட்டுத் தோட்டக்காரனை வரவழைத்து விடுகின்றது நரி.  அவன் உருட்டுக்கட்டையால் அடித்த அடியில் ஒட்டகத்தின் இடது பின்னங்காலில் அடிபட்டுவிட்டது.  திரும்பி ஏரியில் வரும் வழியில் நரியைப் பழி வாங்கித் தன் கோபத்தை ஒட்டகம் தீர்த்துக் கொள்கிறது.

அன்புள்ள அப்பாவுக்கு

சிகரெட் குடிக்கும் அப்பாவைத் தன் அன்பினாலும் சமயோதிய புத்தியாலும் திருத்துகிறாள் மகள்.

சொட்டுச் சொட்டாய் உயிர்த்துளி

மழையின்றியும் நீரின்றியும் ஒரு நிலை ஏற்பட்டால் இவ்வுலகம் எப்படியிருக்கும்? தண்ணீரைச் சேமிக்க வேண்டிய அவசியத்தையும் ஏரி கூளங்களைத் தூர்த்து கான்கிரீட் காடுகளாக மாற்றிய அவலத்தையும் இக்கதை குழந்தைகள் மனதில் படுமாறு சொல்கின்றது.

நான்கு பங்குத் திருடர்கள்

திருட்டில் களவாடிய பொருள் அனைத்தும் தனக்கே வேண்டும் என்ற பேராசையில், நான்கு திருடர்கள் ஒருவரை ஒருவர் ஒழித்துக்கட்டும் கதை.

கட்டைவிரலின் கதை

வேட்டுவ குலத்தில் பிறந்த்தைக்  காரணம் காட்டி வில்வித்தை கற்றுத் தர மறுத்த துரோணாச்சாரியார் அநியாயமாக குருதட்சிணையாக ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்ட கதை. இதில் ஏகலைவனின் கட்டை விரல் தன் கதையைச் சொல்கிறது.

குதிரை வியாபாரி குப்புசாமி

யார் எதைச் சொன்னாலும் அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு நடந்த குப்புசாமியின் கதை. முடிவில் அவனுக்குப் புத்தி வருகின்றது.

இசக்கிமுத்துவின் ஆசை

மலைக்கிராமத்தில் வசிக்கும் 9 வயது இசக்கிமுத்துவுக்குப் பள்ளிக்குச் செல்லவும் புத்தகம் படிக்கவும் ஆசை.  ஆனால் அவனுக்கு ஏற்படும் பரிதாப முடிவு மனதைக் கலங்க வைக்கின்றது. 

பள்ளி செல்லவும் புத்தகம் படிக்கவும் விரும்பும் ஒரு மலைக்கிராமத்துக் குழந்தையின் நியாயமான ஆசையை நிறைவேற்றி வைப்பது போல் முடிவு நேர்நிலையாக இல்லாமல், எதிர்மறையாக அமைந்துள்ளது.  வாசிக்கும் பெரியவர்களுக்கே மனம் பாதிக்கின்றது என்றால், குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்? மலைக்கிராமத்து மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இது, குழந்தைகளுக்கான கதையன்று. இதை இத்தொகுப்பில் சேர்க்காமல் இருந்திருக்கலாம்.

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

இரண்டாம் வகுப்பு படிக்கும் கவின்குட்டிக்கு அவள் அம்மா தூங்கத் தினமும் கதை சொல்ல வேண்டும். தமக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் சொல்லி முடித்தபிறகு, மகளின் நச்சரிப்பு தாங்காமல் “நீ அம்மாவுக்கு ஒரு கதை சொல்லக்கூடாதா?” என்று கேட்கிறார் அம்மா.

கவின் அம்மாவுக்குக் கதை சொல்கிறாள். முயலும் ஆமையும் கதை. இது அம்மா சொன்ன பழைய ஓட்டப்பந்தயக் கதையில்லை. இரண்டுக்கும் ஒரு முட்டைக்கோஸ் கிடைக்கின்றது.  தான் மட்டுமே தின்ன நினைக்கிறது முயல். போட்டி வைத்து வெற்றிபெறுபவர் முழுசையும் தின்னலாம் என்று முடிவு செய்கின்றன.

யார் முதலில் அவர்கள் இருக்கும் வீட்டைத் தொட்டு வருகிறார்களோ அவர்களுக்கே இந்தக் கோஸ் என்கிறது ஆமை. முயல் வேகவேகமாக ஓடிப் போய்த் தொட்டுவிட்டு வரும் போது ஆமை கோஸைத் தின்று கொண்டிருக்கிறது முயலுக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்படுகின்றது. சமயோசித புத்தி கொண்ட ஆமை சொன்ன பதிலைக் கேட்டு முயலுக்கு ஏமாற்றம்.  ஆனால் வருத்தத்துடன் திரும்பும் முயலுக்குப் பாதி கோஸைக் கொடுத்துத் தின்னச் சொல்கிறது ஆமை. 

“அவரவர் சக்திக்கு அவரவர் செயலே பலமானது தன. நம்மால் சில வேலைகளைச் செய்ய முடியும் என்பதால்,அதைச் செய்ய முடியாதவர்களைப் பலமற்றவர்களாகப் பார்க்க கூடாது.  வீணாக அவர்களைப் போட்டிக்கு அழைத்து சிறுமைப்படுத்த நினைப்பதும் தவறு” என்று ஆமை முயலுக்குப் புத்தி புகட்டுகிறது.  முயல் தன் தவறை உணர்ந்து ஆமையை நட்போடு அணைத்துக் கொண்டது.

காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

காட்டுக்குள் பாட்டுப்போட்டி நடக்கிறது.  வழக்கமாகக் குயில் வெல்லும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, வேறொரு பறவை போட்டியில் வெல்கிறது. இது புதுமை.

யாழினி தந்த பரிசு

யாழினி படித்த பள்ளியில் புத்தகக்காட்சி நடக்கிறது.  அவளுக்குப் புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அரசு நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்கள் எடுத்து வாசிப்பாள்.  அவள் அம்மா வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார்.

20 ரூபாய் விலையுள்ள புத்தகம் யாழினிக்குப் பிடித்திருந்தது ஆனால் அவள் அம்மாவிடம் பத்து ரூபாய் மட்டுமே இருந்தது.  யாழினி தான்  தீனி தின்னாமல் சேர்த்து வைத்திருந்த 20 ரூபாயை எடுத்து அப்புத்தகத்தை வாங்கி அவள் அம்மாவுக்குப் பரிசு கொடுக்கிறாள். சிறுவர்க்குப் புத்தக வாசிப்பின் அவசியத்தை ஊக்குவிக்கும் கதை இது.

பசி அடங்காக் குருவிக்குஞ்சு

குருவிக்குஞ்சுக்கு அடக்க முடியாப் பசி. கோவிலில் அண்டாவோடு சேர்த்து பொங்கலை விழுங்கியது. ஒரு குளத்து நீரையும், நீர் மொள்ள வந்த  அக்காவையும் குடத்தோடு முழுங்கியது.  வேப்பமரத்தில் விளையாடிய குரங்குகளோடு சேர்த்து மரத்தையும் விழுங்கிவிட்டது.  கொல்லனோடு சண்டை போட்டு அவன் பட்டறையை விழுங்கியது அப்பட்டறையில் இருந்த அரிவாள் குருவியின் வயிற்றைக் கிழிக்க, உள்ளே சென்ற எல்லாம் வெளியில் வந்தன. நாட்டுப்புறக் கதையின் தாக்கத்தில் எழுதப்பட்ட கதையிது.

சிங்கத்தைப் பயமுறுத்திய அலமேலு

அலமேலு என்பது ஒரு ஆடு. அதன் இரு குட்டிகள் ஒரு நாள் சிங்கத்தைப் பார்க்க விரும்பி காட்டுக்குச் சென்றுவிட்டன.  தன் சமயோசித அறிவால் அலமேலு சிங்கத்திடமிருந்தும், நரியிடமிருந்தும் தன் குட்டிகளை எப்படிக் காப்பாற்றியது என்பது இக்கதை.

இத்தொகுப்பில் வலிமையற்ற, பலமற்ற உயிர்கள் வலிமையான தந்திரம் மிகுந்த உயிர்களை எதிர்த்து வெல்வது போன்று பல கதைகள் அமைந்துள்ளன. விருந்துக்கு அழைத்த நண்பர்கள் கதையில் கெண்டை மீன், நயவஞ்சகம் நிறைந்த நண்டையும் தவளையையும் வெல்கிறது.  அலமேலு என்கிற ஆடு, சிங்கத்திடமிருந்தும் நரியிடமிருந்தும் தன் குட்டிகளைப் பத்திரமாக மீட்கின்றது. சிங்கத்தின் வாயை வேப்பங்குச்சிகளைக் கொண்டு பல் விளக்குவதாகச் சொல்லி புண்ணாக்கி விடுகின்றது குட்டிமுயல். 

இக்காலக் குழந்தைகளுக்கேற்ற மாதிரி, பழைய கதைகள் புதிய சிந்தனைகளுடன் உருமாற்றம் பெற்றுள்ளன. இக்கதைகளுக்குத் தேவ கோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஓவியம் வரைந்து சிறப்பித்துள்ளார்கள். மொத்தத்தில் சிறப்பான சிறுவர் சிறுகதைத் தொகுப்பு.

Share this: